Sunday 15 August 2010

வாழ்க ஜனநாயகம்

நாட்டின் 64 ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது.

''2004 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றதும் விவசாய வளர்ச்சி 7 ,8 ஆண்டுகளாக திருப்திகரமாக இல்லை என்று அறிந்தோம். அதனால் விவசாயத்தில் முதலீட்டை அதிகரித்தோம். மாவட்ட அளவில் விவசாய வளர்ச்சி திட்டங்களை ஊக்குவித்தோம். இதனால், தற்போதைய நிலையில் விவசாய வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் உயர்ந்து விட்டது"

இதை பார்த்ததும் நாட்டில் முப்போகம் விளைந்து விவசாயம் செழித்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் அது பிரதமரின் தவறு கிடையாது. இதற்கு அவரே அடுத்த வரியில் பதில் சொல்லி இருக்கிறார். ''எனினும், நாம் அடைய வேண்டிய இலக்கு மிகப் பெரியதாக உள்ளது. அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் 4 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும்"

பாருங்கள் மக்களே, 4 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்காம். அப்படி என்றால், அவருடைய பாஷையில் இப்போதைய வளர்ச்சி என்ன?
தொழில் வளர்ச்சி, ஒட்டு மொத வளர்ச்சி எல்லாம் 9 சதவீதம் வரை இலக்கு வைக்கும்போது விவசாயம் இப்படி கிடக்க காரணம் என்ன?
சிறப்பு பொருளாதார மண்டலம், கார், செல்போன் இப்படி கிடைத்தால் மட்டும் போதுமா? மனிதனின் வயிற்று பசியை இவை ஆற்றி விடுமா என்ன?
சரி. இவற்றை விடுங்கள். நாடு முழுவதும் பணவீக்கம், விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டு இருப்பது பற்றி அவர் சொன்னதையும், அதற்கு அவர் சொன்ன தீர்வு பற்றியும் பாருங்கள்.
'' கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருவதால் நீங்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாகி இருப்பீர்கள். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமாகவே பணவீக்கத்தை கட்டுப் படுத்த முடியும்"

இப்படி ஒரு பிரதமரை எந்த நாடாவது பார்த்ததுண்டா? இவர் யார்? விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். இவருக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமே கிடையாதோ?
வோட்டுக்கு காசு வாங்கும் ஜென்மங்கள் இருப்பதாலேயே இது போன்று அவரால் பேச முடிகிறது. பணவீக்கத்தை கட்டுப் படுத்தினால் விலை வாசி குறையுமா? விலைவாசியை குறைத்தால் பணவீக்கம் குறையுமா? இந்த பொருளாதார புலி விளக்குவாரா?

என்ன செய்வது? நாட்டில் நிலவும் எந்தவித பிரச்சினைகளையும் தீர்க்க முடியாத ஒரு அரசு. இலங்கை போன்ற சுண்டைக் காய் நாடுகளுக்கு கூட பயந்து நடுங்கும் பிரதமர். பாகிஸ்தானுக்கு சென்று அங்கேயே மூக்கு உடை பட்டு திரும்பும் வெளிஉறவு மந்திரி. இப்படிப்பட்ட நாட்டில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் உணர்ச்சி இல்லா மக்கள்.
வாழ்க ஜனநாயகம். ஓங்குக நம் சுதந்திரத்தின் பெருமை.

= வை.ரவீந்திரன் 

No comments: