Friday, September 19, 2014

மோடிக்கு ஒரு கடிதம்

இந்தியாவின் பிரதமராக தாங்கள் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்து விட்டன. திரைப்பட உலகில் மட்டுமே வெள்ளி விழா, வெற்றி விழா போன்றவை கொண்டாடப்படுவது வழக்கம். திரைப்படத்தை பார்த்தே வளர்ந்து வரும் சமுதாயம் என்பதால் 100 நாள் என்பது முக்கியமான தருணமாகவே தெரிகிறது. அதனால், 100 நாளை கடந்த தங்களுடைய ஆட்சிக்கு வாழ்த்துக்கள். உலக அரங்கில் இந்தியாவின் ஊழல் முகமே பிரகாசமாக தெரிந்தபோது மிகவும் வருத்தம் அடைந்த உள்ளங்களில் நானும் ஒருவன். அதனாலேயே, ஆட்சி மாற்றம் வர வேண்டும். அதுவும் தங்களைப் போன்ற ஒரு தலைவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்னைப் போன்றவர்களின் ஆசைப்படியே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தை கைப்பற்றி விட்டீர்கள். இது, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத சாதனை. 1991ம் ஆண்டு ராஜீவ் கொல்லப்பட்ட சமயத்தில் நடைபெற்ற தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சியால் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. தங்களுடைய அரசியல் முன்னோடி வாஜ்பாயிக்கு கூட இந்த அளவுக்கு அபரிமிதமான வெற்றியை மக்கள் வழங்கவில்லை. ஆனால், தங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றால் அதற்கு காரணம் நீங்கள் அல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் புரையோடிப் போன ஊழல்கள் தான்.

நம்முடைய மக்கள் மிகவும் நல்லவர்கள். குறிப்பிட்ட அளவுக்கு ஊழல் செய்வதை பொறுத்துக் கொள்வார்கள். அதுவே, லட்சம் கோடி, கோடி கோடி என புறப்பட்டால் எரிமலையாய் பொங்கி விடுவார்கள். காமன்வெல்த் விளையாட்டு ஊழல், மும்பையில் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், ஈராக்கில் உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழல், இந்தியாவின் ஊழல் புகழை வானளாவ பரப்பிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க (கோல்கேட்) ஊழல் என அரசின் சாதனைகளைப் போல ஊழலும் தனியாக பட்டியலிடப்படும் அளவுக்கு நீண்டு கிடந்தது. அதைப்பார்த்து வெறுத்துப் போய் இருந்த இந்திய மக்கள் அனைவரும் எரிமலையாக பொங்கியதால் காங்கிரஸ் பொசுங்கிப் போனது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு கூட காங்கிரசுக்கு தகுதி இல்லை என்று தீர்மானித்து விட்டனர். மாநிலம் தோறும் வான் வெளியில் பரந்து சென்று நீங்கள் ஆற்றிய எழுச்சி உரையும், ஆயிரக்கணக்கான டீக்கடைகளில் நேரடி ஒளிபரப்பில் தோன்றி அளவளாவிய அணுகுமுறையும் மக்களுக்கு வித்தியாசமான அனுபவங்கள். அதனால் தான், 2009ம் ஆண்டு முதல் மாற்றத்தை தேடி அலைந்த மக்களின் மனதில் சரித்திர புருஷராக தோற்றம் அளித்தீர்கள். தங்களால் அனைத்தையும் மாற்றிக் காட்ட முடியும் என்று நம்பினார்கள். ஆனால், நடப்பது என்ன.....?

ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு உங்களுடைய செயல்பாட்டை பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. புதிய முகமூடியுடன் பழைய ஆட்சியே தொடருகிறதோ என்ற சந்தேகமும் சில சமயங்களில் எழுகிறது. ஊழலுக்கு எதிரான கோஷத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த நீங்கள் இந்த 100 நாட்களில் ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள். ஒருவேளை அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால், அது நீதிமன்றங்களின் தலையீட்டால் நடந்தவைகளாகத்தான் இருக்கும். ஆட்சிக்கு வந்ததில் இருந்து 10 மாநிலங்களுக்கு மேல் கவர்னர்களை மாற்றி விட்டீர்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்கும் தங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குறிப்பாக மேற்கு வங்க கவர்னர் நாராயணன், கேரள கவர்னர் ஷீலா தீட்சித் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. அதன்பிறகு, அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டெல்லியில் 15 ஆண்டுகள் கோலோச்சி காமன்வெல்த் விளையாட்டின்போது ஊழலில் புகுந்து விளையாடிய ஷீலாவுக்கு சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு கவர்னர் பதவியை முந்தைய காங்கிரஸ் அரசு அளித்தது. இது, ஊரறிந்த ரகசியம். தற்போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷீலா தீட்சித் மீது எடுத்த நடவடிக்கை என்ன? மற்ற ஊழல்களும் எந்த நிலையில் இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, நடுத்தர மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டு இருக்கிறது. ரெயில் கட்டண உயர்வு, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு என தொடரும் சுமைகளால் மக்கள் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தலை மீது அழுத்தும் பாறாங்கல்லின் சுமை அப்படியே இருந்தால் பழகி விடும். அதை சற்று அசைத்து விட்டு மீண்டும் வைத்தால் வலி முதலில் இருந்து தொடங்கும். அதைத்தான் தாங்கள் செய்திருக்கிறீர்கள். சுமையை இறக்கி வைக்காவிட்டால் கூட பரவாயில்லை. அதை அசைக்கும் பணியைத்தான் செய்திருக்கிறீர்கள். வருமான வரி உச்ச வரம்பிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. தமிழர்களை விரோதியாக பார்க்கும் ராஜபக்சே உடன் கை குலுக்குகிறீர்கள். அது, ஆசியாவில் இந்தியாவை வல்லரசாக நிரூபிக்க எடுக்கும் ராஜ தந்திரம் என்று தங்களின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அப்படியே இருக்கட்டும். நேபாளம், ஜப்பான், அமெரிக்கா என்று தங்களுடைய உலகளாவிய பயணங்கள் தொடருகின்றன. அப்படியே, உள்ளூரில் இருக்கும் இந்தியர்களையும் சற்று கவனத்தில் கொண்டால் நல்லது.

அதே நேரத்தில், ஊழலைக் கண்டு பொறுக்க மாட்டோம் என்றும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா என்று மக்களிடம் அனுமதி கேட்டுக் கொண்டும் நாளை கடத்திக் கொண்டு இருப்பது நியாயமா? உண்மையில், தங்களின் உரை வீச்சும் பேச்சாற்றலும் இன்னமும் கூட வசீகரமாக இருக்கிறது. இது, தங்களை தயார் படுத்தும் ஹைடெக் குழுவினரின் அதிகப்படியான திறமையாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் 60 சதவீதத்துக்கு மேலான மக்கள் இன்னமும் இதுபோன்ற ஹைடெக் வாசனையை நுகராமலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்களுடைய இத்தகைய போக்கை காணும்போது 40 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா நாவலில் தேசிய தலைவராக வரும் ‘ஜீவா’ என்ற பச்சை நிற ஸிந்தடிக் கதிர்வீச்சு முப்பரிமாண பிம்பம் தான் நினைவுக்கு வருகிறது. உங்களை ஆட்டுவிக்கும் ஹைடெக் குழுவினரை புரட்சி படையினர் எனப்படும் ரவி மற்றும் மனோவாக பார்க்கத் தோன்றுகிறது.

தங்களிடம் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை மக்கள் வைத்திருக்கின்றனர். அது கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்துப்போவதை அவர்களால் ஜீரணிக்க முடியாது. அதன் வெளிப்பாடே இடைத் தேர்தல் தோல்விகள். டெல்லியில் எம்பி தொகுதிகளை மொத்தமாக அள்ளி எடுத்து 4 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. ஆனால், அங்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் தயங்குகிறீர்கள் என்றால் மக்கள் எந்த அளவுக்கு தங்களுடைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியை இயக்கிய பெரு முதலாளிகள் தான் அந்த ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதை அறிந்து தங்களை முன்னிறுத்தினார்களோ என்ற சந்தேகமும் சாமான்ய இந்தியனின் இதயத்தில் துளிர் விடுவதை உங்களால் காண முடியவில்லையா?

இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்பது தேசப்பிதா மகாத்மாவின் கருத்து. இன்றளவும் அதுவே நிஜம். எனவே, தங்கள் மீது எத்தகைய எதிர்பார்ப்பை சாமான்ய இந்தியன் வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மோடி என்றால் சூப்பர் ஹீரோ என்ற இமேஜ் பதிந்து விட்டது. எனவே, ஊழலுக்கு எதிராக அதிரடி சாகசங்களை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அத்துடன், கடையனுக்கும் கடைத்தேற்றம் என்று போதித்த காந்தியடிகள் அவதரித்த மண்ணில் பிறந்த நீங்கள், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், பள்ளிக் குழந்தைகளிடம் ஆசிரியர் தினத்தன்று நீங்கள் கூறியது போல, 2024ம் ஆண்டில் தான் தங்களை வீழ்த்துவது குறித்து அரசியல் எதிரிகள் யோசிக்க அவகாசம் கிடைக்கும். தங்களுக்கு, இன்னும் முழுமையாக நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன.

= இப்படிக்கு,
சாதாரண இந்திய குடிமகன்.
Post a Comment