Tuesday 21 June 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -35

சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார். ஆண் பிரபலங்களைக் கூட நாம் நினைத்து பார்த்திராத துறைகளிலும் களமிறங்கி வெற்றி கண்டவர். அநேகமாக இயக்குநரை கரம் பிடித்த முதல் கதாநாயகி அவராகத்தான் இருக்கும். எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் பல படங்களை பார்த்திருப்போம். ஆனால், அவர்களுக்கெல்லாம் சீனியர் நாயகி.



அவர் பானுமதி. அடிப்படையில், அவர் ஒரு தெலுங்கு நடிகை. 1939ஆம் ஆண்டு 13 வயதிலேயே தெலுங்கில் அறிமுகமாகி அடுத்த 5 ஆண்டுகளிலேயே இயக்குனர் ராமகிருஷ்ணாவை திருமணம் செய்தார். அத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்தாலும் காலம் இடம் தரவில்லை. திருமணத்துக்கு பிறகே தெலுங்கு, தமிழ் திரையுலகில் பிரகாசித்தார்.



தெலுங்கில் இருந்து ஏழெட்டு ஆண்டுகள் கழித்து திருமணமான நாயகியாகத்தான் தமிழில் நுழைந்தார் பானுமதி. 



1940, 50களில் பிரபலமாக இருந்த தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம், சித்தூர் நாகையா தொடங்கி 1960, 1970களில் கோலோச்சிய அடுத்த தலைமுறை எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ் என தென்னிந்திய ஜாம்பவான்களின் தேர்வாக இருந்தவர்.



நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜூனா போன்ற அடுத்த இளம் தலைமுறையினரின் படங்களிலும் நடித்த பெருமை உண்டு. இவரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தவர் நடிகையர் திலகம் சாவித்திரி. பானுமதி அறிமுகமான காலத்தில் நடிப்பவரே சொந்த குரலில் வசனம் பேசுவதோடு பாடலும் பாட வேண்டும். அதனால் ஆரம்பத்தில் இருந்தே பாடவும் செய்தார். தான் நடித்த அனைத்து பாடல்களையும் தானே பாடிய கதாநாயகியும் இவர் மட்டுமே.



நடிகை, பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர், சிறுகதை எழுத்தாளர் இப்படி 8 வித திறமைசாலி. 'அஷ்டவதானி' பட்டம் பெற்றவர். சினிமா ஸ்டுடியோ சொந்தமாக வைத்திருந்த ஒரே நடிகையும் இவர்தான். எப்போதுமே அவருக்குள் ஒரு துணிச்சல்தனம் உண்டு. அவரது நடிப்பிலேயே இதை ரசிகர்கள்  பார்க்கலாம். 



எம்ஜிஆரை திரை உலகில் ரொம்ப மரியாதையாக எல்லோரும் அழைத்த சமயத்தில் மிஸ்டர் ராமச்சந்திரன் என அழைத்த துணிச்சல்காரர். "நோ கட்டிப்பிடி ஸீன்,  நோ நெருக்கமான ஸீன்" என கட்டுப்பாடுகளை விதித்தும் கதாநாயகியாக நீண்ட நாள் கோலோச்சியவர்.



ஜெமினி நடித்த 'மிஸ்ஸியம்மா' படத்தில் இவர்தான் முதலில் நடிப்பதாக இருந்து தயாரிப்பாளர் சக்கரபாணியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சாவித்திரி நடித்தார். அந்த தயாரிப்பாளரை கிண்டல் செய்யும் விதமாக 'சக்கரபாணி' என்ற பெயரிலேயே காமெடி படத்தை தயாரித்து இயக்கினார் பானுமதி. அவரது துணிச்சலுக்கு இதுவும் ஒரு உதாரணம். அந்த படம்  சூப்பர் ஹிட்டாகி இவரது இயக்குநர் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது.



1945ல் சித்தூர் நாகையாவுடன் நடித்த 'ஸ்வர்க்க சீமா' தெலுங்கில் முதன் முதலில் இவரை அடையாளம் காண்பித்தது என்றால், தமிழில் அடையாளம் கொடுத்த படம் பி.யூ.சின்னப்பாவுடன் நடித்து 1949ல் வெளியான 'ரத்ன குமார்'. 1953லேயே இயக்குநராகவும் ஆகி விட்டார். 'சண்டிராணி' என்ற அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. படத்தின் ஹீரோ என்.டி.ராமாராவ்.  



முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகையும் இவரே. படம் எம்ஜிஆரின் 'கலையரசி'. (தமிழில் வெளியான  விண்வெளி கதையம்சம் கொண்ட முதல் படமும் இதுதான்) பத்ம விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகையும் பானுமதி தான். ஆண்டு 1966.


1939 தொடங்கி 1998 வரை சுமார் 60 ஆண்டு காலம் திரை வானில் ஜொலித்த பானுமதியின் பெயரைச் சொன்னால் எம்ஜிஆர், சிவாஜி நடித்த கருப்பு வெள்ளை படங்கள்தான் ரசிகர்கள் நினைவுக்கு வரும்.



மலைக்கள்ளன், மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடர்களும், நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, கலையரசி, தாய்க்குப்பின் தாரம், காஞ்சி தலைவன் என எம்ஜிஆருடன் நடித்த படங்களும்



மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, அறிவாளி, கள்வனின் காதலி என சிவாஜியுடன் நடித்த படங்களும் மனதில் நீங்காத எவர்கிரீன் ரகங்கள். தமிழில் வெளியான முதலாவது வண்ணப் படத்தின் (அலிபாபாவும் 40 திருடர்களும்) நாயகி. ஆனால் தமிழில் வண்ணப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை.


பின்னாளில் அம்மா, பாட்டி வேடங்களை போட்ட பானுமதிக்கு 1992ல் வெளியான பிரசாந்த், ரோஜா நடித்த 'செம்பருத்தி' படம் தான் தமிழில் கடைசி படம். சூட்டிங்கில் ஒரு சிங்கத்தை பார்ப்பது போல இருக்கும் என்பது நடிகை ரோஜா  கூறிய அனுபவம். அப்படியானால் இளம் வயது பானுமதியை கற்பனை செய்து பாருங்கள். 



தெலுங்கில் 1998 வரை நடித்திருக்கிறார். தமிழில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா நடித்த 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'பம்மா மாட்டா பங்காரு பாட்டா'வில் மனோரமா வேடத்தில் நடித்தவர் பானுமதி.


திரையுலகைத் தாண்டி பார்த்தால் விருது பெற்ற  சிறுகதை எழுத்தாளர், இசைப் பள்ளியின் முதல்வர், நடிப்புக் கல்லூரி பேராசிரியர் என பானுமதி பெற்ற அங்கீகாரம் ஏராளம். இவ்வளவு திறமைகளையும், பெருமைகளையும் கொண்ட ஒரு நடிகையை தமிழ், தெலுங்கு மட்டுமல்ல, எந்த திரையுலகிலும் பார்க்க முடியாது என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்


No comments: