Wednesday 3 June 2020

கலைஞர்

 1) கையெழுத்து பத்திரிகை காலத்தில் தொடங்கி 80 ஆண்டுகளாக பத்திரிகை அனுபவம். அதிகாலையிலேயே எந்த பத்திரிகையில் என்ன செய்தி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதிலும் பத்திரிகைகளுக்கு எப்படி, எந்த நேரத்தில் செய்தி அனுப்பி வைக்க வேண்டும் என்பதையும் புரிந்து வைத்த புலிட்சர். 



2) பேசும்படம் காலம் தொடங்கி வண்ணப்படம், சினிமாஸ்கோப், டிஜிடல் யுகம் கடந்து சின்னத் திரையிலும் வசன மழை பொழிந்து வரும் வருணன். திரை இசைக்கு பாடல்களை வடித்து தரும் கவிச்சக்கரவர்த்தி


3) பள்ளிப்படிப்பை தாண்டாத போதிலும் பிஎச்டி மாணவர்களின் ஆராய்ச்சிக்கும் தீனி தரும் அட்சய பாத்திரம். 


4) தமிழ் கூறும் நல்லுலகில் தோன்றிய எழுத்தாளர்களில் ஆயிரம் பிறை கண்டவர்களில் ஒருவர். தொன்னூறைக் கடந்தும் தளரா நடையுடன் நூல் வடித்த எழுத்துச் சிற்பி. 


5) தமிழறிஞர்களுக்கும் புலப்படா சூட்சுமங்களை விளக்கி இலக்கியங்களுக்கு உரை எழுதிய தொல்காப்பியர். 


6) முத்தமிழின் மூன்றாம் தமிழில் கரை தேர்ந்து சிலப்பதிகாரம், காகிதப்பூ என தொடர்ந்து தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டிய கலைஞர். 


7) தேர்தலில் தோல்வி முகம் காணாதவர். விரும்பினாலும், வெறுப்புடன் பார்த்தாலும் தமிழக அரசியலின் அரை நூற்றாண்டு கால நவீன சாணக்கியர்.  


8) திண்ணை பள்ளியில் கல்வி பயின்றாலும் 4 தலைமுறைகளை கடந்தும் கூட நவீன யுக தகவல் தொடர்பில் அப்டேட்டான ஆன்ட்ராய்டு இளைஞர். 


9) வயதில் 4 மடங்கு இளையோரின் விமர்சன கணைகளையும் எதிர் கொண்டவர். கடுமையான எதிரியும் கூட ஒளிந்து நின்று ரசிக்கத் தகுந்த ஏதேனும் ஒரு சிறப்பை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆழ்கடல் அதிசயம். 


10) அனுதினமும் ஆதவனை தட்டி எழுப்பி அவனுக்கு இணையாக களைப்பின்றி சுழலும் முத்துவேலர் ஈன்ற முத்தின் சிறப்புகளை பத்துக்குள் அடக்க முடியுமா...?

#நெல்லை_ரவீந்திரன்

No comments: