Tuesday, August 19, 2014

வெயிலோடு விளையாடி .... வெயிலோடு உறவாடி .....

வெயில்.

நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. வெயிலை சுவாசித்து வெயிலை தோழனாக பாவித்து வெயிலோடு விளையாடிய அனுபவம்  நிச்சயமாக இருக்கும். ஜன்னல் வழியே நூலிழையாக வீட்டினுள் நுழைவதும் படிக்கட்டுகளில் வழிந்து செல்வதும் வயல் வெளியில் வெளிச்சம்  பாய்ச்சுவதும் வெயிலின் பன்முகங்களில் சில முகங்கள். ஆடு மாடுகளின் முதுகில் தவழும் வெயில். சாலையில் சறுக்கி செல்லும் வாகன  முகடுகளில் மின்னல் கீற்றை ஏற்படுத்தும் வெயில் என வெயிலோடு வளர்ந்த மனிதர்கள், நாம்.

ஆனால், வெயிலுக்கு பெயர் பெற்ற பாலைவன வெயில் முற்றிலும் மாறுபட்டது. 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை உள்வாங்கி நிற்கும்  மூர்க்கத்தனமான வெயிலையும் அதை தாங்கி நிற்கும் பாலைவனத்தையும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் காணலாம். அங்குள்ள தார்  பாலைவனத்தில்தான் கரைகளற்று ஓடும் நதியென வெயில் பரவி நிற்கிறது. திக்கு தெரியாமல் வியாபித்து நிற்கும் வெயிலை பிரதிபலிக்கும  மணற்பரப்புடன் கூடிய தார் பாலைவனம், தனி உலகம். சூரியனுக்கு மிகவும் பிடித்த பகுதி.

அதிகாலையில் கடலில் குளித்தெழும் உதயசூரியனை கண்டு மகிழ்ந்திருப்போம். பாலைவன மணலில் விழித்தெழும் சூரியனை பார்த்து  இருக்கிறீர்களா? அதை தார் பாலைவனத்தில் காணலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தார் பாலைவனம்.  அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை 15 கி.மீ. மார்ச் மாதத்தில் கூட அதிகாலை 6 மணியை தாண்டியும் இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. இருட்டு என்றால்  குறைவான வெளிச்சம் அவ்வளவு தான். அந்த குறைந்த வெளிச்சத்திலும் பாலைவன காற்றுடன் கலந்து மணல் துகள்கள் எழுந்து நின்று  வரவேற்கின்றன.இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட மஞ்சள் நிற மணல் துகள்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொலைதூரத்தில் மிக  மெல்லிய புள்ளியாக தோன்றி மெதுமெதுவாக சூரியப்பந்து விரிவடைய துவங்குகிறது. அது, பாலைவன சூரியோதயம். கடலில் குளித்தெழும்  சூரியனை போலவே பாலைவன மணலில் குளித்தெழுகிறது, சூரியன். மணலில் இருந்து எழும்பிய வேகத்தில் சில மணித் துளிகளிலேயே தனது  பெரிய கால்களால் வானத்தை நோக்கி சரசரவென ஏறத் துவங்குகிறது. காலை நேர மஞ்சள் ஒளிச் சிதறல் பட்டதும் மணல் பரப்பில் புதுப் பொலிவு  கூடுகிறது. அந்த மணலை ஆவலுடன் அள்ளி எடுத்தால் காதலனை தேடிச் செல்லும் காதலியாக ஆற்றாமையுடன் வந்து சேரும் காற்று அதை  கலைத்து விடுகிறது.

வளைந்து யெளிந்து செல்லும் காற்றின் காலடித் தடத்தை பாலைவன மணலில் தெளிவாக பார்க்கலாம். காற்றின் காலடி தடங்கள் தான் பாலைவன  மணலில் ஓவியமாகவும் அலை போன்ற கோடுகளாகவும் கிடக்கின்றன. காற்றின் மூர்க்கம் அதிகமாகும்போது ஒரு மணல் குன்றையே பெயர்த்து  எடுத்து சற்று தள்ளிச் சென்று வைக்கிறது. பாலைவனத்தில் மணல் குன்றுகளை கட்டுவதும் அழிப்பதுமாக இருக்கும் காற்றின் சேட்டையை ரசித்துக்  கொண்டிருக்கும்போதே வியர்த்துக் கொட்டுகிறது.

சுறு சுறுவென வானில் ஏறிய சூரியன், சில மணி நேரத்துக்குள் 40 டிகிரி செல்சியசில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடுகிறது. வெயிலையே குடித்து  வளர்ந்த வெப்ப பிரதேசத்து மனிதனாக இருந்தால் கூட, அந்த வெயிலை எதிர் கொள்வது மிகவும் கடினம். பாலை வனத்தில் பகல் நேரம் என்பது  சிக்னலுக்கு காத்திருக்கும் சமயத்தில் ஊர்ந்து செல்லும் சரக்கு ரயில் போன்றது. மணல் குன்றுகளுக்கு இடையே தோன்றும் கானல் நீர் கூட அருகில்  செல்லும் வரை நீரோடை போல காட்சியளித்து மாயாஜாலம் செய்கிறது.பாலைவனத்தில் குவிந்து கிடக்கும் மிக நுண்ணிய மணல் துகள் ஒவ்வொன்றும் ஆச்சரியம். மணல் துகள்களை தன்னுள் வைத்துள்ள பாலைவனம்  ஒரு புரியாத புதிர். உள்ளே தொலைதூரம் சென்று விட்டால் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து ஆகாரமின்றி அவதிப்பட நேரிடலாம். அதை  நினைத்தால், சங்க இலக்கியங்களில் பாலை நிலத்தில் செல்லும் காதலர்களின் நிலைமை காட்சியாக மனத் திரையில் விரிகிறது.

ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் என இந்தியாவின் 4 மாகாணங்கள் மற்றும் பஞ்சாப், சிந்து என பாகிஸ்தானின் 2 மாகாணங்களில் விரிந்து  பரவி கிடக்கும். தார் பாலைவனத்தின் தொத்த பரப்பளவு 2 லட்சம் சதுர கி.மீட்டர். தார் பாலைவனத்தை ஆரவல்லி மலை சூழ்ந்திருக்கிறது. எனினும்,  ராஜஸ்தான் என்ற பெயருடன் மட்டுமே தார் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் அணுகுண்டு சோதனைகளுக்கு களம் அமைத்து தருவதும் தார்  பாலைவனம் தான் என்பது கூடுதல் தகவல்.

= வை.ரவீந்திரன்,
    புதுச்சேரி.
Post a Comment