Tuesday 15 December 2020

எம்ஜிஆர் - 1977 Vs 2021

தமிழக அரசியலில் நடிகர்கள் நுழையும் போதெல்லாம் உதிர்க்கப்படும் வார்த்தை எம்ஜிஆர். ஆதரவோ, விமர்சனமோ... இதை எந்த தரப்பு உச்சரித்தாலும் அதன் அடி நாதத்தில் ஔிந்து கிடப்பது, அவர் ஒரு நடிகர் என்ற பார்வைதான். நடிகராக அவரைப்பற்றி பேசும் பலரும் அவரது அரசியல் பயணம் பற்றி அறியாதவர்கள் என்பதே உண்மை.

எம்ஜிஆரின் அரசில் பயணம் என்பது 1950களிலேயே துவங்குகிறது. எல்லா மனிதரைப் போலவே அனைத்து நடிகர்களுக்குள்ளும் அரசியல் சார்பு உண்டு. அதை எம்ஜிஆர் மறைக்கவில்லை. நடிப்பு தொழிலுடன்  திராவிட இயக்கங்களிலும் தனது முழு ஈடுபாட்டை காட்டினார். 1950களின் இறுதியில் திமுக ஆரம்பித்தபோது அதன் முழு நேர உறுப்பினர், எம்ஜிஆர்.



அவ்வளவு ஏன்? தனது படங்களிலும் திமுக கொள்கைகளையும் சின்னத்தையும் பிரபலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார். கருப்பு வெள்ளை படங்களில் இருந்து வண்ணப்படங்கள் வரை எம்ஜிஆர் பட காட்சி பின்னணிகளை நுணுக்கமாக பார்த்தால்  இதை அறியலாம். இது போன்ற துணிச்சல், அரசியல் ஆர்வம் கொண்ட நடிகர்கள் எவருக்காவது உண்டா என்றால் இல்லை என்பதே பதிலாகும். 1957ல் மிகுந்த பணக் கஷ்டத்தோடு நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர் தயாரித்தபோது, தனது எம்ஜிஆர்  பிக்சர்ஸின் லோகோவே திமுக கொடி தான்.

இத்தனைக்கும், அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆட்சி. திமுக அப்போது தான் புதிதாக துளிர்விட்ட கட்சி. பொது சின்னம் கூட கிடையாது.

இதை, இன்றைய புதிய  நடிகர்கள் வரை தங்கள் புதுப்பட ரிலீசுக்காக மட்டுமே அரசியல் பேசுவதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 

1967 வரை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக (இது எம்ஜிஆரின் கதாநாயக பயணத்தில் 20 ஆண்டுகள்) திமுக பொதுக் கூட்டங்களில் பிரசாரம் செய்தவர் எம்ஜிஆர். காங்கிரஸ் சார்பு நிறுவனம் என்பதால் ஏவிஎம் பேனரில் கூட (அன்பே வா தவிர) அவர் நடித்ததில்லை. படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் எல்லாம் திமுக கட்சிப் பணியாற்றியவர். இந்த துணிச்சல் இன்றைய பிரபல நாயக  நடிகர்களிடம் துளி கூட இல்லாத ஒன்று.

அதிமுக என்ற கட்சியை துவங்கும் முன், அவர் திமுக பிரமுகர், நிர்வாகி, அந்த கட்சியின் பொருளாளராக மூத்த தலைவர், அந்த கட்சியில் எம்எல்சி, எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிக்கு நிகரான சிறு சேமிப்பு குழு தலைவர் என பதவிகளை வகித்தவர். அண்ணா மறைந்தபோது திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக கருணாநிதி தலைமையிலான ஆட்சி அமைவதிலும் பங்கெடுத்தவர். 1972ல் அண்ணா இல்லாத தேர்தலில் கூட்டாக நின்ற காமராஜரையும், ராஜாஜியையும் கருணாநிதியுடன் கைகோர்த்து தோற்கடித்து திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர். அந்த தேர்தலில் பெற்றதை போன்ற இடங்களை இதுவரை தமிழகத்தில் எந்த ஆளுங்கட்சியும் பெறவில்லை.

அதாவது, அதிமுக ஆரம்பிப்பதற்கு முன்,  எம்ஜிஆரின் முழு நேர அரசியல் அனுபவம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள். 

திமுக தலைவர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுகவை துவக்கியபோது, எம்எல்ஏக்களில் பலர் தன்னுடன் வந்ததால் (அப்போது கட்சித்தாவல் தடை சட்டம் கிடையாது) எதிர்க்கட்சி தலைவராகவும் எம்ஜிஆர் இருந்தார். 

அந்த கால கட்டத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் நெருக்கடிகளையும் எதிர் கொண்டவர், எம்ஜிஆர். அரசியல் ரீதியாகவும் (மதுரை மேயர் முத்து விவகாரம் ஒரு உதாரணம்) சினிமா ரீதியாகவும். எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' பட ரிலீஸ் பற்றி அந்தக் கால கட்சிக்காரர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள்.

இப்படியாக பல அரசியல் அனுபவங்களுடன் தான் அதிமுக என்ற புதிய கட்சியுடன் 1977ல் தனியாக களம் புகுந்தார் எம்ஜிஆர். அவருக்கு முதல் தேர்தலிலேயே வெற்றி. தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று தேர்தல்களில் வென்ற தமிழகத்தின் ஒரே ஹாட்ரிக் முதல்வர் அவர்தான்.



இந்த வெற்றிகளுக்கு எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும் அன்றைய அரசியல் சூழ்நிலைகளும் அவருக்கு சாதகமாக இருந்தது. அது என்ன சூழல்?

1977 சட்டப்பேரவை தேர்தலின் போது அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார் இப்படி பெரிய தலைவர்கள் யாரும் கிடையாது. இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை. காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியினரும் காமராஜர் மறைவால் குழம்பிக் கிடந்த சமயம். ஆக... பெரிய தலைவர்கள் இல்லாத தேர்தல். கருணாநிதி, எம்ஜிஆர் இருவரின் வயதும் 50 பிளஸ்.

அன்றைய சூழலில் ஆளும் திமுக மட்டுமே ஏகபோக கட்சி. அதுவும் எம்ஜிஆருக்கு தொடர் நெருக்கடிகளை கொடுத்து தெரிந்தோ தெரியாமலோ ஸிம்பதி கலந்த ஆதரவை எம்ஜிஆருக்கு அதிகரித்துக் கொடுத்தது. இறுதியாக, களத்தில் ஏகபோகமாக இருந்த திமுகவுக்கு மாற்றாக எம்ஜிஆரால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. 

அதன் பிறகு, இரண்டு கழகங்களின் ஆதிக்கம் தான். இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் ஏமாளித்தனத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது உஷாராக இருந்திருந்தால் மூன்றாவது அணி, தேசிய கட்சிக்கான வாய்ப்பு போன்றவை ஒருசில மாநிலங்களில் இருப்பதை போலவே தமிழகத்திலும் கருகிப் போகாமல் இருந்திருக்கும். 


 ஆனால், 1980ல் இருந்தே இரண்டு கழகங்களின் தோளில் சவாரி செய்து சுகம் காண தொடங்கியது, காங்கிரஸ் கட்சி (இன்றைய காங்கிரஸ் நிலைக்கு அதுவும் காரணம். அதைப்பற்றி தனியாகவே எழுதலாம்). இது இரண்டு கழகங்களுக்கும் சாதகமானது. எம்ஜிஆரின் வள்ளல், ஏழை பங்காளன் என்ற தோற்றம், அவரை இறுதி வரை ஆட்சிக் கட்டிலில் அழகு பார்க்கச் செய்தது. 



இதுதான் எம்ஜிஆரின் உண்மையான  அரசியல் வரலாறு. இதில் ஏதாவது ஒன்றாவது எம்ஜிஆர் பெயரை கூறும் நடிகர்களுக்கு ஒத்துப் போகிறதா? 

மற்றொன்று, அதிமுகவை துவக்கி எம்ஜிஆர் களம் புகுந்தபோது திமுக என்ற ஒரு கட்சிதான். இப்போது, இரண்டு கழகங்கள் வலுவாக இருக்கின்றன. மூன்றாவது வரும் கட்சி ஆட்சியமைக்கும் பலத்துடன் வெற்றி பெறுவது கஷ்டம். ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் மகாராஷ்டிரா போல வேண்டுமானால் நடக்கலாம். ஆனால், தமிழக மக்கள் ஒருபோதும் ஆளுநருக்கு வேலை வைத்ததே இல்லை.

#நெல்லை_ரவீந்திரன்

No comments: