Friday 18 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -61



ஆறு தலைமுறை கண்டவர். 75 ஆண்டு திரை வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தெலுங்கு ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் என்.டி.ராமாராவின் முதல் நாயகி, இன்று வரை சினிமாவில் நடிக்கிறார். அவர்தான் சவுகார் ஜானகி. பெரும் நடிகர்களே இவ்வளவு காலத்துக்கு திரையுலகில் தாக்குப் பிடிப்பது கஷ்டம்.


இளம் வயதிலேயே திருமணம் முடிந்து, 18 வயதில் குடும்ப சூழலால் திரைக்கு வந்த அவரது முதல் படமே அன்றைய பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் தயாரிப்பு. அதில், நாயகன் யார் தெரியுமா? ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். அவர் முதன் முதலில் நாயகனாக நடித்த 'சவுகார்' படத்தின் நாயகி இந்த ஜானகி தான். 1950ல் அந்த படம் வெளியானபோது, வி.என்.ஜானகி (எம்ஜிஆரின் மனைவி)யும்  ஹீரோயினாக இருந்ததால் பெயர் வித்தியாசத்துக்காக 'சவுகார்' படத்தின் பெயரையும் இணைத்து இவர் சவுகார் ஜானகி ஆகி விட்டார். 



பெயர் விஷயத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி, 'ஜெயம்' ரவி... இவர்களுக்கெல்லாம் முன்னோடி நம்ம சவுகார் ஜானகி தான்.



1950, 1960களில் பல படங்களில் நாயகியாக நடித்தாலும் இரண்டாவது நாயகி, தங்கை வேடங்களையும் தயங்காமல் ஏற்றார். 1960களில் அழுகாச்சி வேஷம் என்றால் இயக்குநர்களின் முதல் சாய்ஸ் இவர்தான். இரண்டு ஹீரோ சப்ஜெக்டிலும் நாயகியாக நிச்சயமாக இருப்பார். அதனால் சவுகார் ஜானகிக்கு பாடல்களும் கண்டிப்பாக இருக்கும்.


"மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி..."

"படித்திருந்தும் அறிவு கெட்டோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..."

மாதிரியான ஹிட் பாடல்கள் இவருக்குத்தான். 


எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர், ஜெமினி என அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'ஔி விளக்கு', 'பாமா விஜயம்', 'புதிய பறவை', 'பாவை விளக்கு', 'படிக்காத மேதை' என ஹிட் படங்கள் ஏராளம்.


'புதிய பறவை' படம் என்றதும் "கோப்பால் கோப்பால்..." வசனம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக, கிளப் டான்சராக வித்தியாசமான வேடத்தில் சவுகார் ஜானகி நடித்திருப்பார். அதில் வரும், "பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ..." பாடல் இவருக்குத்தான். இவரை சிவாஜி கொலை செய்ததும் அதை துப்பறியத்தான் சிஐடி யாக சரோஜாதேவி வருவார்.



எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த 'ஔி விளக்கு' படத்தில் விதவைப் பெண் வேடத்தில் வரும் சவுகார் ஜானகிக்கு, "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு..." என்ற பாடல் உண்டு. இந்த பாடல் தான், 1984ல் எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் நியுயார்க்கில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கான வேண்டுதல் பாடலாக தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.



தமிழுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் அந்த மொழிகளின் முன்னணி நடிகர்களான நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், தேவ் ஆனந்த், ராஜ்குமார் ஆகியோருடன் சவுகார் ஜானகி நடித்திருக்கிறார். 500க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் அவர், சினிமாவுக்கு நிகராக மேடை நாடகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.




காலத்துக்கு ஏற்றவாறு அம்மா வேடத்தையும் தயங்காமல் ஏற்று 1980களில் ரஜினி, கமல், மம்முட்டி போன்ற ஹீரோக்களுடன் நடித்தார். 'தீ', 'தில்லுமுல்லு', 'சிவா', 'வெற்றி விழா', 'அழகன்' இப்படி பல 80ஸ் படங்களை சொல்லலாம். ரஜினி நடித்த 'தில்லுமுல்லு' படத்தில் அசத்தி இருப்பார். இவர் நடித்த வேடத்தில் தான் மிர்ச்சி சிவா நடித்த 'தில்லு முல்லு' ரீமேக் படத்தில் கோவை சரளா நடித்திருப்பார். 



1950களில் துவங்கிய சவுகார் ஜானகியின் திரைப்பயணம், 2014ல் வெளியான 'வானவராயன் வல்லவராயன்' கடந்து, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான 'பிஸ்கோத்' படம் கடந்தும் தொடருகிறது. 



திரை வாழ்விலும், நிஜ வாழ்விலும் பல தலைமுறையை பார்த்த சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவியும் நடிகை தான். 1989ல் வெளியான ஆர்.பாண்டியராஜனின் 'நெத்தியடி' பட நாயகி வைஷ்ணவி. 'நாட்டாமை' படத்தில் பொன்னம்பலத்தின் மனைவியாக வருபவரும் அவர்தான். 'சந்தனக் காற்று', 'புலன் விசாரணை', 'மாநகர காவல்', 'மகா பிரபு', 'ஜெய்ஹிந்த்'என தமிழிலும் பிற மொழிகளிலும் சுமார் ஐம்பது படங்களில் நடித்திருக்கிறார், சவுகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி.


பாட்டி சவுகார் ஜானகி திருமணத்துக்கு பிறகு, நடிக்க வந்தார். பேத்தி வைஷ்ணவி திருமணமானதும் 1996ல் நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால், பின்னணி குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட 'ராக்கெட்ரி' படத்தில் நடிகை சிம்ரனுக்கு குரல் கொடுத்தவர் வைஷ்ணவி தான்.


தற்போது 90 வயதை கடந்து விட்ட சவுகார் ஜானகி, தனது முந்தைய தலைமுறையான பெற்றோர், பாட்டி ஆகியோரையும் சேர்த்து கிட்டத்தட்ட ஆறேழு தலைமுறையை பார்த்து விட்டார். இந்த பேறும் பெரும் பாக்கியமும் யாருக்கு கிடைக்கும்...!



#நெல்லை_ரவீந்திரன்

No comments: