எம்.ஜி.ஆர் நடிப்பில் 70 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் மந்திரி குமாரி. ராஜகுருவான எம்.என்.நம்பியாரின் மகன் எஸ்.ஏ.நடராஜன் கொள்ளைக்காரன். எஸ்.ஏ.நடராஜன் இறந்ததும் கொள்ளை கும்பலுக்குள் தகராறு வரும். அப்போது அந்த கும்பலில் ஒருவர் வந்து, சதா சர்வகாலமும் சமையலறையில் கிடக்கிறேனே எனக்கு என்ன கிடைக்கும்? என்பார். உடனே, நீ தான் உணவுத் துறை மந்திரி என்பார்கள். நான் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருக்கிறேனே எனக்கு என மற்றொருவர் கேட்க, நீதான் போக்குவரத்து மந்திரி என்பார்கள்.
சுதந்திரம் பெற்று முதலாவது பொதுத் தேர்தல் கூட நடக்காத நிலையில் வெளியான இந்த படத்தின் கதை வசனம் இன்றைய அரசியலுக்கும் கச்சிதமாக பொருந்தும். குண்டலகேசி காப்பியத்தை தழுவி இந்த கதை மற்றும் வசனம் எழுதியபோது கலைஞரின் வயது 27.
பின்னர் பராசக்தி, மனோகரா, பூம்புகார் என அவரது காவியங்கள் ஏராளம். எம்ஜிஆர் சிவாஜி எஸ்எஸ்ஆர் தொடங்கி விஜயகாந்த், வினீத், வடிவேலு, பிரசாந்த் வரை அவரது வசனத்தை பேசியவர்கள் தான். 1950களின் கிருஷ்ணன் பஞ்சு துவங்கி 1980களில் எஸ்ஏ சந்திரசேகர் போன்றவர்களை கடந்து 2000த்துக்கு பிந்தைய தமிழ் திரைப்பட இயக்குநர்கள் வரை பார்த்தவர்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே கோலோச்சிய காலகட்டத்தில், அதுவும் காங்கிரசை சேர்ந்த ஒரு தயாரிப்பாளரின் படத்துக்குள் கடவுள் மறுப்பு கொள்கைளை புகுத்துவது நினைத்து பார்க்க முடியாத சூழ்நிலையில், பராசக்தியில் அதை சாதித்தார்.
இளமைப் பருவத்தில் தொடங்கிய அந்த போர்க்குணம் தொடர்ந்ததாலேயே ஏழு தசம ஆண்டுகளாக தமிழக அரசியலில் உதய சூரியனாக ஒளிர்ந்தார். 1956 துவங்கி 2016 வரை அவர் மட்டுமே உதய சூரியனை பெற்றவர். இந்தியாவில் வேறு யாருமே இவ்வளவு நீண்ட காலம் சட்டப்பேரவை அங்கத்தினராக இருந்திருக்க முடியாது.
ராஜாஜி, காமராஜர், ஆர். வெங்கட்ராமன், பக்தவத்சலம், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மூப்பனார், ராமதாஸ், விஜயகாந்த், ஓ.பி.எஸ் வரை மாநில அரசியலிலும்,
நேரு, இந்திரா, சரண்சிங், மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், குஜ்ரால், தேவேகவுடா, என்.டி.ராமராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங், சோனியா, மோடி என தேசிய அரசியலிலும் பல தலைமுறைகளை பார்த்தவர்.
ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் அவரது அரசியல் நகர்வைத்தான் தமிழகம் எதிர்பார்த்து காத்திருந்தது.
எழுத்து, பத்திரிகை துறையிலும் கலைஞரின் சாதனை சாமான்யமானதல்ல. கல்லூரி, பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் கூட, அவரது தமிழ் சொல்லாடல்களுக்கு முன் தூசி.
காலை நாளிதழ்களில் எந்த செய்தி, எப்படி தலைப்பாக வரும் எப்போது அதை தந்தால் சரியாக இருக்கும் என்பதை எல்லாம் அறிந்து அதற்கேற்ற செய்திகளை தரும் அரசியல் தலைவர் கம் பத்திரிகையாளர் அவர் ஒருவரே.
ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையிலும் அரை நூற்றாண்டாக ஒரு அரசியல் கட்சியை தனது கட்டுக்குள் வைத்திருந்து, நான்கைந்து தலைமுறை மக்களின் விருப்ப தலைவராக இருந்து, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியல் வரை நீண்ட காலம் தன்னை முன்னிலைப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.
கலைஞரின் அரசியலில் பலருக்கும் பல வித கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவரது 60 ஆண்டு ஆளுமை அனைவரையும் நிச்சயமாக வியக்கச் செய்யும்.
லட்சத்தில் ஒருவருக்கே சிறப்பான சொல்லாடல்களுடன் தமிழை பிழையற எழுதும் பாக்கியம் வாய்க்கும். லட்சத்தில் ஒருவருக்கே சிறப்பாக வசனங்களையும், புத்தகங்களையும் எழுதும் ஆற்றல் அமையும். லட்சத்தில் ஒருவருக்கே சிறப்பான மேடைப் பேச்சு கை வரும். லட்சத்தில் ஒருவருக்குத்தான் மக்கள் செல்வாக்குடன் அரசியலிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தும் வரம் கிடைக்கும்.
எழுத்து, இலக்கியம், சினிமா, அரசியல், மக்கள் செல்வாக்கு, நீண்ட அரசியல் அனுபவம் என அனைத்தையுமே பெற்ற கலைஞர், கோடியில் ஒருவர்.
முக்கால் நூற்றாண்டுக்கு மேல் கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருந்தாலும், கருணா மூர்த்தியான இறைவனின் கருணை அவர் மீது அதிகம். ஒரு வகையில் பார்த்தால், அவரே ஆண்டவர் தானே...?
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment