Monday 15 March 2010

முதல் பிரசவம்

நுண்ணிய வெண்மணியை
கருவாகக் கொண்டாள்
கருவில் உருவம்
செய்து வைத்தாள்

ஐயிரு திங்களாய்
உயிர் வளர்த்தாள்
மின்னல் கீற்றாய்
வலி பொறுத்தாள்

சூடாக அருந்தினால்
சுட்டுவிடும என்று
அனைத்துமே
சூடாற்றி அருந்தினாள்

பிஞ்சின் நலனை
நெஞ்சில் கொண்டாள்
பஞ்சு கால்கள் உதைப்பில்
பிரபஞ்சம் மறந்தாள்

மருந்துடனே தாதியும்
தந்த நாளும் வந்தது
மருத்துவமனையை
நாடியே சென்றாள்

ஓராயிரம் வேதனையை
ஈருதடில் தேக்கினாள்
வானவர் உலகை
எட்டி பார்த்து வந்தாள்

தாமரை அவளின்
மடியில் அல்லி மலர்ந்தது
அமுத மொழியாளின்
அழகு முகம் ஒளிர்ந்தது

முதல் பிரசவம்
மறு பிறவி என்றாலும்
அதுவும் ஒரு
சுகம் தானே?

= வை.ரவீந்திரன்


No comments: