Sunday 29 January 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -42

எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், இலக்கியவாதி, முதல் தமிழ்தேசியவாதி இப்படி ஏராளமான முகம் கொண்டவர். காலத்தால் அழியாத திரைப்பாடல்களை படைத்ததில் கண்ணதாசனின் முன்னோடியான கவிஞர் கா.மு.ஷெரீப், தமிழ் திரையுலகின் பவளம்.

'முதலாளி' படத்தில் "ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே..."

'அன்னையின் ஆணை' படத்தில் "அன்னையை போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை..."

'பணம் பந்தியிலே'  படத்தில் "பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே, இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே, பிழைக்கும் மனிதனில்லே..." 

'டவுண் பஸ்' படத்தில் "சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன்.."

"வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா..."

"ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா..."

"வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்.."


இப்படி 1950களின் இறுதி துவங்கி 1960களின் துவக்கம் வரை சுமார் நானூறு பாடல்களை எழுதிய கா.மு.ஷெரீப்பின் சொந்த ஊர் தஞ்சை. பள்ளிக்கூடம் பக்கமே  போகாத இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். 'ஔி', 'சாட்டை', 'தமிழ் முழக்கம்' என பத்திரிகைகளை நடத்திய பத்திரிகை ஆசிரியர்.


நாடகம், கவிதை, அரசியல், கட்டுரைகள், இலக்கியம், இஸ்லாமியம் என பல வகைகளில் சுமார் 50 புத்தகங்களை எழுதி இருக்கிறார். சீறாப்புராண சொற்பொழிவுகள் பற்றி புத்தகம் எழுதி இருக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி 'கருணாநிதி 63' என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். பல கவிதை தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார். 'ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ்', 'கண்ணகி', 'விபீஷணன் வெளியேற்றம்', 'நபியே எங்கள் நபியே' என பல புத்தகங்ளை எழுதிய இவர் சீதக்காதி பதிப்பகம் மூலம் பதிப்பாளராகவும் இருந்தவர்.



இவரது முதல் கவிதை 1933ல் குடியரசு பத்திரிகையில் வெளியானது. காங்கிரஸில் இருந்த இவர் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அதே நேரத்தில் தீவிரமான தமிழ் பற்றாளர். தமிழ் தேசியம் பேசுபவர்களின் முன்னோடி. தமிழ்நாட்டுக்கு திருத்தணி என்ற வட எல்லையை மீட்டுத் தந்த ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தில் பின்னாளில் இருந்தார். திராவிட இயக்க தலைவர்களுடனும் நல்ல நட்பு உண்டு.



1950களில் திரையுலகில் மிகப் பிரபலமாக இருந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சுந்தரம், பாடலாசிரியர் மருதகாசி போன்றவர்களுடன் நல்ல பரிச்சயமானவர். கா.மு.ஷெரீப்பின் முதல் பாடல் இடம் பெற்ற படம் 'பொன்முடி'. அந்த படம் 1950ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. அதன் இயக்குநர் பிரபல ஆங்கிலேயரான எல்லீஸ் ஆர்.டங்கன். 


கலைஞர் கருணாநிதியை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான். அந்த காலத்தில் எல்லாம் கதாசிரியர்  மாதிரியானவர்களை எல்லாம் மாத சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்வது தயாரிப்பு நிறுவனங்களின் வழக்கம். அது நாடக கம்பெனிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியின் முதல் படியாகவும் சொல்லலாம். அப்படி ஐநூறு ரூபாய் மாத சம்பளத்தில் கருணாநிதியை சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கா.மு.ஷெரீப் தான் சேர்த்து விட்டார். நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதியே இதை குறிப்பிட்டிருக்கிறார்.

எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமான கருணாநிதி கதை வசனத்தில் வெளியான 'மந்திரி குமாரி' படத்தில் "உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிது போவது போல்..." என்ற பாடலை எழுதியவர் கா.மு.ஷெரீப்.


எம்ஜிஆரின் 'சர்வாதிகாரி', எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த 'கூண்டுக் கிளி' சிவாஜியின் 'மக்களை பெற்ற மகராசி', வில்லன் நடிகர் நம்பியார் நாயகனாக நடித்த 'திகம்பர சாமியார்', தியாகராஜ பாகவதரின் 'அமரகவி' இப்படி அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருக்குமே பாடல்களை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். 

இவரது பாடல்களை தியாகராஜ பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சவுந்தரராஜன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, லீலா என அன்றைய முன்னணி பாடகர்கள் அனைவரும் பாடி இருக்கிறார்கள்.

இதுபோலவே ஜி.ராமநாதன், டி.ஆர்.பாப்பா, கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு என 1950களின் பிரபல இசையமைப்பாளர்கள் பலரும் இவரது பாடலுக்கு இசையமைத்திருக்கின்றனர். 

கவிஞர் கா.மு.ஷெரீப் என்றதும் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்த 'முதலாளி' படத்தில் வரும் "ஏரிக் கரையின் மேலே போறவளே பொன் மயிலே..." பாடலைத்தான் எல்லாரும் சொல்வார்கள். அந்த பாடல் பற்றி ஒரு கூடுதல் தகவல்.

அப்போதெல்லாம் ஆறேழு நிமிடம் வரை  மிக நீளமான பாடல்கள் வெளிவருவதுண்டு. சினிமா பாடல்களை  வட்ட வடிவமான ரிக்கார்டு முலமாகவே கேட்க வேண்டும். சின்ன பாடல் ஒரு பக்கத்தில் முடிந்து விடும். நீளமான பாடலாக இருந்தால் ஒரு பக்கம் முடிந்ததும் ரிக்கார்டு எனப்படும் இசைத்தட்டை மாற்றி போட்டு மீதி பாட்டை கேட்க வேண்டும். அது போன்ற இரண்டு பக்க பாடல்தான் ஏரிக்கரை மேலே பாடல்...

தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு மூத்தவர் கா.மு.ஷெரீப். அவர் கவியரசர் என்றால் இவரை கவிஞர் என்றே அழைப்பார்கள். பாடல் வாய்ப்புக்காக இவர் யாரையும் தேடிச் சென்றதும் கிடையாது. பாடலுக்கு இவ்வளவு சம்பளம் என கறாராக பேசியதும் கிடையாது.

இஸ்லாமியராக பிறந்தாலும் வாழ்நாள் முழுக்க சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டவர், கா.மு.ஷெரீப். சினிமாவை தாண்டி சிறந்த எழுத்தாளராகவும்  இலக்கியவாதியாகவும் சிந்தனையாளராகவும் மனித நேயராகவும் வாழ்ந்தவர் கவிஞர் கா.மு.ஷெரீப். 

எழுத்தாளர்களை வந்து சேரும் வறுமை வாட்டியபோதும் மனம் தளராதவர். கருணாநிதி,  எம்ஜிஆருடன் நல்ல நட்பு இருந்தாலும் அவர்கள் பதவியில் இருந்தபோது, எந்தவித உதவிக்கும் அவர்களிடம் செல்லாத மனிதர். 1960களிலேயே திரைப்பாடல்களின் வரிகள் தாறுமாறாக மாறியதும் சினிமாபாடல்கள் எழுதுவதையே நிறுத்திக் கொண்டவர்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: