Monday, 22 December 2025

சார் போஸ்ட்...

 80ஸ், 90ஸ் தலைமுறையினருக்கு போஸ்ட் மேன்களுடனும் போஸ்ட் ஆபீஸ்களுடனும் நெருங்கிய பந்தம் உண்டு. கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் வரை தெரிந்து வைத்திருப்பார், கிராமத்து போஸ்ட் மேன். 

சார் போஸ்ட்...

இந்த வார்த்தைகள் ஆயிரம் அர்த்தங்களுடனும் தகவல்களுடன் வந்து சேருபவை..

அரசு வேலைக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் தொடங்கி மணி ஆர்டரை எதிர்பார்த்து காத்திருப்பவர் வரை போஸ்ட் மேனை எதிர்பார்த்திருப்போர் அநேகம்.

எங்கள் கிராமத்தில் 4000 க்கு குறையாமல் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும்  ஒவ்வொருத்தரையும் தெரிந்து  வைத்திருப்பார், எங்கள் ஊர் போஸ்ட் மேன் காந்தி. முக்கிய தபால் ஏதாவது வந்தால் வழியிலேயே பார்த்து தந்து விடுவார்.

புத்தாண்டு, பொங்கல்  சமயங்களில் மூடடை மூட்டையாக தபால்கள் குவிந்தாலும், சளைக்காமல் சைக்கிளில் அள்ளிப்போட்டுக் கொண்டு, உரியவர்களிடம் சேர்த்து விடுவார். துளி கூட, சலிப்பை அவரிடம் பார்த்ததில்லை. அவருக்குப் பின் பலர் வந்தாலும் போஸ்ட் மேன் என்றாலே காந்தி சார் தான்.

அரசு பணிக்கான போட்டித் தேர்வுக்கு தேர்வு கட்டணமாக  போஸ்டல் ஆர்டர் அனுப்ப வேண்டி இருக்கும். போஸ்டல் ஆர்டர் என்பது வங்கி வரைவோலை மாதிரி. பார்ப்பதற்கும், வரைவோலை போலவே இருக்கும். 20 ரூபாயில் இருந்தே கிடைக்கும். பி.எஸ்.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., போன்ற மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளுக்கு போஸ்டல் ஆர்டர் தான். 

அதுபோல,  பூர்த்தி செய்த  விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்பனும். பதிவு தபால், உரிய முகவரிக்கு சென்றடைந்து, அங்கிருந்து, ஒப்புகை அட்டை எனப்படும் அக்னாலட்ஜ்மென்ட் அட்டை  திரும்ப வரும் வரை ஒரு வித பதட்டம் அன்றைய வேலை தேடும் இளைஞர்களிடம் இருக்கும். 

போஸ்டல் ஆர்டர், அக்னாலட்ஜ்மென்ட் கார்டு எல்லாம் 90ஸ் தலைமுறையினர் வரையிலும் அறிந்தவை.

இப்போது ஆன்லைனிலேயே போட்டோ ஸ்கேனிங் அட்டாச் செய்து, விண்ணப்பம் பூர்த்தி செய்து, கட்டணத்தையும் கூட ஆன்லைனிலேயே செலுத்த முடிகிறது. இது, டிஜிடல் இந்தியாவின் வளர்ச்சி.

மொபைல் போன்களின் பயன்பாடும் 5ஜி வரையிலான இணைய வேகத்தின் ஓட்டத்தில் மிதிபட்டு, தந்தி சேவை மூச்சை நிறுத்தி விட்டது. தெருவோர சிவப்பு நிற தபால் பெட்டிகளும் மறைந்து போய் விட்டன.



விண்ணப்பம் போன்றவற்றை கவரில் வைத்து, அதன் எடைக்கேற்ப தபால் தலைகளை ஒட்டி அனுப்பனும். அதாவது, இன்றைய கூரியர் போல. பணத்துக்கு பதில் தபால் தலை. இந்த தபால் தலைகளின் மதிப்பு குறைவாக ஒட்டி அனுப்பினால், தபாலை பெறுபவரிடம் போஸ்ட்  மேன் அபராதம் வசூலிப்பார். 

தபால் தலைகளை சேகரிப்பதே, 90ஸ் மாணவர்களிடம் பெரிய கிறக்கம் உண்டு. அதிலும், வெளிநாட்டு தபால் தலைகளை சேகரித்து வைத்திருந்தால், நண்பர்கள் மத்தியில் ஹீரோவாக உலா வரலாம். 

தபால் தலைகள், தபால் அட்டை, இன்லேன்ட் லட்டர், ஏர் மெயில் என்ற வார்த்தைகள் எல்லாம் காலாவதியாகி விட்டன. தபால் துறைக்கு இப்போதெல்லாம் என்ன வேலை இருக்கிறது என்றே பலரும் கருதுவோம். ஆனால், இன்னமும் தபால் துறை அதே துடிப்புடன் தான் இருக்கிறது, போஸ்ட்மேன் காந்தி போல. 

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் இருந்து ஆர்சி புக், டிரைவிங் லைசன்ஸ்,ரேஷன் ஸ்மார்ட் கார்டு, வங்கி ஏ.டி.எம். கார்டு, ஆதார், பாஸ்போர்ட் போன்றவை தபால் வாயிலாகத்தான் வருகின்றன.

பரபரப்பான சென்னையில் போஸ்ட் உமன்களை அதிகமாக பார்க்க முடிகிறது. புதிதாக நான் குடி பெயர்ந்திருக்கும் பகுதியில் சேவை அளிப்பவரும், பெண் தான். 



சென்னையின் பரபரப்பான பகுதி தான். ஆனாலும் கிராம பஞ்சாயத்து. ஐ.டி. பூங்கா அமைந்திருக்கும் சிறுசேரியே ஊராட்சி என்றால் நம்ப முடிகிறதா?

எங்கள் பகுதியில் அனைவரையும் அறிந்து வைத்திருக்கிறார், எங்கள் போஸ்ட் உமன். தபால் வந்தால் கூட, முன்கூட்டியே செல்போனில் தகவல் (டெக்னாலஜி வளர்ச்சி) சொல்லி விடுவார். அதாவது 90ஸ்களில் நான் பார்த்த போஸ்ட் மேன் காந்தி போலவே.

கொசுறு தகவல், என் மாமனாரும் முன்னாள் போஸ்ட் மேன் தான்.

#நெல்லை_ரவீந்திரன்