Monday 27 May 2019

சைக்கிள் எனும் காதல் வாகனம்

 அத காதல் வாகனம்னும் சொல்லலாம். கனவு வாகனம்னும் சொல்லலாம். அதில ஏறி ஊர சுத்துறதே தனி சுகம். வீட்டுக்கு ஒண்ணு இருக்கிறதே அதிசயம். கொஞ்சம் வசதியான வீடுங்கள்ல ரெண்டு கூட இருக்கும். சைக்கிள் தாங்க அது.



மொத மொத அத ஓட்டிப் பழகிறதே பெரிய சாதன. சைக்கிள் கடைங்கள்ல குட்டி சைக்கிள், கொஞ்சம் பெரிசு, அத விட பெரிசுன்னு ரக வாரியா வாடகைக்கு கிடைக்கும் அப்பல்லாம்.. ஊருக்கு ரெண்டு மூணு சைக்கிள் கடைங்க இருக்கும். ஆனாலும் லீவு நாட்கள்ல சைக்கிள் கிடைக்காது. ஒரு மணி நேரத்துக்கு வாடகை 50 பைசா.


ஊரு பெரிய கோவில் ரத வீதிங்களும்… வியாழக்கிழமை சந்த நடக்கிற கிரவுண்டும் தான் சைக்கிள் பழகும் இடம். ரெண்டாப்பு படிக்கும்போது பழைய சைக்கிள் ஒண்ண எங்க வீட்டுக்கு வாங்கினப்ப ரொம்ப பெரிசா தெரிஞ்சிச்சி. குட்டி சைக்கிள வாடகைக்கு எடுத்து பழகி இருந்ததால, கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் பழக ஆரம்பிச்சேன். சைக்கிள் சீட்டுக்கும் முன்பக்க ஹேண்ட் பாருக்கும் நடுவில இருக்கிற கம்பிக்கு கீழ தொங்கிக்கிட்டே மிதிக்கிறது தான் கொரங்கு பெடல். 


அப்புறம், கொஞ்சம் வளந்ததும் பெடலுக்கு கால் எட்டாட்டாலும் சீட்டில உக்காராமலே அசைஞ்சி அசைஞ்சி மிதிக்கிறதே தனி சாதனையா நினைச்ச காலம். அப்புறம் டபுள்ஸ் வச்சி சைக்கிள் மிதிக்க படிக்கிறது தனிக் கத. நானெல்லாம் எங்க அண்ணன பின்னால உக்கார வச்சி ஓடைக்குள்ள குப்புறத் தள்ளி டபுள்ஸ் ஓட்ட படிச்சேன்.


குட்டி சைக்கிள்ல இருந்து படிப்படியா வளந்த முன்னேற்றம் இது. ரோட்டுல இறக்கத்தில வண்டிய ஓட்டி, வௌங்காட்டுக்கு போயிட்ட வந்த ஒரு தாத்தா மேல சைக்கிள மோதிட்டு பயந்து நடுங்கின அனுபவமும் உண்டு.

அதுக்கு பிறவு, நான் ஐஸ்கூல் போன சமயத்தில குலுக்கல் சீட்டுல புது சைக்கிள் வாங்கினோம். வாரம் 50 ரூபா கட்டணும். அந்த சைக்கிள ஓட்டுறதில அண்ணன் கூட பெரிய போட்டியே நடக்கும்.


சாயந்திர நேரம் சைக்கிள எடுத்திட்டு காசியாபுரத்திலேருந்து ஆலங்குளம் வரைக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வாறதும் வைகாசி பொறந்தாச்சி பிரசாந்த் மாதிரி யாரையாவது வம்பிழுத்து சைட் அடிச்சதும் தனிக் கதை.


ஆடியோ கேசட்டில இருக்கிற ஒலி நாடாவ ஒரே அளவா துண்டு துண்டா கட் பண்ணி, சைக்கிள் ஹேண்ட் பாரில் ரெண்டு பக்கமும் இருக்கிற கைப்பிடியில ஒட்ட வச்சி சில பேரு சைக்கிள ஓட்டுவாங்க. ராசுக்குட்டி படத்தில பாக்யராஜ்  புல்லட்டில ஒட்டி வச்சிருப்பாரே அத மாதிரி. அந்த புல்லட் அலங்காரம் மாதிரியே சைக்கிளிலும் விதம் விதமா அலங்கரிச்சி சுத்துறது தனி பேஷன். அதுவும் சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல் நாட்கள்ல சைக்கிளையும் அலங்காரம் பண்ணி அதே அளவுக்கு அலங்காரத்தோட புது டிரஸ் போட்டு சுத்துற சுகமே தனி.


இளசுங்களோட சைக்கிள் கத இதுன்னா… பொடிசுங்களோட கத வேற லெவல். சைக்கிள் வீலுங்கள்ல இருக்கிற போக்ஸ் கம்பியில படுற மாதிரியே பலுன ஊதி கட்டி விட்டு, அது போடுற வித்தியாசமான சத்தத்தை ரசிச்சிகிட்டே சைக்கிள ஓட்டுவாங்க. இத மாதிரி சைக்கிள்ல நிறைய வித்தைங்கள காட்டுவாங்க.


அப்புறம் டைனமோ வச்ச சைக்கிள் வச்சிருந்தா அது தனி கெத்து. பின் வீல் டயரில் உரசிற மாதிரி, சின்ன எண்ணெய் பாட்டில் சைசில ஒரு டைனமோ இருக்கும். டயர் சுத்துற வேகத்துக்கு ஏத்த மாதிரி அதிலேருந்து கரண்டு உருவாகும். அந்த கரண்டினால சின்ன ஒயர் மூலமா முன்பக்கம் இணைச்சிருக்கும் டைனமோ லைட் எரியும். பைக் ஹெட் லைட் மாதிரி இது. இந்த லைட் இல்லாட்டா, நைட் நேரத்தில போலீஸ் பிடிச்சிக்கும். தாலாட்டு கேட்குதம்மா படத்தில பிரபும், கவுண்டமணியும் சைக்கிள்ல போவாங்களே அந்த சீன் மாதிரி நடக்கும். காலேஜ் பஸ்ட் இயர் படிச்சப்ப எனக்கும் அந்த அனுபவம் உண்டு.


இப்பிடி நிறைய பேரோட அனுபவங்கள தனக்குள்ள புதைச்சி வச்சி சுத்திகிட்டு இருக்கிற சைக்கிள், இப்பலாம் எக்சர்சைஸ் இன்ஸ்ட்ரூமென்டா போச்சி. பாண்டிச்சேரியில இருக்கிற வரைக்கும் காலங்காத்தால சைக்கிள எடுத்துகிட்டு சில கிலோ மீட்டர் ஓட்டுறது வழக்கமா இருந்திச்சி. இப்போ... ஹும்..


நெல்லை ரவீந்திரன்

Monday 20 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -25

இந்தியாவின் இரண்டாவது காங்கிரஸ் அல்லாத ஆட்சிக்கான முயற்சியும் இரண்டே ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தாலும், 40 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆதிக்கத்தின் முடிவுரை துவங்கி வைக்கப்பட்டது. பிரதமர் சந்திரசேகர் அரசு கவிழ்ந்து 1991ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் காஷ்மீர், பஞ்சாபில் 19 தொகுதிகள் தவிர்த்து நாடு முழுவதும் 534 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவித்தார்கள். 

திமுக ஆட்சி கலைக்கப் பட்டதால், தமிழக சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடந்தது. ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எம்ஜிஆரின் கூட்டணி பார்முலாப்படி, சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவுக்கு மூன்றில் இரண்டு பங்கு, நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு என ஒதுக்கப்பட்டது. இதனால், 11 மக்களவை தொகுதிகளில் மட்டும் அதிமுக களமிறங்கியது. 

இதுதவிர, பாஜக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கின. அத்வானியின் ரத யாத்திரையை தொடர்ந்து ராமர் கோவிலை தேர்தல் கோஷத்தில் முன் வைத்தது பாஜக. 1980 தேர்தல் போலவே, காங்கிரஸ் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்ற கோஷத்தை எழுப்பியது. 1991 மே 20ம் தேதியன்று 211 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. 

இந்த நிலையில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தமிழகத்தில் மே 21ம் தேதியன்று தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் என உயிரிழந்தது, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கலவரம் வெடித்தது. திமுகவுக்கு எதிராக வன்முறை தலைவிரித்து ஆடியது. வெளி மாநிலங்களில் தமிழர்களை விரோதமாக பார்க்க, மீதமுள்ள இரண்டு கட்ட வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.





ஒத்தி வைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு ஜூன் மாதத்தில் தேர்தல் நடந்தது. தமிழகத்திலும் 1991 ஜூன் மாதத்தில் தான் இரண்டு தேர்தல்களும் நடைபெற்றன. ராஜீவ் கொலையால் நாடே உறைந்திருந்ததால் வாக்குச் சாவடிக்கு வர மக்கள் அச்சப்பட்டனர். இதனால், அதுவரை இல்லாத அளவில் 53% வாக்குகளே பதிவாகின. தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக வெளியாகின.

(நினைவுகள் சுழலும்)

= நெல்லை ரவீந்திரன்

Friday 17 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -24

1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு முதன்முறையாக அமைந்த சிறுபான்மை அரசு, நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே நாட்களை கடத்தியது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை விபி சிங் அறிமுகம் செய்தபோது, ஆட்சி நாற்காலியின் முதலாவது கால் ஆடத் தொடங்கியது. உயர் வகுப்பினர் அதிகமாக இருக்கும் வட மாநிலங்களில் மாணவர்களின் போராட்டம் அதிகரித்தது.



மற்றொருபுறம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் ரத யாத்திரையை ஆரம்பித்தார், பாஜக தலைவர் அத்வானி. இதற்கிடையே, ஜனதா தளத்துக்குள்ளேயே தலைவர்களிடையே வேறுபாடு ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில், பீகாருக்குள் ரத யாத்திரையை நுழைய விடாமல், அத்வானியை கைது செய்தார், அம்மாநில முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ். சமஸ்திபூரில் 1990 அக்டோப் 23ம் தேதி நடந்த இந்த கைதைத் தொடர்ந்து, விபி சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது, பாஜக. 


இதனால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலைமைக்கு ஆளானது, விபிசிங் அரசு. பதவியேற்ற ஓராண்டுக்குள் நவம்பர் 7ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சியை பறி கொடுத்தது, இந்தியாவின் முதலாவது சிறுபான்மை கூட்டணி அரசு. ஏற்கனவே உரசிக் கொண்டிருந்த சந்திரசேகர், 64 எம்பிக்களுடன் ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி சமாஜ்வாடி ஜனதா என்ற கட்சியை தொடங்கினார்.

இவரது கட்சி ஆட்சியமைக்க, வெளியில் இருந்து ஆதரவு அளித்தது, ராஜீவின் காங்கிரஸ் கட்சி. தேவிலால் துணை பிரதமராகவே நீடித்தார். 1979ல் சரண்சிங் பிரதமரானது போலவே, பத்து ஆண்டுகள் கழித்து அதே காட்சிகள் அரங்கேறின. கதாபாத்திரங்கள் மட்டும் மாற்றம். அன்று இந்திரா, இப்போது அவது மகன் ராஜீவ். அப்போது சரண்சிங் இப்போது அவரது சீடர் சந்திரசேகர். அப்போது மொரார்ஜி பதவியிழந்து அரசியல் ஓய்வு பெற்றார். இப்போது அந்த இடத்தில் விபி சிங்.



சரண்சிங் அரசு போலவே ஆறே மாதத்தில் சந்திரசேகர் அரசும் ஆறே மாதத்தில் கவிழ்ந்தது. ராஜீவை உளவு பார்த்ததாக கூறி ஆதரவை வாபஸ் பெற்றது, காங்கிரஸ். இதனால், 1991 மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார், சநதிரசேகர். ஒன்றரை ஆண்டுகளிலேயே அடுத்த பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. 1991 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. 'காங்கிரசால் மட்டுமே ஐந்தாண்டு நிலையான ஆட்சியை தர முடியும்' என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது.

இதற்கிடையே பதவியில் இருந்த ஆறு மாதத்துக்குள் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைத்திருந்தது, சந்திரசேகர் அரசு. ஜெயலலிதா கோரிக்கையை ராஜீவின் பரிந்துரையின் பேரில் சந்திரசேகர் நிறைவேற்ற, அதற்கு ஒப்புதல் அளித்தார், அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன். இதனால் 1991 நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. தமிழக தேர்தல் களத்தில் நடந்த அந்த பயங்கரம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Wednesday 15 May 2019

நாடாளுமன்ற தேர்தல் 23

ராஜீவ் காந்திக்கு எதிராக தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ஜனதா தளம் தலைமையில் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி சந்தித்த நாடாளுமன்ற தேர்தல், 1989 நவம்பரில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ராஜீவின் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தது. 1984 தேர்தலில் 400க்கு மேல் வென்ற காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 195 இடங்களே கிடைத்தது. தனது சொந்த செல்வாக்கில் சந்தித்த ஒரே தேர்தலில், ராஜீவ் தோல்வியடைந்தார் என்ற வரலாறை, இந்திய தேர்தல் களம் தனதாக்கிக் கொண்டது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை பெற்ற கட்சி காங்கிரஸ்தான். தமிழகம், ஆந்திரா என தென் மாநிலங்கள், வழக்கம்போல காங்கிரசுக்கு கை கொடுத்திருந்தன. ஆனால்,  ஆட்சியமைக்க 272 பேர் தேவை.

மறுபுறம் ராஜீவுக்கு எதிராக அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதாதளம் 142 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக வென்றது. அந்த கூட்டணியின் முக்கிய பங்காளியான தெலுங்கு தேசம் 2 இடத்தில்தான் வென்றது. திமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் திமுக இருந்த போதிலும், 1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, ஜெயலலிதா தலைமையில் ஒன்று சேர்ந்த அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி, புதுச்சேரியையும் சேர்த்து 39 இடங்களில் வென்றது. திமுக அணியில் நாகை தொகுதியில் வலது கம்யூனிஸ்ட் மட்டும் வென்றது.

கடந்த தேர்தலில் 2 இடங்களை பெற்றிருந்த பாஜக, இந்த தேர்தலில் 89 இடங்களை பிடித்தது. இது தவிர மார்க்சிஸ்ட் 34 உட்பட இடதுசாரி கட்சிகளும் கணிசமான இடங்களை பிடித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேசிய முன்னணி கூட்டணியின் தலைவரான விபி சிங்கை பிரதமராக தேர்வு செய்தன. தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அமைத்தது. சுதந்திர இந்தியாவில் முதலாவது சிறுபான்மை அரசு இதுதான். பல கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்த அரசும் இதுதான்.



150க்கு சற்று அதிகமான எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்த  விபி சிங் அரசுக்கு பாஜகவும் இடதுசாரி கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்தபடி ஆதரவை அளித்தன. அந்த வகையில் பாஜக மற்றும் கம்யூனிஸ்டுகளை ஒரே புள்ளியில் இணைத்த ஒரே அரசும் விபி சிங் அரசுதான். தேசிய முன்னணியில் இருந்த எல்லா கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி அளித்தார், விபி சிங். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க துணை பிரதமர் பதவி, ஜனதா தளம் தலைவர்களில் ஒருவரான தேவிலாலுக்கு கொடுக்கப்பட்டது.



ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் மாநிலங்களவை திமுக உறுப்பினராக இருந்த முரசொலி மாறனுக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கினார். அவர்தான் திமுக சார்பாக பதவியேற்ற முதலாவது மத்திய அமைச்சர். 1977ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றதை இங்கே நினைவில் கொள்ளலாம். 

இப்படியாக பாஜக, இடதுசாரி ஆதரவோடு 1989 டிசம்பர் 2ம் தேதி பதவியேற்ற விபி சிங் அரசு, அடுத்த ஓராண்டு கூட முழுமையாக நிலைக்கவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அடுத்த பொதுத் தேர்தலை நாடு சந்தித்தது. அதற்குள் பல அரசியல் அதிர்ச்சிகளும் குழப்பங்களும்...

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Monday 13 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -22

1984 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 3 ஆண்டுகளில் எம்ஜிஆர் மறைந்தார். இப்போது போலவே, அதிமுக பிளவுபட்டதோடு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு பின்னர் கட்சி ஒன்று சேர்ந்து சின்னமும் மீட்கப்பட்டது. இப்போது போலவே அப்போதும் இந்த முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்தது, அன்றைய மத்திய அரசு. அதாவது ராஜீவ் தலைமையிலான மத்திய அரசு. இப்படியாக 1984 முதல் 1989 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் கட்சி ஒன்று சேர்ந்தது.


 (இந்த விபரங்களை எனது தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு பதிவில் பார்க்கலாம் http://thileeban81.blogspot.com/2016/04/?m=1)


அதிமுக அணிகள் இணைப்புக்கு முன்னதாக 1989 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் இல்லாமலேயே நடந்த தமிழக தேர்தலில் திமுக வென்று, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல்வரானார், கருணாநிதி.


அதே நேரத்தில், 1984 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஜீவ்காந்தி அரசின் மீது,  போபார்ஸ் ராணுவ பீரங்கி ஊழல் புகார் எழுந்தபோது அந்த ஆட்சியின் முடிவுரை வரையப்பட்டு, இந்தியாவின் முதலாவது பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி முறைக்கு முகவுரை எழுதப்பட்டது. ராஜீவ் அமைச்சரவையில் நிதி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த விபி சிங் எழுப்பிய இந்த புகாரால் பதவி பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பிரச்சார பீரங்கியாக போபார்ஸ் பேர ஊழல் மாறியது.



நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை அவையிலேயே கிழித்து எறிந்து ஆவேசமாக பேசினார், காங்கிரஸ் கூட்டணியான அதிமுகவை சேர்ந்த எம்பி ஆலடி அருணா. பாஜக, இடதுசாரிகள், திமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிசத் என ஏராளமான கட்சிகளும் ராஜீவுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஒன்று திரண்டன. இதற்கிடையே, இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதாக கூறி, ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம், அங்குள்ள தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் பகைத்ததால் எழுந்த கோபமும் அவர் மீது சேர்ந்தது.

ராஜீவுக்கு மாமா உறவு முறை கொண்டவரான அன்றைய பிரபல தலைவர்களில் ஒருவரான அருண் நேருவும் அவருக்கு எதிராக இருந்தார்.

இப்படியான சூழலில் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட விபி சிங், அருண் நேருவுடன் சேர்ந்து 'ஜன மோர்ச்சா' என்ற கட்சியை தொடங்கினார். பிறகு ஜனதாதளம் கட்சியுடன் இணைந்தார். மறுபுறம், ராஜீவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கினார், தெலுங்கு தேசம் தலைவர் ராமாராவ். அந்த முயற்சியின் விளைவாக தோன்றியது தேசிய முன்னணி என்ற பல கட்சி கூட்டணி.



திமுக, தெலுங்கு தேசம், அசாம் கணபரிசத், ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் என பல கட்சிகள் அமைத்த தேசிய முன்னணி கூட்டணியின் தலைவராக, விபி சிங் தேர்வானார். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ராமாராவ். போபர்ஸ் என்ற ஒற்றைச் சொல்லே ராஜீவுக்கு எதிராக இந்திய அளவில் கட்சிகள் ஒன்று திரள வழி வகுத்தது. 1989 தேர்தலில் ராஜீவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அஜென்டாவுடன் தயாரானது, தேசிய முன்னணி கூட்டணி. அவர்கள் எதிர்பார்த்தபடியே 1989 நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. அதன் முடிவுகள் இரு தரப்புக்குமே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தன.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை ரவீந்திரன்

Sunday 5 May 2019

நாடாளுமன்ற தேர்தல் -21

 இந்திரா காந்தி கொல்லப்பட்டு சரியாக 60 நாட்களுக்குள் 1984 டிசம்பர் இறுதி வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நடந்த அந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 404 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு இரண்டு மாநில தொகுதிகளில் 10ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இந்திரா காந்தியின் அனுதாப அலையில் மற்ற கட்சிகள் காணாமல் போயின.

ஜனசங்கத்தில் இருந்து மாறிய பிறகு, பாஜக போட்டியிட்ட அந்த முதல் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற தேசிய கட்சிகளின் நிலையும் அப்படியே. ஆனால், இந்திரா காந்தி அனுதாப அலையிலும் கூட,  ஆந்திராவில் என்டி ராமாராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களை வென்று, அகில இந்திய அளவில் 2ம் இடத்தை பிடித்தது. 



சுதந்திர இந்தியாவில் மாநில கட்சி ஒன்று இரண்டாம் இடத்தை பிடித்தது அதுவே முதன்முறை. தற்போதைய மக்களவையில் அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 39 என நான்காவது, மூன்றாவது பெரிய கட்சிகளாக இருப்பதை இங்கே குறிப்பிடுவது அவசியம். இதற்கு என்டிஆர் தான் முன் உதாரணம்.


இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அந்த அனுதாப அலையும் சேர்ந்தது. 'எம்ஜிஆர் ஃபார்முலா' அடிப்படையில் உருவான அதிமுக காங்கிரஸ் கூட்டணி, வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டிலும் இந்த கூட்டணி வென்றது. மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 37ஐ (அதிமுக -12, காங்கிரஸ் - 25) இந்த கூட்டணி கைப்பற்றியது. இரண்டு இடங்களை மட்டுமே திமுக பிடித்தது.

நாடாளுமன்ற தேர்தலுடன், 1984 டிசம்பர் 24ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 195 இடங்களை (அதிமுக 132, காங்கிரஸ் 61, குமரிஅனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2) அதிமுக கூட்டணி வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகி ஹாட்ரிக் சாதனை படைத்தார் எம்ஜிஆர். இந்த ஹாட்ரிக் சாதனை எம்ஜிஆருக்கு முன்னும் பின்னும் இன்னும் முறியடிக்கப்படவில்லை. நேரடியாக தேர்தல் களம் காணாமல், அமெரிக்காவில் இருந்தபடியே இந்த சாதனையை படைத்தார், எம்ஜிஆர்.



இப்படியாக தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் பல அதிசயங்களை ஏற்படுத்தியது, 1984ம் ஆண்டு தேர்தல். அப்போது, இந்தியாவின் இளம் பிரதமராக அறியப்பட்ட ராஜீவ்காந்தி, தொழில்நுட்பம் உட்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டியதோடு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதை கட்டாயமாக்கும் 'பஞ்சாயத் ராஜ்' சட்டத்தையும் கொண்டு வந்தார். 

ஆனால், 1989ல் நடந்த அடுத்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்திய ஆட்சி முறையிலும் புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்தது.

(நினைவுகள் சுழலும்)

- நெல்லை வை.ரவீந்திரன்