Friday 23 December 2016

வெற்றியை நோக்கி - 2

கற்பனை கோட்டை கட்டுவோம்


இந்த உலகில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நீங்கள் அணிந்திருக்கும் ஆடை, வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம், எழுதும் பேனா, சமையல் அடுப்பு, செல்போன், படிக்கும் கல்வி நிலையம் என அந்த பட்டியல் மிக நீளமானது. அனைத்துக்குமே உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? கற்பனை. ஆச்சரியமாக இருக்கிறதா? பேனாவுக்கும் கற்பனைக்கும் வேண்டுமானால் தொடர்பு இருக்கலாம். சமையல் அடுப்புக்கும் கற்பனைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இருக்கிறது. நம் கண் முன்னே காட்சி தரும் ஒவ்வொரு பொருளுமே ஏதோவொரு மனிதனின் மூளையில் உதித்த கற்பனையின் நிஜக்காட்சிகள் தான். கற்பனை இல்லாவிட்டால் இந்த உலகில் எதுவுமே கிடையாது. சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஆகாய விமானம் என்பது முதலில் ஒரு மனிதரின் கற்பனையில் உதித்ததே. அதற்கு, அவனுக்கு உந்து சக்தியாக இருந்தது பறவை இனம். பறவையை சாதாரண கோணத்தில் பார்க்காமல் தேடலுடன் கூடிய கற்பனை கோணத்தில் பார்த்ததால் ஆகாய விமானம் பிரசவித்தது.

பல ஆயிரம் மக்களை சுமந்து கொண்டு பல நூறு கி.மீ தொலைவு ஓடும் ரயிலும் ஏதோ ஒரு மனிதரின் கற்பனையில் தான் முதலில் ஓடியது. அந்த பெட்டிகளின் வடிவமைப்பு, என்ஜின்களின் வகை என ஒவ்வொன்றும் வெவ்வேறு தனி மனிதனிடம் உதித்த கற்பனைகளே. இன்றும் கூட அரண்மனை போன்ற சொகுசு பெட்டிகள், டபுள் டெக்கர், மோனோ ரயில், மெட்ரோ ரயில் என புதுப்புது ரயில்கள் அறிமுகமாகின்றன. அதுவும் மனித கற்பனை வளத்தினால் விளைந்த கனிகளே.

உலகில் உள்ள வைரச் சுரங்கங்களும், தங்கச் சுரங்கங்களும், நிலக்கரி சுரங்கங்களும் ஒரு காலத்தில் சாதாரண மண் தரைகளே. தன்னுடைய காலுக்கு கீழே புதையல் இருக்கலாமோ என்ற கற்பனை, யாரோ ஒருவர் மனதில் உதித்ததாலேயே நிலத்தை ஊடுருவி தோண்டும் பணியை மனிதன் துவக்கினான். அந்த தேடல் தான் வைரச் சுரங்கமாகவும் தங்கச் சுரங்கமாகவும் மாறி நிற்கிறது.

சிந்தனையை கற்பனை சுரங்கமாக வைத்திருந்தால் புதிய யோசனைகளின் ஊற்றுக்கண்ணாக மாறும். சமூகத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் உபயோகம் மிகுந்த பொருட்கள் உருவாகும்.

தாமஸ் ஆல்வா எடிசன் என்ற தனி மனிதன் கற்பனை காணாமல் இருந்திருந்தால் இன்று பேசும் படக் கருவி முதல் பல்வேறு பொருட்களும் அதன் பரிணாம வளர்ச்சியினால் விளைந்த நவீன தொழில்நுட்ப கருவிகளும் நம்மை வந்து சேர்ந்திருக்காது. கிரகாம்பெல் கற்பனையில் நீண்டநாட்களாக மணி அடித்துக் கொண்டிருந்த தொலைபேசி என்ற கருவியை அவர் நிஜமாக்கி காட்டியதால் தான் இன்றைய கால கட்டத்தில் விதவிதமான செல்போன்கள் நமக்கு மகிழ்ச்சியுடன் கூடிய பயன்களை அள்ளித் தருகின்றன. எனவே, கற்பனை என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியம். உதாரணமாக ஒரு கதையை கூறலாம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் வகுப்பறையில் இரண்டு நெருங்கிய நண்பர்கள். ராமு, சோமு என்பது அவர்களின் பெயர்கள். அவர்களின் தேர்வு எண்கள் கூட அடுத்தடுத்தே அமைந்திருந்தன. இதனால், ஒவ்வொரு தேர்வின்போதும் ராமுவின் தேர்வு தாளை பார்த்து எழுதுவதையே வழக்கமாக வைத்திருந்தான், சோமு. அது, ஓவிய தேர்வாக இருந்தால் கூட. ராமு எந்த ஓவியத்தை கற்பனையில் வரைகிறானோ அதையே சோமுவும் காப்பியடிப்பது வழக்கம். சோமுவின் வழக்கம் மாறவில்லை. பள்ளிப்பருவம் முடிந்தது. ஆண்டுகள் உருண்டோடின.

வளர்ந்து பெரியவனான சோமு வேலை தேடியபோது ஒரு ஜெராக்ஸ் கடையில் தான் பணி கிடைத்தது. ராமுவோ, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் டிசைனிங் பிரிவில் எக்சிகியுடிவ் அளவுக்கு உயர்ந்தான். அவனுடைய கற்பனை கலந்த வரைபடங்களுக்கு கடும் கிராக்கி என்பதால் நிறுவனம் சார்பாக பல்வேறு வெளிநாடுகளையும் அவன் வலம் வந்தான். இது வெறும் கற்பனை கதை அல்ல. கற்பனை திறன் இருந்தால் மட்டுமே மனித வாழ்வில் ஜொலிக்க முடியும் என்பதை கூறும் கதை.   

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். வேலை தேடுபவராக இருக்கலாம். ஏதாவது ஒரு துறையில் பணியாற்றுபவராக இருக்கலாம். இல்லத்தரசியாக இருக்கலாம். மாணவராக இருக்கலாம். மிகப்பெரிய தொழிலதிபராக கூட இருக்கலாம். உங்களுக்கான கடமையில் கற்பனைத் திறனும் கலந்து இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியானது, தனித்துவமாக இருக்கும்.

இதனால் தான், சிறிய வயதிலேயே மாணவர்களை கனவு காணுங்கள் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஊக்கப்படுத்தினார். கற்பனையின் மற்றொரு வடிவம் தான் கனவு. ஏதாவது ஒன்றை தொடர்ந்து கற்பனை செய்து பார்த்தால், அதை நிஜமாக்க வேண்டும் என்ற உத்வேகம் மனதுக்குள் எழும்.

தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம், கல்வி, அறிவியல், விண்வெளி, கணினி என ஒவ்வொரு துறையும் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளன. இன்னும் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அடிப்படை காரணம், அந்த துறை சார்ந்துள்ளவர்களின் கற்பனை திறன். வெற்றி என்ற சாதனையை அடைய துடிக்கும் ஒவ்வொருவருக்கும் கடமையுடன் கூடிய தேடல் நிறைந்த கற்பனைத் திறன் அவசியம்.

(வெற்றிப் பயணம் தொடரும்...)

Wednesday 21 December 2016

வெற்றியை நோக்கி ... 1

வாங்க பழகலாம்

இது போட்டி நிறைந்த உலகம். உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் போட்டி நிலைமையைப் பற்றி சொல்லித் தெரியவேண்டாம். பரப்பளவில் பெரியதாக உள்ள நாடுகளில் கூட மக்கள் தொகை குறைவாகவே இருக்கிறது. ஆனால், குறைவான பரப்பளவு, நிறைவான மக்கள் என இந்தியா திண்டாடுகிறது. இப்படித்தான் பலருடைய கருத்துகளும் உள்ளது. மனித சக்தி என்ற மகத்தான வலிமை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.
மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு மனித சக்தி இந்தியாவில் இருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் ஒவ்வொருவரின் சிந்தனையும் வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதால் சிந்தனை சக்தியும் நிறைந்து நிற்கிறது. இதை கருத்தில் கொண்டே, சர்வதேச நிறுவனங்கள் பலவும் இங்கு வந்து கடை விரிக்கின்றன என்பது தனிக்கதை.

எனவே, இந்த அளவுக்கு பெரிய அளவிலான கும்பலாகவும் தனித்த சிந்தனைகளுடனும் இருக்கும் ஒரு நாட்டில் வெற்றியாளராக வலம் வர வேண்டுமானால் நாம் தனித் திறமையை வித்தியாசமான முறையில் வெளிக்காட்டுவது மிக அவசியம். அது வெறும் அறிவுத் திறனை மட்டும் சார்ந்தது கிடையாது. வாழ்வியல் திறனை மேம்படுத்துவதிலும் இருக்கிறது. இதையே அனுபவ அறிவு அல்லது வெளி உலக அனுபவம் என அழைக்கின்றனர். அதாவது, பழகும் திறமை முக்கியமானது. அதனால் தான், ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே வளாக தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் பலரும் இந்த திறமையாலேயே தேர்வாகின்றனர். மற்றவருடன் எளிதில் பழகும் திறன் உடையவர்களை அனைவருமே விரும்புவார்கள். அடுத்தவரை கவரும் பேச்சாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் இந்த திறமை இயல்பாகவே வாய்க்கும். பழகும் திறனில் கனிவான பேச்சும் கலந்தால் தேனோடு கலந்த தெள்ளமுதாகி விடும். இனிமையான சொல்லும் கனிவான பேச்சும் எதிரில் இருப்பவரை நம் வசப்படுத்தும். கனி இருக்கும்போது காயை யாராவது விரும்புவார்களா?

அப்படிப் பழகும்போது நம்மை விட சிறியவர்களையும் மரியாதையாக நடத்துவது சிறந்தது. 100 வயதை எட்டும் ஒருவர், சந்திக்கும் அனைவருமே வயதில் அவரை விட சிறியவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த ஒரு நிலையிலும் அனைவரையும் மரியாதையாக அணுகுவது சிறந்தது. தனது 90 வயதை கடந்த நிலையிலும் சிறிய குழந்தையை கூட, ‘வாங்க, உட்காருங்க’ என அழைத்தவர், ஈவேரா பெரியார். அதனால் தான், அவர் இன்றும் என்றும் பெரியாராக இருக்கிறார். இதையே, ‘கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ளுங்கள்’ என கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது.

காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. நேற்று முன்தினம் தான் புதிதாக பிறந்தது போல இருந்த இந்த ஆண்டின் ஓட்டம் முடிந்து எதிரில் புத்தாண்டு தயாராக நிற்கிறது. மனித வாழ்வும் தொடர் ஓட்டம் போலத்தான். அதில் குறுக்கிடும் அனைவருமே நமக்கு தேவை. நம்மை நாடி வரும் ஒவ்வொருவரும், நமக்காக ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பை உடுத்துக் கொண்டே நம்மை தேடி வருகின்றனர். எனவே, வாங்க பழகலாம் என பழகி வைப்பது முன்னேற்றத்துக்கான முதல் அடியாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு வாயில் கதவை தட்டுகிறது. கதவை திறந்து பார்த்தால் துதிக்கையில் பூமாலையை ஏந்தியபடி பிரமாண்டமான யானை கூட நிற்கலாம். அதை வரவேற்பதும், வரவேற்கும் முறையுமே நமது வாழ்க்கை ஓட்டத்தை நிர்ணயிக்கிறது.

எதிர்காலம் நோக்கி அழைத்துச் செல்ல மாலையுடன் காத்திருக்கும் யானையை வரவேற்க செல்லும்போது கையில் தீப்பந்தம் ஏற்றியபடி வாயில் கதவை திறந்தால், அது யார் தவறு?

நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதவை கூட எதிர்காலத்தில் நிஜமாக கூடும். உதாரணமாக, 15 ஆண்டுகளுக்கு முன் பேஜர் என்ற ஒரு கருவி இருந்தது. வெறும் எஸ்எம்எஸ் தகவலை மட்டுமே அது அளிக்கும். நம்மில் பலருக்கும் அது மங்கலாக நினைவில் வரலாம். பேஜர் புழக்கத்தில் இருந்தபோது அதில் தமிழில் தகவல் வருவதே அதிசயமாக கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், இன்றைய செல்போன் உலகம் குறித்து யாராவது கற்பனையில் கூறியிருந்தால் அவரை ஒரு மாதிரியானவர் என்று தான் பரிகசித்து இருப்போம். ஆனால், செல்போன் வளர்ந்து ஆன்ட்ராய்டு, ஐ பேட் என பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. உள்ளங்கையில் உலகம் அடங்கி விட்டது. இது இன்னும் வளரலாம். நம்மால் நம்ப முடியாத அதிசயங்கள் கூட நடக்கலாம்.

இந்த இடத்தில் மாவீரன் நெப்போலியன் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் சற்று பொருத்தமாக இருக்கும். உலகையே கதி கலங்கச் செய்த பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போர்னபார்ட் காலத்தில் தான் நீராவி என்ஜின் முதலில் வடிவமைக்கப்பட்டது. அதை கண்டுபிடித்த ராபர்ட் புல்டன் என்பவர் நெப்போலியனை சந்தித்து, ‘காற்றை கிழித்து படகை செலுத்தும் சக்தி அந்த என்ஜினுக்கு உண்டு’ என்பதை அவரிடம் விளக்கிக் கூற அனுமதி கேட்டு காத்திருந்தார். காற்றின் போக்கிலேயே படகுகளையும் கப்பல்களையும் கடலில் செலுத்திய காலம், அது. அதனால், காற்றை எதிர்த்து படகு செலுத்த முடியும் என்பதை நெப்போலியன் துளியும் நம்பவில்லை. அதை கண்டு பிடித்து விளக்கம் கூற வந்தவரையும் முட்டாள் என்றே நினைத்தார். எனவே, ‘முட்டாள்களுடன் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என பதிலளித்து ராபர்ட் புல்டனை சந்திக்க மறுத்து விட்டார்.
அந்த கணத்தில் மட்டும், ராபர்ட் புல்டனை மாவீரன் நெப்போலியன் சந்தித்திருந்தால் வரலாற்றின் போக்கு மாறி இருக்கும். கிழக்கு நோக்கி தரை மார்க்கமாக ஆட்சி விஸ்தரிப்பில் முனைந்த நெப்போலியன், மேற்கு நோக்கி கடல் பயணம் செய்திருப்பார். அப்படி சென்று இருந்தால் இங்கிலாந்தும், அமெரிக்காவும் அவரிடம் மண்டியிட்டிருந்திருக்கலாம். பிரெஞ்சு ஆதிக்கமே உலகில் வியாபித்திருக்கலாம். பிரிட்டிஷ் மேலாதிக்கம் என்ற ஒன்று உலகில் தலை தூக்காமலே போய் இருக்கலாம்.

பழக வந்த ஒரு நண்பனை நெப்போலியன் உதாசீனம் செய்ததால் பிரெஞ்சு சாம்ராஜ்யம் விரிவு காணவில்லை. தோல்வியையே கண்டிராத நெப்போலியன், ரஷ்யாவின் வாட்டர்லூ பகுதியில் தோல்வியின் கசப்பை ருசித்தார். எனவே, நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு  அவசியம் தேவை. வாங்க பழகலாம் என ஒவ்வொருவருடனும் கை குலுக்குங்கள்.


(வெற்றிப் பயணம் தொடரும்...)

Tuesday 20 December 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 24

புதுச்சேரி தினகரன் பதிப்பில் எனது சுதந்திரமான செயல்களுக்கு முழு ஆதரவை எங்கள் நிர்வாக இயக்குர் ஆர்.எம்.ஆர் சார் அளித்தார். பத்திரிகை சர்குலேசனை அதிகரிக்க புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். மற்ற பத்திரிகைகளில் சென்னை அலுவலகத்தில் இருந்து மட்டுமே அந்த முயற்சி தொடங்கும். தினகரனை பொறுத்தவரை, அந்தந்த பதிப்பு ஆசிரியர்களும் அதற்கான முயற்சிகளை செய்யலாம். அதன்படி, புதுச்சேரி பதிப்பில் புதுப்புது பகுதிகளை அறிமுகம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது.

திங்கள் தோறும் மாணவர்களின் ஓவியங்கள், கவிதை கட்டுரைகள் அடங்கிய மாணவர் களம், செவ்வாய் தோறும் விவசாய செய்திகள் அடங்கிய வேளாண் பூங்கா, புதன் கிழமை தோறும் புதுவையின் பழமை கட்டுரைத் தொடர், வியாழன் தோறும் வேலைவாய்ப்பு செய்தி மற்றும் குழந்தைகளின் படங்களுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து என தொடங்கவும் அவர் உறுதுணையாக இருந்தார்.

சில மாதங்களில் ‘வெல்கம் வியாழன்’ என்ற தலைப்பில் 4 பக்க இணைப்பு இதழும் கொண்டு வந்தேன். இதுபோன்ற 4 பக்க இணைப்பிதழ் என்பது சென்னையில் இருந்து மட்டுமே வெளியாகும். பத்திரிகைகளில் உள்ளவர்களுக்கு இது பற்றி தெரியும். ஆனால், தனியாக ஒரு பதிப்பில் இருந்து இதுபோன்ற இணைப்பை கொண்டு வருவதற்கு முழுமையாக சுதந்திரம் அளித்ததோடு, அதை முறையாக கண்காணித்து ஆலோசனைகளையும் ஆர்.எம்.ஆர். சார் வழங்கியதை மறக்க முடியாது.

மத்திய அரசின் செய்தி துறை சார்பாக, பத்திரிகையாளர்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். பெரும்பாலும் சென்னை அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதுபோன்ற வாய்ப்புகளை பத்திரிகை நிர்வாகங்கள் வழங்கும். அதுபோல ராஜஸ்தான் மாநிலத்துக்கு பத்திரிகையாளர்களை 2012ல் மத்திய அரசின் தகவல் தொடர்பு அலுவலகம் அழைத்துச் சென்றது. அப்போது, புதுச்சேரியில் இருந்த எனக்கு அந்த வாய்ப்பை தந்தவர், ஆர்.எம்.ஆர். சார்.

சென்னையில் இருந்து மும்பை வழியாக ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சல்மீர் என ஒரு வார காலம் அந்த சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த பயணத்தின் போது, தார் பாலைவனம், பொக்ரான், பாகிஸ்தான் எல்லை, ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ராணுவ ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஒரு நாள் தங்கி இருந்து சுற்றி பார்க்கும் வாய்ப்பு என நினைவில் இருந்து நீங்காத அனுபவங்களும் வாய்த்தன.

பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்து வருகிற பிப்ரவரி 1ஆம் தேதியுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1997ஆம் ஆண்டில் சென்னை கதிரவன் நாளிதழில் பணிக்கு சேர்த்துக் கொண்ட பெரிய அய்யா பா.ராமச்சந்திர ஆதித்தனார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்த எனது மரியாதைக்குரிய பாசமிகு மாமா ஆலடி அருணா இருவரும் எனது வாழ்வில் முக்கியமானவர்கள்.
வாழ்க்கை என்பதே அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் அடி மனதில் கற்கண்டாய் இனித்து கிடக்கும் அனுபவம் ஏதேனும் ஒன்று இருக்கும். என்னை பொருத்தவரை புதுச்சேரி வாழ்க்கை அதுபோன்றதே. பிரதிபலனாக, அங்கு உள்ளவர்களே அறியாத சில வரலாற்று தகவல்களை, எளிமையான அறிமுகம் செய்து வைத்த மன நிறைவு எனக்குள் இருக்கிறது. அங்குள்ளவர்களே, இதை என்னிடம் கூறியிருக்கிறார்கள்.
மாற்றம் (என்ற வார்த்தை) ஒன்றே மாறாதது. மற்ற அனைத்துமே மாற்றத்துக்கு உட்பட்டவையே. எனது, பத்திரிகை பணியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்த புதுச்சேரி அனுபவம் விரிவானது. எனினும், இந்த அளவில் அதை நிறைவு செய்து விட்டு, மற்றொரு சப்ஜெக்டுடன் சந்திக்கிறேன், நண்பர்களே…

நன்றி.

என்னை கவர்ந்த புதுச்சேரி - 23

புதுச்சேரி செய்தித் துறையில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் செய்தியாளர்களுக்கான அங்கீகார (அக்ரிடேசன்) அட்டை வழங்குவது வழக்கம். அதற்கு, செய்தித் துறை இயக்குனர் தலைமையில் பத்திரிகையாளர்கள் 4 பேர் அடங்கிய குழு உண்டு. அதில் நானும் உறுப்பினராக இருந்தேன். அந்த குழுவில் புதுச்சேரி தினமலர் நிர்வாகி சுரேஷ் சாரும் (அந்துமணி ரமேஷ் சாரின் சகோதரர்) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் இந்த அளவுக்கு எனக்கு சிறப்பான இடம் கிடைப்பதற்கும், 5 ஆண்டு இனிய அனுபவத்துக்கும் முழு முதல் காரணகர்த்தா ஒருவர் உண்டு. எனக்கு எல்லாமுமாக இருந்த அந்த முதன்மையானவரை மறக்க முடியாது. அவர் தான், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்எம்ஆர். என்னுடைய எழுத்துகள் மற்றும் அனைத்து முயற்சிக்கும் ஆதரவாக இருந்தவர் அவரே.

பத்திரிகை உலகிலும் சரி மீடியாவிலும் சரி திறமையானவர்களை கண்டறிந்து பயன்படுத்துவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் சன் குழுமம் முதன்மையானது என்பது எனது கருத்து. பெரும்பாலான மீடியாக்களில் மீண்டும் மீண்டும் ஒருவரிடமே வாய்ப்புகள் குவியும். சன் குழுமம் அப்படி அல்ல. அந்த வகையில் எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்எம்ஆர் எனக்கு அளித்த வாய்ப்பு மறக்க முடியாதது.

அவரை எம்ஆர்சி நகர் அலுவலகத்தில் சந்தித்தபோது, எனக்கு மூன்று வாய்ப்புகள் தந்தார். புதுச்சேரி, பெங்களூர், வேலுர், மூன்று நகரங்களில் உள்ள தினகரன் பதிப்புகளில் ஏதாவது ஒரு பதிப்புக்கு செய்தி ஆசிரியராக செல்கிறாயா? என்பதே அவரது கேள்வியாக இருந்தது. சென்னையிலேயே 15 ஆண்டுகள் இருந்த எனக்கு வேறு ஊருக்கு செல்ல சற்று தயக்கமாக இருந்தது.

ஆனால், பத்திரிகை பணியில் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்பதால் ஒப்புக் கொண்டேன். பெங்களூர் நகரின் காஸ்ட் ஆப் லிவிங், வேலூரின் வெயில் ஆகியவற்றை கருதி, சற்று யோசனையுடனேயே புதுச்சேரிக்கு செல்வதாக ஆர்.எம்.ஆர். சாரிடம் கூறினேன்.

அவருடனான அறிமுகத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, தலைமை நிருபர் சுரேஷ் மற்றும் எனது நண்பர் குமரன். சென்னையில் தினகரன் தலைமை செய்தி ஆசிரியர் கதிர் சார், அசோசியேட் ஆசிரியர் ராமன் சார் மற்றும் ரவீந்திரன் சார் உள்ளிட்ட செய்தி ஆசிரியர்கள் அளித்த பயிற்சிக்கு பிறகு, அமைந்தது எனது புதுச்சேரி பயணம்.

(அனுபவம் இனிக்கும்)

Sunday 18 December 2016

வெற்றியை நோக்கி … முன்னுரை

வாழ்க்கை பொக்கிஷம்..
(இந்த தொடரை வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்)

கற்கால ஆதி மனிதன் தொடங்கி நவநாகரீக மனிதன் வரை அனைவருடைய இலக்கும் வெற்றியை நோக்கியே உள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும் அந்த வெற்றியின் பொருள் மாறுபடலாம். பள்ளியில் பயிலும் மாணவனுக்கு தேர்வில் தேர்ச்சி பெறுவதே வெற்றி. கம்பியில் ஆடும் கழை கூத்தாடிக்கு தட்டில் விழும் அதிகபட்ச சில்லறை காசுகளே வெற்றி. படித்த இளைஞனாக இருந்தால் நல்லதொரு வேலையை தேடி கண்டுபிடித்து சேருவதே மிகப்பெரிய வெற்றி. அப்படி ஒரு வேலை கிடைத்து விட்டால் சம்பள உயர்வு, பதவி உயர்வு என வெற்றியின் எல்லைகள் விரிவடைகின்றன. பெரிய வணிக சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்கும் தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் போடப்படும் தொழில் உடன்படிக்கைகளே வெற்றி.

ஆனால், இந்த வெற்றியை அடைவது மிகவும் எளிதானதல்ல. அவரவர் பார்வையில் அவரவர்களின் வெற்றி இலக்கு மிகவும் கடினமானது. பிரம்மாண்டத்தின் உச்சம். வெற்றி என்பது தனி நபருக்கு மட்டுமே சொந்தமானது. அவருடைய சொந்த முயற்சியுடன் தொடர்புடையது. ஆனால், அதற்கான பயணம் கூட்டு முயற்சியால் ஆனது. மற்றவர்களின் கூட்டுறவு இல்லாமல் பயணத்தில் வெற்றி பெறலாம் என்பது அறியாமை. எனவே, அது போன்ற ஒரு கூட்டணியை அமைப்பது எப்படி? அது வெற்றிக் கூட்டணியாக அமையுமா?

அதே நேரத்தில், ‘நான் தனித்துவமானவன்’ என்ற கருத்து ஒவ்வொருவருடைய மனதிலும் நிலை கொண்டு இருக்க வேண்டும். அடுத்தவர் முதுகில் சாய்ந்து கொண்டும், பிறர் தோளில் சவாரி செய்து கொண்டும் வெற்றியை ருசிப்பது என்பது மிகவும் அவலமான ஒன்று. வாழ்க்கை முழுவதும் பிறர் ஒருவரை சார்ந்தே இருப்பது சோம்பேறிகளின் செயல். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சுயமாக நின்று சவால்களை எதிர் கொள்ள தனித்திறமை வேண்டும். கூட்டணியா? தனி அணியா? 

மனிதனாக பிறந்தால் தேங்கி கிடப்பதும் சோம்பி திரிவதும் சரியல்ல. கூண்டுக்குள் அடைந்து கிடக்கும் கோழி போல ஒரே இடத்தில் தங்கி அங்கேயே சகலத்தையும் கழித்து துர்நாற்றத்துடன் வாழ்வது வாழ்க்கையா? குளம், குட்டை என தேங்கி கிடக்கும் நீர் நிலைகளை பாருங்கள். சல சலத்து ஓடும் நதி நீரை பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரிகிறதா? குட்டை தேங்கியே கிடக்கும். நதி ஓடிக் கொண்டே இருக்கும். நீங்கள் நதியாக மாறுவது எப்படி?

மலை முகட்டில் நீரூற்றாக துவங்கும் நதியானது, நீர் வீழ்ச்சியாக வீழ்வது உண்டு. உடனே, அந்த நதி வீழ்ந்து விட்டதாக கருத முடியுமா? அத்துடன் அதன் சகாப்தம் முடிந்து விட்டதா? இல்லையே. வயல்களை வளப்படுத்தும் நதியாக அது ஓடவில்லையா? அந்த நீர் வீழ்ச்சியை போலவே வீழ்ச்சிக்கு பிறகும் பரபரத்து உற்சாகத்துடன் ஓடுவது எப்படி?
எதை போட்டாலும் தன்னுள் ஜீரணித்து கொள்வது மண்ணின் குணம். இலை, தழைகள் துவங்கி மனித உடல் வரை அனைத்தையுமே மட்கச் செய்து துகள்களாக மாற்றி விடுகிறது. ஆனால், அந்த மண்ணையும் வெற்றி காண்கிறது, சிறு விதை. உருவத்தில் மிகச் சிறியதாக உள்ள விதைக்கு இருக்கும் விடா முயற்சி நமக்குள் இல்லையா?
வரலாற்றில் பாடங்களாகவும் படங்களாகவும் அறிமுகமான சரித்திர நாயகர்கள் முதல் நிகழ்காலத்தில் கண் முன்னே நடமாடும் சாதனை நாயகர்கள் வரை நம்மை ஆச்சரியப்படுத்தும் மனிதர்களின் பட்டியல் மிக நீளம். எந்த வித மந்திரக்கோலாலும் அந்த பட்டியலில் அவர்கள் இடம் பிடிக்கவில்லை.  அவர்களின் சாதனை சரித்திர பின்னணி வித்தியாசமானது. அது போன்ற பட்டியலில் நமக்கும் இடம் கிடைக்குமா என எதிர் பார்க்கிறீர்களா?

வெற்றியை தேடி ஓடும் மனிதர்களுக்குள் தான் எத்தனை கேள்விகள்? ஒவ்வொரு கேள்விக்கும் ஏராளமான பதில்கள் உள்ளன. அது என்ன என்ற ஆவல் மேலிடுகிறதா? ஒவ்வொருவரும் முயற்சித்தால் சாதனை மகுடத்தை சூட்டலாம். சரியான திட்டமிடலுடன் எட்டிப் பிடித்தால் வானமும் நம் வசப்படும்.

மிகப்பெரிய தோட்டங்களும் வயல் வெளிகளும் சோலைகளும் ஒரே நாளில் உருவானவை அல்ல. வெறும் மண் தரையை பூத்துக் குலுங்கும் நறுமணம் வீசும் சோலைகளாக்கி நம்மை விழி விரிய காணச் செய்தது பாட்டாளி தோழர்களின் வியர்வையும் உழைப்புமே. அதுபோன்ற உண்மையான உழைப்பை அளித்தால் நிச்சய பரிசுடன் காலம் காத்திருக்கிறது.

புத்திசாலித்தனத்துடன் கூடிய உழைப்பாக இருந்தால் சாதனை சிகரத்தை எட்ட முடியும். அதற்கான படிக்கட்டுகள் ஏராளம். தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, அனுபவம், கல்வி, பொறுமை, விடா முயற்சி என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அந்த படிகளை கடந்தால் வெற்றிக் கனியை சுவைக்கலாம். தொடர்ந்து வரும் பாடங்களில் அந்த படிக்கட்டுகளை நாம் காணலாம். 

(வெற்றிப் பயணம் தொடரும்...)

Saturday 10 December 2016

என்னை கவர்ந்த புதுச்சேரி - 22

இந்த கொண்டாட்ட பூமியில், எனது 5 ஆண்டுகளும் பெரும்பாலும் கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களாகவே நிறைந்திருந்தன. தினகரன் செய்தியாசிரியராக சென்ற சில மாதங்களிலேயே புதுச்சேரியின் பழைய புகைப்படங்கள் சிலவற்றை நண்பர் குரூஸ் தனம் தந்தார். அதுதான், புதுச்சேரி பற்றிய எனது ஆர்வத்துக்கான கருவாக அமைந்தது.



பின்னர், தினகரன் நாளிதழில் அந்த புகைப்படங்களுடன் கூடிய எனது கட்டுரைத் தொடர் வெளிவரத் தொடங்கியது. அந்த தொடர் மூலம் எனக்கு கிடைத்த நட்புகள் ஏராளம். புதுச்சேரி தமிழ் சங்கத் தலைவர் முனைவர் முத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரராகவன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி பிரதீஷ், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் தனி செயலாளர் ஜெகஜோதி, அமைச்சர் ராஜவேலுவின் தனிச் செயலாளர் முருகன் என அரசியல் ரீதியான நட்புகள் தொடங்கி, பேராசிரியரும் குறும்பட இயக்குநருமான மு.இளங்கோவன், நூலக அதிகாரி சம்பந்தம், புஸ்தக் மந்திர் சம்பத் என பலருடைய ஆதரவும் கிடைத்தது. செய்தித் துறையில் எழுத்தாளர் கணபதி (மகரந்தன்), தனசேகர் ஆகியோரையும் மறக்க முடியாது.



இது ஒருபுறம் இருக்க மூத்த பத்திரிகையாளர் உதய நாராயணன், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பி.என்.எஸ். பாண்டியன், பத்திரிகையாளர்கள் தயாளன், இளவமுதன், பழனிசாமி, பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநருமான குணவதி மைந்தன், புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர் கலாபன் தொடங்கி, எங்கள் தினகரனின் சக நண்பர்கள் வரை அனைவரின் ஆதரவையும் மறக்க முடியாது.



மூன்றாண்டு தினகரன் பணியின்போதும், இரண்டாண்டு தி இந்து பணியின்போதும் விழாக்களை மறக்க முடியாது. எழுத்தாளர்கள் கி.ரா., எஸ்.ரா, இமையம், ஜோடி குரூஸ், இந்திரன் ஆகியோர் பங்கேற்ற மேடைகளில் சிறிய இடம். தினகரன் மற்றும் தி இந்து விழா மேடைகளில் இடம் என புதுச்சேரியில் எனது 5 ஆண்டு அனுபவமும், அது ஒரு விழாக்காலம்.


(அனுபவம் இனிக்கும்)

என்னை கவர்ந்த புதுச்சேரி - 21

புதுச்சேரி என்றதும் பலருக்கும் ஒரே மாதிரியான பிம்பம் மட்டுமே மனதில் பதிவாகி இருக்கும். வார இறுதி நாட்களில் இங்கு வரும் கூட்டமே அதற்கு சாட்சி. ஆனால், புதுச்சேரியில் இருந்து 100 கி.மீ தொலைவுக்குள் இருப்பவர்கள் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அளவுக்கு, கோவில்கள் நிறைந்த ஊர் புதுச்சேரி. மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வேதபுரீஸ்வரர் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் போன்ற பழமையான கோவில்கள் இருக்கின்றன.
இது தவிர, மிக உயரமான பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்ச நேயர், 48 அடி உயர மொரட்டாண்டி சனீஸ்வரர், மிக பிரமாண்டமான பாதாள பிரத்தியங்கிரா காளி கோவில், மயிலம் முருகன், திருவக்கரை வக்கிரகாளி அம்மன் என முக்கியமான பல கோவில்கள் உள்ளன.
பிரெஞ்சியர் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் பழமையான தேவாலயங்களுக்கும் குறைவில்லை. கடற்கரையோரம் ஐ.ஜி அலுவலகம் அருகில் இருக்கும் கப்ஸ் கோவில் முக்கியமானது. கடலோர உப்புக்காற்றால் பாதிக்கப்படாத வகையில் சுண்ணாம்புக் கல், முட்டையின் வெள்ளைக் கரு போன்றவற்றை கொண்டு கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்தது, அந்த தேவாலயம். மிஷன் வீதியில் உள்ள ஜென்ம ராக்கினி மாதா தேவாலயமும் நூற்றாண்டுகளை கடந்த தேவாலயம் தான்,



கப்ஸ் கோவில் அருகே உள்ள சிறிய கல்லறை தோட்டத்தில், பிரெஞ்சு தளபதி புஸ்ஸி கல்லறை இருக்கிறது. ஆங்கிலேயருக்கு ராபர்ட் கிளைவ் போல, பிரஞ்சியருக்கு வரப்பிரசாதமாக வந்தமைந்த டூப்ளெக்ஸின் வலது கரம் தான் இந்த புஸ்ஸி. ஆற்காடு, செஞ்சி போன்ற இடங்களை பிரெஞ்சு ஆதிக்கத்தில் கொண்டு வந்ததில் புஸ்ஸியின் பங்கு குறிப்பிடத்தக்கது.



இதுபோல, உப்பளம் பகுதியில் இருக்கும் கல்லறை தோட்டம், சுமார் 2 நூற்றாண்டு பழமையானது. நீண்ட தூண் போன்ற வடிவிலான சமாதி, பூ வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட கண்கவரும் சமாதி என விதம் விதமான பிரெஞ்சியர் சமாதிகளை இங்கு பார்க்கலாம். புதுச்சேரியின் முதல் முதலமைச்சரான எதுவார் குபேர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கல்லறைகளும் இங்குதான் இருக்கின்றன. நவம்பர் மாதத்தில் கல்லறை தினத்தன்று ஏராளமான பிரெஞ்சியர்கள் இங்கு வந்து, தங்கள் முன்னோருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
(அனுபவம் இனிக்கும்)