Tuesday 17 February 2015

டெல்லி தோல்வி... மோடி கடிதம் எழுதினால்...?

உடன்பிறப்பே,

அம்மையார் வழி காட்டுதலில் நடந்த ஆட்சியின் எண்ணிலடங்கா ஊழல்களால் மனம் வெதும்பி இருந்த இந்திய மக்களை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மட்டும் மனதில் கொண்டு இமை துஞ்சாமல் நாம் களப்பணி ஆற்றினோம். அண்ணல் வாஜ்பாயி வழியில் நாடு முழுவதும் சுழன்று வந்து ஊர் தோறும் உங்களை சந்தித்தேன்.

இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் 3000 கூட்டங்களில் பங்கேற்றேன் என்றும் இது மிகப்பெரிய சாதனை என்றும் அந்த அம்மையாரின் ஆதரவு ஏடுகள் கூட எழுதின. தேர்தலில் நமக்கு மிகப்பெரிய வெற்றியை நாட்டு மக்கள் வழங்கி அவர்களுக்கு சேவை செய்ய உத்தரவிட்டனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் பெரும்பான்மை வழங்கியதாக 15 ஆண்டுகளுக்கு முன் நமக்கு எதிரான பொய் பிரசாரத்தில் ஈடுபட்ட ஏடுகள் கூட பாராட்டின.

அவை எல்லாவற்றையும் விட கண்மணியே உன்னை நேரில் வந்து சந்தித்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை மட்டுமே நினைத்து நான் அகம் மகிழ்கிறேன் என்பது உனக்கு தெரியாதது அல்ல. குஜராத் வீதிகளில் தேநீர் விற்று கொண்டிருந்த என்னை இந்த பதவிக்கு உயர்த்தியது உடன்பிறப்பே உனது உழைப்பு அல்லாமல் வேறு ஏது? அந்த நினைவுகள் அனைத்தும் இன்றும் கூட என் கண் முன்னே நிழலாடுகிறது.

குடியரசு தின விழாவில் நான் அணிந்திருந்த ஆடையை பார்த்து அமெரிக்க அதிபரே வியந்து நின்றதை உலகம் அறியும். சிறு வயதில் தேநீர் விற்பதற்காக ஆற்றுக்கு அக்கரையில் உள்ள கிராமத்துக்கு நான் சென்றபோது வழியில் முதலையை பார்த்ததும் மற்ற சிறுவர்கள் எல்லாம் மீண்டும் கரைக்கு திரும்பியபோது நான் மட்டும் முதலையுடன் சண்டையிட்டு அக்கரைக்கு சென்ற கதையை இப்போது நினைவு கூர்ந்து அக்கறையுடன் விசாரித்தார், அமெரிக்க அதிபர்.

இப்படி இந்தியாவின் புகழை உலக அளவில் வியக்கச் செய்தது மாத்திரமல்ல, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என நமது அண்ணல் கூறியபடி ஆட்சி செய்து வருகிறாம். அதனால் தான், அம்மையார் கையசைவில் நடந்த ஆட்சியின்போது அறிமுகமான திட்டங்களை கூட மன மாச்சரியம் இன்றி நமது ஆட்சியிலும் தொடருகிறோம்.

ஆட்சியில் இல்லாதபோது நெருப்பாகவும் ஆட்சியில் இருக்கும்போது மிக பொறுப்பாகவும் நாம் இருப்பது எதிர்க்கட்சி தோழர்களுக்கும் நடுநிலையாளர்களும் தெரியும். இந்த சாதனைகளுக்கு பரிசாகத்தான் மராட்டியம் முதல் காஷ்மீர் வரை நாம் ஜெயபேரிகை கொட்டிச் செல்ல முடிந்தது.

அந்த வெற்றி களிப்பிலேயே நாம் மயங்கி இருந்து விட்டோமா அல்லது அண்ணனின் தேநீர் சுவையில் மெய் மறந்து விட்டாயா என தெரியவில்லை சுண்டைக்காய் மாநிலமான டெல்லியில் வெற்றிக் கனி எட்டா உயரத்துக்கு சென்று விட்டது. அதிலும் நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தோல்வி நமக்கு அல்ல, அம்மையாருக்குத்தான். இந்த கருத்தை நமது பெரிய ஆசிரியர் அமித் ஷாவும் ஒப்புக் கொண்டார்.

டெல்லியில், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது நமது கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 33 விழுக்காடு. தற்போது, 32.20 விழுக்காடு கிடைத்துள்ளது. நமது வாக்கு விகிதத்தில் 0.80 விழுக்காடு மட்டுமே வேறுபாடு. அதே நேரத்தில், அந்த அம்மையாரின் கட்சிக்கு 25 விழுக்காடு வாக்குகள் சரிந்து விட்டன.
ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக நாம் போர்ப்பரணி பாடி நாட்டு மக்களை எழுச்சியுறச் செய்தபோது, ஊழல் எதிர்ப்பு என்ற கூர்மையான ஆயுதத்தின் முனையை மழுங்கச் செய்வதற்காகவே சாமான்ய மக்கள் என்ற புதிய இயக்கத்தை அந்த அம்மையாரின் கட்சியினர் தொடங்கச் செய்தனர்.
அவர்களது ஆசியுடன் தொடங்கப்பட்ட அந்த இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தான், இப்போது ஆட்சியை பிடித்திருக்கிறார். இப்போது அந்த அம்மையாருக்கு கிடைத்த தோல்வி என்பது விதியோ, சதியோ அல்ல.. அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டதை தவிர வேறு இல்லை.

ஆட்சி கட்டிலில் புதிதாக அமரும் அருமை நண்பருக்கு எனது வாழ்த்துகள். இந்த முறையாவது முழுமையாக ஆட்சி செய்வார் என்று நம்புகிறேன். நம்மை எதிர்த்து நின்ற அவரது கட்சியின் பெயரில் மட்டும் தான் சாதாரண மக்கள் என்ற பதம் இருக்கிறது. உண்மையில் அந்த கட்சித் தலைவர் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி. ஐ.ஆர்.எஸ் என்றால் மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது என்பதையும் நினைவூட்டுகிறேன்.

ஆனால், நமது கட்சியின் தலைமை பீடத்தில் இருக்கும் நானோ, மிகச் சாதாரணமான தேநீர் விற்பனை செய்த ஏழை என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற தவறி விட்டோம். அதனால் தான், இந்த சரிவு நமக்கு ஏற்பட்டுள்ளது.
வெற்றியோ, தோல்வியோ இரண்டையும் சமமாக கருதுபவனே என் தம்பி என அண்ணலும் ஜனசங்க தலைவர்களும் நான் தேநீர் விற்ற காலத்திலேயே கூறினர். அவர்கள் காட்டிய வழியில், இந்த சரிவு என்னும் இடையூறை புறந்தள்ளி விட்டு பீகார், தமிழகம், கர்நாடகம் என நமது களப்பணி தொடரட்டும். குடும்ப ஆட்சியின் ஊழல்களையும் அம்மையாரின் அதிகார துஷ்பிரயோகங்களையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

டெல்லியில் தோல்வி ஏற்பட்டதாலேயே நமது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விட்டதாக ஆர்ப்பரிப்பவர்கள், நமது ஆட்சியின் மகோன்னதம் புரியாதவர்கள். இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் வெறும் 1 சதவீதம் மட்டுமே உள்ள டெல்லியின் தேர்தல் முடிவுகளை பூதாகரமாக்கி மகிழ்பவர்களை பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நமது வளர்ச்சியை பொறுக்க முடியாத சில ஏடுகளும் நம்மை வசை பாடுவதையே தொழிலாக வைத்துள்ளோரும் கூறுவதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மக்களுக்கான நமது பணிகளை தொடருவோம்.

அன்புடன்
ந.மோ.

No comments: