திரைத்துறை வேலை நிறுத்தம் முடிவதற்கு முன் தினம். மீண்டும் ஒரு முறை அந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் 280 இருக்கை கொண்ட தியேட்டரில் 80 பேர் வரை இருந்தார்கள். அன்று 30வது நாளை தாண்டி இருந்தது.
செந்தமிழே வணக்கம்.. என்ற பாடலுடன் படம் தொடங்கியது. கருப்பு சிவப்பு கொடியை 4கே டிஜிடலில் கருப்பு சிவப்பு நடுவில் அண்ணாவை சேர்த்து மாற்றியிருந்தார்கள். எம்ஜியார் பிக்சர்ஸ், எம்.ஜி.ராமச்சந்திரன், டைரக்சன் எம்,ஜி,ஆர். என்ற எழுத்துகள் தொடங்கி மக்களாட்சி அமைப்போம் என்ற கோஷத்துடன் எம்ஜிஆரின் முகம் தெரியும் வரை கைதட்டல்கள் ஓயவில்லை.
1958ல் வெளி வந்த படம். 60 ஆண்டுகளான பிறகும் இன்றைய அரசியலுக்கான படமாகவே தெரிகிறது. படத்துக்கு வசனம் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர் (ஆஹா…)
.
.
சொன்னாலும் புரியாதடா மண்ணாளும் வித்தை..
மார்த்தாண்டன்… மன்னனாம்… மறைந்த மன்னனுக்கு மருமகனாக இருந்தால் என்ன.. அந்த ஆண்டவனுக்கே அருள்மகனாக இருந்தால் என்ன… எனக்கு தேவை என் சொல் பேச்சு கேட்கும் ஒரு பொம்மை….
நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மக்களை பார்க்கிறேன்….
நீங்கள் ஒருவர் அரண்மனையில் எல்லாரையும் முட்டாளாக்குகிறீர்களே..? இல்லை. அரண்மனையில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என பார்க்கிறேன்.
ஆண்டியின் மடமாக இருந்தாலும் அழகிகளுக்கு பஞ்சமில்லை….
.
.
இவை எல்லாம் கண்ணதாசனின் வசன தேன் குடத்தின் சில துளிகள்.
உன்னைத்தான் இந்த நாடே நம்பி இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட பிறகு சுக துக்கங்களை பார்க்கலாமா...?
தெரிந்தோ தெரியாமலோ 1958லேயே இப்படி எல்லாம் எம்ஜிஆரை பார்த்து கதாபாத்திரங்கள் பேசுகின்றன.
என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு. நம்பிக் கெட்டவர்கள் ஒருவருமில்லை.
எம்ஜிஆரின் காலங்களை கடந்த வசனமும் இந்த படத்தில் தான்.
கதை....
ரத்தினபுரியின் மன்னர் காலமானதோடு இளவரசியும் காணவில்லை. இதனால், அவரது தமக்கை மகன் மார்த்தாண்டன் மன்னர் பட்டத்துக்கு வருகிறார். அதை ராஜகுரு, தளபதி, ராஜகுருவின் கையாள் தடுக்க முயற்சிப்பதோடு, மார்த்தாண்டனை கொல்ல முயற்சிக்கின்றனர். அதில், அவன் மயக்கமடைய மக்களாட்சிக்காக போராடும் நாடோடி, உருவ ஒற்றுமையால் மன்னராக்கப் படுகிறான். உபயம் மதி மந்திரி..
அடுத்தடுத்த அரசியல் சதிராட்டத்தில் நாடோடி பற்றி ராஜகுருவுக்கு தெரிய வர, சில தகிடு தத்தங்களுக்கு பிறகு கன்னித் தீவுக்கு மார்த்தாண்டனை கடத்திச் செல்கிறார். அந்த தீவின் தலைவராக இருப்பதும் ராஜகுருவே. அது, அவரது அடிப்பொடிகளுக்கு கூட தெரியாது. இந்த தகவலை அறிந்ததும் நாடோடியும் தீவுக்கு செல்கிறார். அங்கு சில பல திருப்பங்களுக்கு பிறகு மன்னனை கண்டு பிடித்து மீட்கிறார். இதில் நாடோடி, மன்னன் இருவரும் எம்.ஜி.ஆர். ராஜகுரு பி.எஸ். வீரப்பா, அவரது கையாட்கள் நம்பியார், எம்.ஜி.சக்கரபாணி.
இந்த கதைக்கு இடையே பானுமதி, சரோஜாதேவியுடன் எம்ஜிஆர் காதல். மன்னர் மார்த்தாண்டனுக்கு ராணியான எம்.என்.ராஜத்துடன் காதல். மறைந்த மன்னரின் மெய்க்காப்பாளர் தலைமையில் ஒரு புரட்சிப்படை, நகைச்சுவைக்கு சந்திரபாபு அவருக்கு இரண்டு நாயகிகள் என இடைச் செருகல்கள்.
சற்றே நீளமான இந்த கதையை (கதை... ஆர்எம் வீரப்பனின் கதை இலாகா குழு) குழப்பம் ஏதுமில்லாமல் சலிப்பு தட்டாமல் திரைக்கதையாக்கி இயக்கி இருக்கிறார், இயக்குனர் எம்ஜிஆர். 60 ஆண்டுகளுக்கு முன்பே...
.
.
நான் சிறுவனாக இருந்தபோது மூன்றே முக்கால் மணி நேரம் ஓடிய திரைப்படம். இப்போது சந்திரபாபுவின் நகைச்சுவை, காதல் காட்சிகள், சண்டை காட்சிகளின் நீளம், கன்னித் தீவின் அறிமுக காட்சி என ஏராளமான கட்டுகளுக்கு பிறகு 4கே டிஜிட்டல் நுட்பத்தில் 200 நிமிடங்களாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படத்தின் விறுவிறுப்பு குறையவில்லை.
பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த படம் 6.30க்கு, (நடுவில் 5 நிமிடமே இடைவேளை) முடிந்தபோது நம்பவே முடியவில்லை.
சண்டைக் காட்சிகளில் எம்ஜிஆரின் ஜம்பிங் உப்பரிகையில் இருந்து குதிப்பது ஜாக்கிசானை நினைவு படுத்துகிறது. வீரப்பா, நம்பியாருடன் தனித்தனியாக அவரிடும் துறு துறு வாள் சண்டை அபாரம். கிளைமாக்சில் வரும் கயிற்றுப் பால சண்டைக் காட்சியை ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்திலும் பார்த்ததாக நினைவு. மார்த்தாண்டனை பாதாள சிறையில் அடைத்திருக்கும் காட்சியை 23ம் புலிகேசி படத்திலும் பார்க்கலாம். இப்படியாக வருங்கால சினிமா தலைமுறைக்கு எம்.ஜி.ஆர். வாரித் தந்திருக்கும் காட்சிகள் இந்த படத்தில் ஏராளம்.
முதலில் கருப்பு வெள்ளையாகவும் கடைசி முக்கால் மணி நேரம் கோவா வண்ண படமாகவும் வந்துள்ள இது, தமிழின் முதல் பரிசோதனை வண்ணப்படம் என்பது கொசுறு. அலிபாபாவும் 40 திருடர்களும் முழு நீள வண்ணப்படம் என்பது கூடுதல் கொசுறு. வண்ணப் பகுதியில் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அறிமுகம்.
தூங்காதே தம்பி...,
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே...,
சும்மா கிடந்த நிலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏர பூட்டி…
உட்பட படத்தில் 10 பாடல்களும் அருமை. பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட கவிஞர்கள்.
இது இரட்டை வேட படம் என்பதையும் 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட வியக்கத்தக்க முயற்சியையையும் சொல்லியே ஆக வேண்டும்.
முதன் முதலில் இரண்டு எம்ஜிஆரும் சந்திக்குபோது இருவரும் பேசும் வசனங்களில் கண்ணதாசன் நிற்கிறார். காட்சிகளின் தொழில் நுட்பத்தில் எம்.ஜி.ஆர் நிற்கிறார். பின்னர், படத்தின் கிளைமாக்சில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இருவரும் ஒன்றாக தோன்றும் காட்சிகள்.
கன்னித் தீவு காட்சிகளின் ஆரம்பம், கழுகு குகை, கிளைமாக்சில் பிரவாகமெடுக்கும் தண்ணீர். மலை உச்சியில் உக்கிரமான சண்டை (இதே சண்டை காட்சியை ரஜினியின் மாப்பிள்ளை படத்திலும் கிளைமாக்சில் பார்க்கலாம்) என கோவா கலரில் ஒவ்வொரு காட்சிகளும் அதன் ஒளிப்பதிவும் சிறு வயதில் பார்த்தது இன்னும் மனக் கண்ணில் நிற்கின்றன.
ஆனால், டிஜிடலில் அந்த காட்சிகளை குறைப்பதாக கருதி ஆச்சரியத்தை ஆ... என்ற அளவிலேயே நிறுத்தி விட்டனர். அப்போதே மும்பை சென்று கோவா கலர் பிரிண்ட் போட்டிருந்ததை கொஞ்சம் நினைத்து பார்த்திருக்கலாம்.
முற்றாக…
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்த இந்த திரைப்படம் 60 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை கவர்வதில் வியப்பில்லை. தியேட்டரை விட்டு வந்த பிறகும் தலையை தடவியபடியே சகுனி வேலை பார்க்கும் எம்.ஜி.சக்கரபாணியின் முகம் நினைவில் நிற்கிறது. கூடவே, வீரப்பாவின் பல்லிடுக்கின் வழியாக வெளிவரும் மிரட்டல் குரலும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment