Tuesday 2 January 2018

ரஜினி… அரசியல்… அதிர்வு…

20 ஆண்டு கால யோசனைக்கு பிறகு முடிவை அறிவித்து விட்டார், ரஜினி. அவரது 5 நிமிட உரையின் அதிர்வலை அடங்குவதற்கு இன்னும் சில வாரம் பிடிக்கலாம். ரஜினியே கூறியது போல, அவரது 45வது வயதில் அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா மீதான வெறுப்பு, கலைஞர் மீதான அவநம்பிக்கையால் 1996 தேர்தலில் அந்த யோகம் அமைந்தது. அப்போது மூப்பனாருடன் ரஜினி கை கோர்த்திருந்தால் அண்ணாமலையின் சைக்கிள் ரெக்கை கட்டி பறந்திருக்கும். அந்த தேர்தலில் திமுக கூட்டணிக்காக ரஜினி ரசிகர்கள் பிரசாரம் செய்தது கூட, அடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து தான்.
ரஜினியின் தயக்கத்தாலும், கலைஞரின் ராஜதந்திரத்தாலும் திமுக கழுத்தில் வெற்றிமாலை விழுந்தது. அதன்பிறகும் கூட, அரசியல் கடலில் குதிக்காமல் கரையில் அமர்ந்து ஆழத்தை அளந்து பார்த்தே காலம் உருண்டோடி விட்டது. இன்று ஒரு ரசிகர், பேரன், பேத்தி எடுத்து விட்டதாக கூறுகிறார். ஆனாலும் 1996ல் இருந்த ஆர்வத்தில் தான் இருக்கிறார். அரசியல் அறிவிப்பை முழுமையாக வெளியிடாவிட்டாலும் குற்ற உணர்வு உறுத்தும் என கூறி விட்டதால் நிச்சயமாக, 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியை எதிர்பார்க்கலாம். கூடவே, சட்டப்பேரவை தேர்தலும் நடந்தால்… நிச்சயம் 1996 திரும்பும் என ரசிகர்கள் நம்புவார்கள்.
அதற்கு முன்பாக சில விஷயங்களில் ரஜினி தயாராக வேண்டும். இதுவரை ரஜினியை ரசித்தவர்கள், புத்தாண்டில் இருந்து வேறுபாடு பார்க்கலாம். கவிஞர் வைரமுத்து கூறியது போல, கலைஞனுக்கும் தலைவனுக்கும் வேறுபாடு உண்டு. தலைவனாக மாறும்போது சிலவற்றை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது. 15 ஆண்டுகளுக்கு முன் ரஜினிக்கு பாமக நிறுவனர் ராம்தாஸ் எழுப்பிய கேள்விகள் இன்னும் பதில் கிடைக்காமல் அப்படியே இருக்கின்றன.
அது ஒருபுறம் இருக்க… காவிரி, மீத்தேன் போன்ற பிரச்சினைகளில் ரஜினி குரல் கொடுத்தாரா என குரல்கள் எழும்பும். ரஜினியின் கொள்கை, கோட்பாடுகள் என்ன என மற்றொரு பக்கம் இருந்து குரல்கள் எழும்பும். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர். கலைஞர், ஜெயலலிதா என யாருக்கும் கொள்கைக்காக யாரும் ஓட்டு போடவில்லை என தெரிந்தும் இந்த கேள்வி கணைகள் வரும். மிக உறுதியான கொள்கைகளை வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு வங்கி இல்லை என்பது தெரிந்தும் கூட, நாம் தமிழர் கட்சிக்காக அல்லாமல் சீமானுக்காக வாக்கு விழுகிறது என தெரிந்தும் கூட கேள்விகள் எழும்பும். அவற்றுக்கு சரியான பதில் ரஜினியிடம் இருக்க வேண்டும். எப்போதுமே நேர்முக தேர்வுகளில் செயல்களை விட பொருத்தமான பதில்கள் தான் வெற்றியை தேடி தரும். அது, அரசியல் நுழைவு தேர்வுக்கும் பொருந்தும்.



75 நாட்களாக முதல்வரை கண்ணில் காட்டாமலேயே ஆட்சி நடத்திய அரசியல், கூவத்தூர் டிராமா, உடை அலங்காரத்தை மாற்றி அரியணையை நெருங்கியது, இடை தேர்தல் மூலமாக முதல்வர் நாற்காலிக்கு பிராக்கட் போட்டது என பல விதமான அரசியல் நிகழ்வுகளை தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள். அவற்றை வெறுமனே வேடிக்கை பார்த்ததோடு சில தருணங்களில் அவற்றுக்கு ஒத்துப்போன அரசியல் தலைவர்களையும் தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள். அந்த தலைவர்களுக்கும் சரியான பதில்கள் கைவசம் தேவை. பாஜக உடன் ரஜினியை தொடர்பு படுத்தி எழும் விமர்சனங்களுக்கும் மக்கள் ஏற்கும் வகையில் விளக்கம் தயாராக இருக்க வேண்டும்.
இனிமேல் தான் தனிபர் விமர்சனங்கள் தாறுமாறாக எகிற தொடங்கும். மலையாளி, அட்டைகத்தி வீரன், கோமாளி என எம்ஜிஆரும் பால்கனி பாவை, பாப்பாத்தி, செல்வி…? என ஜெயலலிதாவும் எதிர்கொண்ட விமர்சனங்களை ஒரு புத்தகமாகவே போடலாம். அதை தாண்டியே, புரட்சித் தலைவராகவும் அம்மாவாகவும் அவர்கள் உயர்ந்தார்கள். ரஜினிக்கு குடும்பம் இருப்பதால் மனைவி, மகள், மருமகனின் தவறுகளும் பூதக் கண்ணாடி போட்டு பார்க்கப்படும். இதற்கெல்லாம் ரஜினி தயாராக இருக்கிறாரா என்பது போகப் போகத்தான் தெரியும். எனினும், அவரது அரசியல் பிரவேசம் டூடூடூ லேட்..
ஆங்கிலத்தை தவிர பிற மொழிகளை மட்டும் மிக தீவிரமாக எதிர்க்கும் தமிழ் அமைப்புகளும், கன்னடத்தை உள்ளடக்கிய திராவிடத்தின் பெயரை கூறிக் கொண்டு ரஜினியை கன்னடர் என விமர்சிக்கும் திராவிட கட்சிகளும் இப்போதே தங்கள் எதிர்ப்பை தொடங்கி விட்டன.
இது ஜனநாயக நாடு. மக்களின் ஆதரவு என்னும் நூல் இருந்தால் புகழ், பதவி என்னும் பட்டம் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் பறக்கும். ‘உங்களில் உத்தமர் ஒருவர், இந்த பெண்ணின் மீது கல் எறியுங்கள்‘ என இயேசு பிரான் கூறிய கருத்தை உள்வாங்கி வைத்திருப்பவர்கள், தமிழர்கள். எனவே, ரஜினியை விமர்சிப்பவர்களை எளிதில் தரம் பிரித்து பார்த்து விடுவார்கள். ஆனால், தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை அவ்வளவு எளிதில் பெற்று விட முடியாது. ரஜினியின் அடுத்தடுத்த நகர்வுகள் தான் அந்த ஆதரவை உறுதி செய்யும்.
= நெல்லை ரவீந்திரன்.

No comments: