Tuesday 6 April 2010

தமிழன் என்று ஒரு இனம் உண்டு

தமிழன் என்று ஒரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவர்தம் மொழியாம் .....
இந்த பாடலை கேட்டதும துவண்டு கிடக்கும் தமிழனின் தோள்கள் தினவு எடுக்கும். தற்போது, இந்த வரிகள் எல்லாம் தமிழன் என்ற இனத்துக்கு பொருத்தமானவை தானா?
இது சற்றே ஆய்வுக்கு உட்பட்ட விஷயம்.
தமிழனின் பூர்வீக பூமியில் இருந்து (அதாங்க .... நம்ம சிங்கார தமிழ்நாட்டை விட்டு) சற்று வெளியே இருந்து பார்த்தால் தான் தமிழனின் குணங்களை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.
ஏன் என்றால், தமிழ் நாடு முழுவதும்இப்போது வாழ்த்து கோஷமும் பாராட்டு விழாக்களும் சேர்ந்து கண்ணையும்கருத்தையும் குருடாக்கி விட்டன. அவ்வப்போது நடக்கும் போர்க்கள காட்சிகள் மற்றும் கொலை களங்கள் அனைத்தும் வருங்கால முதல்வர் விஜய் படத்தை நினைவூட்டுகின்றன. அதனால், தமிழ் நாட்டை தெளிவாக பார்க்க வேண்டுமானால் வெளியே இருந்து தான் உற்று நோக்க வேண்டும்.
சரி விசயத்துக்கு வருவோம்.
இந்தியாவிலே அதிக அளவில் தியட்டர்கள் உள்ள மாநிலம் தமிழ் நாடு தான். பல நகரங்களில் தியட்டர்களை இடித்து வணிக வளாகங்கள் கட்டிய போதிலும் தமிழ்நாட்டுக்கே முதலிடம். தமிழனின் சினிமா, தொலைக்காட்சி ஆர்வம் காரணமாக டிஸ்கவரிசேனல் கூட தமிழ் பேசுகிறது.
கள்ளுண்ணாமை என தனி அதிகாரம் படைத்த தெய்வ புலவர் வள்ளுவர் தோன்றிய தமிழ்நாட்டில் தான் அதிக அளவு சாராயக் கடைகள் உள்ளன. அதுவும் முத்தமிழ் அறிஞர் என்று தன்னை தானே பாராட்டிக் கொள்ளும் மூ... அறிஞர் ஆட்சியில்.
உங்களுக்கு தெரியுமா? ராட்சசனை போலவும் காந்தியை கொன்ற கோட்சே போலவும் உருவக படுத்தப்படும் நரேந்திர மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் மது வாசனைகிடையாது. மது வருமானம் இல்லாமலேயே தொழில் துறையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கள்ளுன்னாமையை வலியுறுத்திய தமிழனின் பூமியில் காவிரியும் முல்லை பெரியாரும் ஓடுகிறதோ இல்லையோ, வீதி தோறும் சாராய ஆறு தாரளமாக ஓடுகிறது.
மது மயக்கத்தில் மதி மயங்கி கிடக்கிறான், மானமிகு தமிழன்.
புலால் மறுத்த வள்ளுவரின் பூமியில், இந்தியாவிலேயே அதிக கசப்பு கடைகள் உள்ளன. தமிழுக்கும் தமிழனுக்கும் தனது உயிரை கொடுப்பதாக கூறும் அனைத்து தமிழர்களும் தமிழனின் தொடையில் 'திரி' திரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திரை கடல் ஓடி திரவியம் தேடிய தமிழன், கடல் கடந்து நாடுகளை வென்ற தமிழன், இப்போது கூனிக் குறுகி நிற்கிறான், இலவசத்துக்காக.
அரிசி, வேட்டி, சேலை, டி.வி. வாக்களிக்க பணம் என தன்மானத்தை இலவசங்களுக்கு அடகு வைத்து விட்டு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறான். தமிழனின் சிறப்பு குணங்கள் 'தவறி'விட்டன.
போர்க்குணம் இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, வேற்று நாகரிங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல், தொலை நோக்கு சிந்தனை இல்லாமை, தனி நபர் துதி பாடி சுய சிந்தனை இல்லாமை இப்படி ஏராளமான '(ஆ)மை' ஓட்டுக்குள் முடங்கி கிடக்கிறான்.
தெலுங்கானாவுக்கு ஐந்து லட்சம் தெலுங்கு மாணவர்கள் திரண்டனர். ரத்த சொந்தமான ஈழத் தமிழனை காக்க ஐந்து ஆயிரம் பேர் கூட திரளாமல் போர் குணத்தை இழந்து நிற்கின்றான், மானமிகு மறத் தமிழன்.
காகித புலியாகவே இருக்கும் தமிழன், வரிப் புலியாவது எப்போது? ரசிகர் மன்றங்களை கட்டிக் காக்கும் தமிழன் மத்தியல் சிந்தனை மன்றங்களும் தமிழ் ஆய்வு மன்றங்களும் பெருகாதது ஏன்?
கேள்விகள் எழுந்தால் மட்டுமே தமிழன் வாழ்வில் மாற்றம் வரும்.சிந்தித்தால் மட்டுமே தமிழனுக்கும் தமிழுக்கும் விடியல் நிகழும். வருங்கால தமிழ் தலைமுறைக்காக இப்போதே சிந்திப்போம்.
சிந்தனை திறன் ஓய்வு எடுத்தால், அதில் பாசி படர்ந்து உதவாமல் போகும்.
'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சி சாவர் -இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே .....' 

= வை.ரவீந்திரன் 

1 comment:

PALDURAI said...

தமிழன் என்று ஒரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவர்தம் மொழியாம் .....

இந்த பாடல் இன்றைய காலத்துக்கு பொருந்தாது தோழரே .வேண்டுமென்றால் மானடவும் ,மயிலாடவும் ,ஜோடி மாறிய ஜோடி பொருத்தம் பார்க்கவும், ஆங்கிலத்தில் தமிழ் பேசவும் , pizza ,coke ,பெப்சி ,KFC ,Noodles ,சாப்பிடவும் ,டாஸ்மாக் ல் தவம் கிடக்கவும், ரஜினி படத்துக்கு பாலபிசேகம் செய்யவும் ,பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பவும் ,ஆரியர்களின் மூட பழக்க வழக்கங்களை இறுக பற்றி கொண்ட மூட தமிழனக்கு இந்த பாட்டு எங்கே புரியபோகிறது.
தோழரே என்னும் எழதுங்கள்

உமா , திருவனந்தபுரம்