Friday, August 20, 2010

விதியே, விதியே என் செய்ய நினைத்தாய்?

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்து விடுவோம் - என்று ஆக்ரோசமாக விழி சிவந்த பாரதி பிறந்த பூமி இது.
ஆனால், இந்த புண்ணிய தேசத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் உணவு கிடைக்கிறதா என்றால் அது சற்றே சிந்தனைக்கு உரிய விசயம். இதற்குத்தானா நாம் சுதந்திரம் வாங்கினோம்? மனிதனின் அடிப்படை தேவை என கருதப்படும் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் அனைவரும் தன்னிறைவு பெற்று விட்டோமா?
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என அணைத்து பொருட்களுமே ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி விட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முன் 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாதா பொன்னி அரிசி விலை 40 ரூபாய் ஆகி விட்டது. சமையல் எண்ணெய் விலை மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. அட சிங்கிள் டீ கூட ரெண்டு மடங்கு விலை ஏறி விட்டது. ஹோட்டலுக்கு சென்றால் விலை பட்டியலை பார்த்தாலே மயக்கம் வருகிறது. அந்த மயக்கத்தை தெளிவிக்க தண்ணீர் கேட்டால் அதற்கும் தனி விலை. குடிக்க தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் புண்ணிய தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும். தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அதை வழங்க வேண்டியது அரசின் கடமை. இதை, மக்களே உணராமல் பிண்டங்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது?இது உணவு பிரச்சினை. உணவுக்கே பிரச்சினை என்ற நிலையில் மானத்தை காக்கும் உடை பற்றி கேட்கவே வேண்டாம். பலருக்கு மானமே கிடையாது என்பது வேறு விஷயம். அடுத்ததாக இருப்பிடம். நகர் பகுதிகளில் புறா கூண்டுக்குள் அடைந்து கிடக்கும் அவல நிலையிலேயே மக்கள் உள்ளனர். கிராமங்களிலோ நிலைமை பரிதாபம். விளை நிலங்கள் எல்லாம் அரசால் கையகப் படுத்தப் பட்டு விலை நிலங்களாகி வருகின்றன. அந்த நிலங்கள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் விரிக்கப் படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு 100 ஏக்கர் மட்டும் தேவை என்றால் கூட 500 முதல் ஆயிரம் ஏக்கர் வரை எடுக்கப் படுகின்றன. இது போக, உள்ளூர் அரசியல் தாதாக்களின் ரியல் எஸ்டேட் ஆதிக்கம் வேறு.
இப்படி, இந்திய குடிமகனுக்கு அணைத்து வழிகளிலும் இருந்து அடி விழுகிறது. வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகிறான். நகரம் முதல் கிராமம் வரை இது தான் நிலைமை. 10 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே கவலை இன்றி செல்வா செழிப்பில் உள்ளனர்.நிலைமை இப்படி இருக்க, நம்மை ஆட்சி செய்வதற்காக நம்மால் தேர்வு செய்யப்பட்டவர்களின் செயல்கள் வெட்கக் கேடாக உள்ளன. தனி ஒரு மனிதனுக்கு உணவு கிடைக்கிறதா என்பதை பற்றி சிந்திக்க வேண்டிய தலைவர்களோ, தங்களுடைய சம்பளத்தை பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மாத சம்பளம் 50 ஆயிரமாக உயர்த்தியதோடு, அலவன்சுகளும் மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கப் பட்டுள்ளது. இவ்வளவு கொடுத்த பிறகும் திருப்தி அடையவில்லை. பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு ஒத்திவைக்கும் நிலைமைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த வெட்கக் கேட்டை எங்கேயாவது பார்க்க முடியுமா? சம்பளம் போதவில்லை என்று போராடும் லாலு மற்றும் முலாயம் ஆகியோரின் சொத்து விவரங்களை கேட்டால் தலை சுத்தும். பீகாரில் உள்ள மாடுகள் கூட, லாலு பிரசாத் பெயரை சொல்லுமே?
இவர்களை விடுங்கள், இப்போது எம்.பி.க்களாக இருக்கும் ஒவ்வரும் சோத்துக்கே கஷ்டப் படுபவர்களா? தேர்தலில் போட்டிடும் பொது இவர்கள் காண்பித்த சொத்து விபரங்கள் பல கோடியை தாண்டுமே? இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?
மத்திய மந்திரி சபை செயலாளரை விட ஒரு ரூபாயாவது அதிகம் பெற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம். அதாவது என்பது ஆயிரத்து ஒரு ருபாய் வேண்டுமாம். என்ன கொடுமை இது? அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் சம்பளத்தில் போட்டி போடுகின்றன. இந்திய குடிமகனோ வயிற்றில் ஈர தஊணியை கட்டிக் கொண்டு அதை வேடிக்கை பார்க்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறான்.விதியே, விதியே என் செய்ய நினைத்தாய்? எங்கள் மக்களை.
Post a Comment