Thursday 31 December 2020

எனது பாசமிகு மாமாவுக்காக


நெல்லை மாவட்டம் (இப்போது தென்காசி) ஆலடிப்பட்டி கிராமத்தில் 1933ம் ஆண்டு பிறந்தவர், ஆலடி அருணா. ஆலடிப்பட்டியின் பிரபலமான வைத்தியலிங்க சுவாமி திருக்கோயிலில் பூஜை செய்யும் குடும்பத்திலேயே பிறந்த போதிலும் இறுதி வரை பகுத்தறிவு சுடராகவே வலம் வந்தார். ஆலடி அருணாவின் தந்தை பெயர் வைத்தியலிங்கம் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. 


பள்ளி, கல்லூரி படிப்பின் போதே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு நெல்லை முதல் சென்னை வரை மேடைகளை அதிரச் செய்தவர். பின்னாளில், வழக்கறிஞர் பட்டம் பெற்று, அண்ணா, பெரியார் மீது கொண்ட பற்றால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்தவர்.  


அவரது அறிவையும் வாதத் திறமையையும் கண்டு வியந்து காங்கிரஸ் கட்சியில் சேருமாறும் அரசு வழக்கறிஞர் பணி தருவதாகவும் பெருந்தலைவர் காமராஜர் அழைத்தபோது, அதை மறுத்தவர். பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை என திராவிட கொள்கைகளை விடாப்பிடியாக பின்பற்றிய வெகு சிலரில் ஆலடி அருணாவும் ஒருவர். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என தமிழகத்தின் மிக முக்கியமான ஆளுமைகளின் அன்புக்கு பாத்திரமாக இருந்தவர். 


திமுக முன்னணி மேடைப் பேச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த அவர் வகித்த பதவிகள் ஏராளம். நெல்லை மாவட்டம் ஆலங்குளம்  தொகுதியில் இருந்து தமிழக பேரவைக்கு 1967, 1972, 1996 என மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வானார். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இருந்து 1977ம் ஆண்டு மக்களவைக்கும் அதிமுக சார்பாக 1984ம் ஆண்டு டெல்லி மாநிலங்களவை எம்பியாகவும் தேர்வானவர். 


அவர் எம்பியாக இருந்த காலத்தில் தான் போபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்தது. தான் சார்ந்த அதிமுகவின் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதிலும், கூட்டணி கட்சியின் தலைவராக பிரதமர் ராஜிவ் இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் ஆணித்தரமாக உண்மையை பேசியவர். மிகச் சிறந்த பாராளுமன்ற வாதிகளில் தானும் ஒருவர் என்பதை அந்த சமயத்தில் உலகுக்கு உணர்த்தினார். போபர்ஸ் ஊழல் குறித்த பாராளுமன்ற கூட்டுக் குழுவில் உறுப்பினராக இருந்ததால் உண்மைக்கு மாறான கூட்டுக் குழு அறிக்கையை கிழித்து எறிந்து ரூ.60 கோடி ஊழலை அம்பலப்படுத்தினார். 


எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு மீண்டும் திமுகவுக்கு திரும்பி 1996ம் ஆண்டில்  கருணாநிதி தலைமையிலான தமிழக அரசில் 5 ஆண்டு காலம் சட்ட அமைச்சராகவும் ஆலடி அருணா பணியாற்றினார். 

மேடைப்பேச்சு, பாராளுமன்ற விவாதத் திறன், அரசியல் தலைவர் என்ற வரிசையில் பத்திரிகையாளர், எழுத்தாளர் என்ற முகங்களும் ஆலடி அருணாவுக்கு உண்டு. 


பள்ளி பருவத்திலேயே கையெழுத்து பத்திரிகை நடத்திய அனுபவம் அவருக்கு உண்டு. 'எண்ணம்' என்ற வார பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய ஆங்கில புத்தகங்களில் ‘Unfederal Features of the Indian Constitution என்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் மிகவும் முக்கியமானது. 

இது தவிர,  இந்தி எதிர்ப்பு, ஆலடி அருணா சிறுகதைகள், இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், காமராஜர் ஒரு வழிகாட்டி போன்ற புத்தகங்களும் குறிப்பிடத்தக்கவை. 

நெல்லையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து மாநில அரசியல், தேசிய அரசியல், எழுத்துப்பணி என பேரும் புகழும் பெற்றிருந்தவரும் எனது பாசமிகு மாமாவுமான ஆலடி அருணாவின் நினைவு தினத்தில் (31/12/2004) அவரது நினைவை போற்றுகிறேன். 

நெல்லையில் இருந்து என்னை முதன் முதலில் சென்னைக்கு அழைத்து வந்து மறைந்த பெரிய அய்யா பா.ராமச்சந்திர ஆதித்தனாரிடம் அறிமுகம் செய்து ‘கதிரவன்’ வாயிலாக எனது பத்திரிகையாளர் வாழ்க்கைக்கு வழி காட்டியவர் அவரே. அவரது சொந்த அத்தையின் (அவரது தந்தையின் உடன் பிறந்த சகோதரி) மகன் வழி பேரன் என்பது எனது பேறு.

வீடு, கோட்டை, ஊரில் எங்கு எப்போது சந்தித்தாலும், 'என்னடே... மாப்பிள...' என நெல்லை தமிழில் அழைத்தது இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது...

#நெல்லை_ரவீந்திரன்

No comments: