1980களில், தென் மாவட்டங்களில் இந்த வார்த்தைகளை கேட்காதவர்களே கிடையாது.
பொழுது போக்குக்கு தியேட்டர்களை மட்டுமே நம்பி இருந்த காலம். அதுவும் கைக்கெட்டும் தொலைவில் இல்லாமல், படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதே திருவிழாவாக இருந்த காலம்.
அந்த சூழலில் அனைவரையும் காற்றின் வழியே சென்றடைந்து மகிழ்வித்தது, தமிழ் பாடல்களை தமிழர்களுக்கு அறிமுகம் செய்தது... எல்லாமே இலங்கை வானொலி தான்.
நெல்லை, மதுரை, திருச்சி என தமிழ்நாட்டில் சில வானொலி நிலையங்கள் இருந்தாலும், அதிக தொலைவுக்கு அவற்றின் ஒலிபரப்பு கிடைக்காது மற்றும் இன்றைய தூர்தர்ஷனின் ஓல்டு வெர்ஷன் தான் அவை.
ஆனால், இலங்கை வானொலி அப்படி அல்ல. கடல் கடந்தும் அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மண்ணில் மணம் வீசியது. நெல்லையர்களின் சுத்த தமிழுக்கு இலங்கை வானொலியும் முக்கிய காரணம் என்பது என் நம்பிக்கை.
கண்டசாலா தொடங்கி ஏ.எம். ராஜா ஜிக்கி, டி.எம்.எஸ்., சுசீலா, ஜானகி, எஸ்.பி.பி., ஜேசுதாஸ் என ஒரு சேர அனைவரையும் அழைத்து வந்து கான கீதங்களை அறிமுகம் செய்த வானொலி அது.
ஒவ்வொரு சினிமா பாடலிலும் அதை எழுதியவர் துவங்கி பாடியவர் இசை என அனைத்து தகவல்களையும் விரிவாக சொல்வார்கள்.
இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் என்றதும் அப்துல் ஹமீதையே பலரும் சொல்வர். அவர் தமிழகம் வந்து லலிதாவின் பாட்டுக்கு பாட்டு மாதிரியான வெகுஜன பொது மேடைகளில் தோன்றியது காரணமாக இருக்கலாம்.
ஆனால், ராஜேஸ்வரி சண்முகம், ராஜா உட்பட பலர், அன்றைய நேயர்களின் ஆதர்ச அறிவிப்பாளர்கள்.
'நேயர் விருப்பம்' என சினிமா பாடல்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சியில் மூச்சு விடாமல் பெயர்களை (அப்பப்பா, அம்மம்மா... என இலங்கை உறவு முறைகளையும்) அடுக்கும் போது, 'மண்ணில் இந்த காதலன்றி...' என மூச்சு விடாமல் பாடிய எஸ்.பி.பி. தோற்றுப்போவார்.
'சின்ன மாமியே...' மாதிரியான பாடல்களால் சிலோன் மனோகர் போன்றவர்களின் தமிழ் பாப் இசை பாடல்களையும் அறிமுகம் செய்த வானொலி. தமிழின் தனி ஆல்பம் பாடல்களின் ஊக்க சக்தி.
சினிமா பாடல்கள் தவிர, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு மணி நேர நாடகம், முழு நீள தமிழ் திரைப்படத்தை ஒரு மணி நேரத்துக்குள் வசன காவியமாக சுருக்கி ஒலிபரப்பாகும் 'ஒலிச்சித்திரம்' (முழு சினிமாவையும் காதால் பார்த்த அனுபவம் அது) என விதம் விதமான நிகழ்ச்சிகள், இலங்கை வானொலியின் அக்மார்க் ரகம்.
சிறுகதை ஒன்றை எழுதி, அதற்கு வானொலி அறிவிப்பாளர்களே ஏற்ற இறக்கத்துடன் குரல் கொடுத்து, அந்த கதையில் வரும் சம்பவங்களுக்கு பொருத்தமான சினிமா பாடலை இடை இடையே ஒலிபரப்புவது எல்லாம் வேற லெவல் புரோக்ராம்.
இலங்கை வானொலி மட்டும் இல்லாவிட்டால் 1980ஸ் தலைமுறைக்கு பித்து பிடித்திருக்கும்.
MW எனும் மத்திய அலைவரிசை, SW சிற்றலை; அதிலும் SW 1, 2 என்றெல்லாம் வெவ்வேறு அலைவரிசைகளில் அதன் ஒலிபரப்பு சேவைகள் உண்டு.
பெரும்பாலும் கொழும்பு வானொலி சேவையின் நிகழ்ச்சிகள் கிடைக்கும். கொஞ்சம் பிராண்டட் ரேடியாவாக இருந்தால் கண்டி வானொலி நிலைய ஒலிபரப்பையும் அவ்வப்போது கேட்க முடியும்.
இதற்கு இடையே, விடுதலைப் புலிகளின் வானொலியும் அவ்வப்போது கிடைக்கும். 'விக்ரம்' படத்தின் டைட்டில் ஸாங்கை (இதோ புலி வருது திட்டத்தால்...) அடிக்கடி ஒலிபரப்புவார்கள்.
இலங்கை வானொலியை போலவே, அந்த நாட்டின் 'ரூபவாஹினி' தொலைக்காட்சி சேவையையும் மறக்க முடியாது. அது பற்றி கூட நிறைய எழுதலாம்.
கொடைக்கானலில் துணை நிலையம் ஒன்றை சென்னை தூர்தர்ஷன் அமைக்கும் வரை, (அதன் பின்னரும் கூட), 'ரூபவாஹினி' தான் தென்னக மக்களின் பொழுதுபோக்கு.
இப்போது இலங்கை வானொலி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில், அதன் நேயராக மனம் மகிழ்கிறேன்
#நெல்லை_ரவீந்திரன்





































.jpg)











