Saturday 5 August 2023

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -60




"நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க, நான் ஒரு முட்டாளுங்க..."

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..."

"சிரிப்பு வருது சிரிப்பு வருது நினைக்க நினைக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பாத்து சிரிப்பு வருது..."

"பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான் ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே..."

"ஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது..."

இப்படி முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான தத்துவ பாடல்களை தனது சொந்த குரலிலேயே பாடியவர்.


அப்படியே,

"பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..."

"குங்குமப் பூவே கொஞ்சிப் புறாவே தங்கமே உன்னை கண்டதும்..."

"உனக்காக... எல்லாம் உனக்காக... இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக..."

"உன் திருமுகத்த ஒரு முகமா காட்டு..."

"கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே..."

இப்பிடி ஹீரோக்களைப் போலவே டூயட்டுகளிலும் கலக்கியவர். காமெடியன், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞனாக ஜொலித்தவர் தமிழ் சினிமாவின் 'சார்லி சாப்ளின்' சந்திரபாபு. 

அவரது தந்தை அந்தக் காலத்திலேயே பத்திரிகை நடத்தியவர். ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று முழு சொத்தையும் இழந்ததால், சந்திரபாபுவின் சின்ன வயதிலேயே தூத்துக்குடியில் இருந்து சிலோனுக்கு குடி பெயர்ந்தது அவரது குடும்பம். 



அங்குதான் சந்திரபாபு கல்லூரி படிப்பு வரை முடித்தார். அங்குதான் வெளிநாட்டு பாணியில் கோட், சூட், நடனம், பாடல் எல்லாமே அவரோடு ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தது அவரது குடும்பம். சந்திரபாபுவின் தந்தை இலங்கையில் மட்டுமல்ல, சென்னையிலும் தினமணி போன்ற பத்திரிகையில் பணியாற்றி இருக்கிறார்.

சென்னை வந்ததும் சினிமா சான்சுக்காக அலைந்த சந்திரபாபு 1947ல் 'தன அமராவதி' என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பெரிதாக வாய்ப்பு இல்லாததால் விரக்தியில் ஜெமினி ஸ்டூடியோ வாசலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தற்கொலை முயற்சி குற்றத்துக்காக கைதாகி நீதிபதி முன் நின்றபோது, நீதிபதியிடமே தனது சேஷ்டை கலந்த நடிப்பை நடித்து காண்பித்திருக்கிறார். பின்னர், எச்சரிக்கப்பட்டு விடுதலையானதும், நடந்த விஷயங்களை அறிந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் (விகடன் அதிபர்) 1952ல் வெளியான 'மூன்று பிள்ளைகள்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.



சேஷ்டை, அஷ்ட கோணலில் முக பாவம், பாடகர் என காமெடியன்களில் தனித்து நின்ற சந்திரபாபுவின் 'சார்லி சாப்ளின்' டைப் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர,  அடுத்த 15 ஆண்டுகளில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட அன்றைய முன்னணி நடிகர்கள் எல்லாருடனும் மிக முக்கியமான வேடங்களில், நாயகனுக்கு நிகராகவே நடித்தார். 

'குலேபகாவலி', 'மகாதேவி', 'புதையல்', 'பதிபக்தி', 'நாடோடி மன்னன்', 'மரகதம்', 'கவலை இல்லாத மனிதன்', 'பாதகாணிக்கை', 'கவலை இல்லாத மனிதன்' என அவர் நடித்த படங்கள் ஏராளம். 'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனுக்கு இணையான கேரக்டர். அதில் சந்திரபாபுவுக்கு ஜோடி சரோஜாதேவி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாடோடி மன்னன் படத்தில் கருப்பு வெள்ளை, கலர் என இரண்டு பகுதியிலும் படம் முழுவதும் வரும் நடிகர்கள் வெகு சிலரே. அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர்.



சந்திரபாபு நடித்த பெரும்பாலான படங்களில் அவருக்கு நிச்சயமாக பாடல் இருக்கும். அதை அவரே பாடி நடித்திருப்பார். எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் மற்றும் அவர்களுக்கு முந்தைய கால பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். 

டிஎம்எஸ், ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா, ஜமுனா ராணி என பிரபல பின்னணி பாடகர் மற்றும் பாடகிகளுடன் பாடியவர். 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'  படத்தில் இவர் பாடிய "ஜாலி லைப்... ஜாலி லைப்... தாலி கட்டினா ஜாலி லைப்" பாடலுக்கு வாயசைத்தவர்,  சிவாஜிகணேசன்...!



1960, 70 ஸ் மட்டுமல்ல இன்றளவும் சந்திரபாபு காமெடிக்கும் பாடலுக்கும் ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு உச்சத்தில் இருந்த சந்திர பாபுவின் திருமணமே தடபுடலாகத்தான் நடந்தது. அன்றைய முதல்வர் காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி என முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்ற திருமண விழா அது.



"உல்லாசமாகவே... உலகத்தில் வாழவே... கல்யாணம்... ஆஹா கல்யாணம்..." என திரையில் பாடியவருக்கு நிஜத்தில் கல்யாண வாழ்வு உல்லாசமாக அமையவில்லை. அவரது மனைவி வேறு ஒருவரை காதலிப்பது தெரிந்ததால் அந்த நபருடனேயே மனைவியை சேர்த்து வைத்து விட்டார்.

மண வாழ்வு சோகத்தை தொடர்ந்து பல சோகங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார், சந்திரபாபு. சொந்த படம் தயாரித்து  நஷ்டம் அடைந்தார். சம்பாத்தியத்தை இழந்தார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணத்தால் எதிரிகளை சம்பாதித்தார். இப்படியாக, சந்திரபாபுவின் பின்னாளைய வாழ்க்கை பரிதாபமாகி போனது. வெஸ்டர்ன் ஸ்டைலிலான அவரது நடை, பாவனை, ஸ்பூனில் சாப்பிடும் அழகு என சக நடிகர்களே வியந்து பார்த்த சந்திரபாபு பரிதாபமாக சரிந்தார்.

எம்ஜிஆருடன் தகராறு இருந்ததாக சொல்வார்கள். ஆனால், தனது சொந்த படமான 'அடிமைப் பெண்' (1969) படத்தில் எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். எம்ஜிஆர் தயாரித்த நாடோடி மன்னனிலும் (1958) சந்திரபாபு உண்டு.

சந்திரபாபுவின் கடைசி காலங்களில் தனது வீட்டில் இடம் கொடுத்து உதவி இருக்கிறார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இருவரும் நெருக்கமான நண்பர்கள். 1974ல் சந்திரபாபு மரணமடைந்தபோது இறுதிச் சடங்கை நடத்த உதவியவர், சிவாஜி கணேசன்.

வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து, நாடு விட்டு நாடு சென்று படிப்படியாக முன்னேறி, அப்படியே படிப்படியாக சறுக்கியவர் சந்திரபாபு. அவரது பாடல்கள் மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் கற்றுத் தரும் பாடங்கள் பல....

ஆகஸ்ட் 5. சந்திரபாபு பிறந்த நாள்...


#நெல்லை_ரவீந்திரன்

No comments: