Saturday 27 June 2020

கொரோனா... தனிமை...


 "வீட்டிலேயே ஏன் அடைஞ்சி கிடக்கிற. வெளியில போயி மனுஷங்க மூஞ்சிகள பாக்கலாமில்லா" 

சின்ன வயதில் வீட்டில் முடங்கியே கிடந்தால் பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகள். திருவிழா, திருமணம், தியேட்டர் இப்பிடி கூட்டம் கூட்டமாக செல்வது கூட உறவுகள், சொந்தங்கள், நட்புகள், நண்பர்கள், நீண்ட நாட்களாக பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள், முகம் அறியாதவர்கள் இப்பிடி பலரையும் பார்த்து மகிழும் தருணத்துக்காகத்தான்.

தொட்டில் பருவத்தில் இருந்தே மனிதனோடு ஒட்டி வரும் குணம் இது. உளவியல் ரீதியாக இதுதான் ஒருவரை நார்மல் மனிதராகவும் வைத்திருக்கிறது. "பாப்பா (பையன்) மொகம் பாக்க படிச்சிட்டா(னா)ளா". குழந்தை பிறந்த சில மாதங்களில்  கிலுகிலுப்பை மாதிரி கலர் கலரான விளையாட்டு பொம்மைகளை கொடுத்து விட்டு, இது மாதிரி கேட்பது வழக்கம்.

மாறி வரும் கால சூழலில் வாழ்க்கை முறை மாறினாலும் இந்த அடிப்படை இயல்பு மாறாதது. வாரம் முழுவதும் வேறு சிந்தனையே இல்லாமல் பணத்தை தேடி ஓடுபவருக்காக உருவான வீக் எண்ட் கொண்டாட்டமும் இந்த கையை ஓட்டியதே. தியேட்டர்களில் குவிந்து மனதை ரிலாக்ஸ் செய்வது ஒரு வகை என்றால் பப், லாங் டிரைவ், மினி சுற்றுலா என வேறு பல வகை.

வீட்டிலேயே இருந்து வேலைகளை இழுத்துப் போட்டு செய்யும் பெண்களுக்கு மதிய நேர சீரியல்கள் ஒரு வடிகால். சீரியல் கேரக்டர்களை பார்ப்பது மன உளைச்சலை தவிர்க்கும் மருந்து. சிலர் அக்கம் பக்கத்தினரிடம் கதை பேசுவார்கள். மிக அரிதாக சிலர், சமையல் செய்யும் போதே பாததிரங்களுடனும் காய் மற்றும் கனிகளுடன் பேசியபடி வேலை செய்வது உண்டு. வீட்டு பொருட்கள் கூட அவர்களின் பேசு பொருட்களே.

ஆக, மனித மனதின் அடிப்படை உளவியல் என்பது மனிதர்கள் உடனான சந்திப்பே. பேசினாலும் சரி. வெறுமனே பார்த்தாலும் சரி. ஏனென்றால் தனிமையில் இனிமை காண முடியாது. சிறை வாசம் என்பதை தண்டனையாக உருவாக்கி வைத்ததும் இந்த அடிப்படையில் தான் இருக்கும்.

கடந்த சில மாதங்களாகவே ஒட்டு மொத்த மக்களும் சிறைவாசம் போலத்தான் இருக்கிறார்கள். பொது முடக்கம். இது உடல் நலனை பாதுகாக்கும் மருந்து என சொன்னாலும் மன நலனை பாது காக்குமா என்ற கேள்வி அங்கே தொக்கி நிற்கிறது.

ஆரம்பத்தில் மீம்ஸ் தொடங்கி மனதை உற்சாகமாக்க என்னவெல்லாமோ செய்தார்கள். ஆனால், மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அந்த மனநிலை பலரிடம் இல்லை என்பதே உண்மை. எதுவுமே நிச்சயமற்ற சூழல். நோய் பற்றிய முழுமையான புரிதலே இல்லாத சூழலில் எழும் அச்சம். மன நல பாதிப்பின் அச்சாரம்.

வெளியில் சுற்றுபவர்களுக்கு வீட்டிலேயே அடைந்து கிடப்பது ஒரு அழுத்தம் என்றால், தனியாகவே வீட்டில் இருந்து சமையல் பாத்திரங்களுடனும் சீரியல் பாத்திரங்களுடனும் பேசி வந்த பெண்களுக்கு அனைவரும் வீட்டில் இருப்பதால் வேறு வகையான அழுத்தம்.

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய திரைப்படங்களை போல நூறு நாட்களை எட்டப் போகிறது. வெள்ளி விழா, 25வது வாரம் என்றெல்லாம் போகாது என நம்புவோம். 

அதே நேரத்தில் உடல் நலம், உயிர் நலம் என்பதை தாண்டி மன நலம் முக்கியம். உயிரும் உடலும் நலமாக இருந்து மனம் பிறழ்ந்தால்...?

#நெல்லை_ரவீந்திரன்

No comments: