Sunday, November 6, 2011

மாறிய மனம்

மாறிய மனம்
=========
= வை.ரவீந்திரன்

அப்போது எனக்கு 5 வயது இருக்கும், வீட்டில் அனைவருக்கும் நான் தான் செல்லப் பிள்ளை. செல்லப் பிள்ளை என்றாலே பாசத்தோடு தடைகளும் இருப்பது வழக்கம் தானே. போக்குவரத்து என்பதையே சிறிதும் அறிந்திராத அந்த சிறிய தெருவில் நான் இறங்குவதற்கு கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனக்கு வெளி உலகை அறிமுகம் செய்து வைத்தது வீட்டின் ஜன்னல் தான். என்னை விட உயரமாக இருந்ததால் நாற்காலி அல்லது ஏதாவது ஒரு பலகையை எடுத்து வந்து அதன் மீது நின்றபடி, ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு நிற்பது எனது வாடிக்கை. அதன் வழியாகவே, எனது வெளி உலகம் தொடங்கியது.

சுட்டெரிக்கும் நண்பகலுக்கு சற்று முந்தைய, அமைதியான முற்பகல் பொழுதை நீங்கள் கவனித்து பார்த்திருக்கிறீர்களா? நான் அனுபவித்து பார்த்திருக்கிறேன். அந்த அமைதியும் குருவிகளின் கீச்சொலிகளுமே எனது நண்பர்கள். அந்த சமயத்தில் பரவி நிற்கும் வெயிலின் அழகு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

சற்று வளர்ந்த பிறகு, தெருவில் செல்லவும் மற்ற குழந்தைகளுடன் அளவளாவவும் எனக்கு சிறிது சுதந்திரம் கிடைத்தது. வெளியூர்களில் இருந்து ஊருக்குள் வந்து பொருட்களை விற்பனை செய்யும் ஒவ்வொருத்தரையும் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஏக்கம் முளை விடும். ஊர் ஊராக சுற்றி திரிவதை என்னை அறியாமலேயே ஆர்வத்துடன் விரும்பத் தொடங்கினேன்.

பின்னிரவு நேரத்தில் குறி சொன்னதற்காக காலை நேரத்தில் மீண்டும் வந்து காசு கேட்கும் ராக்கோடங்கி, குரங்காட்டி, சைக்கிளில் துணிகளை ஏற்றி வந்து விற்பவர், பாத்திர வண்டிக்காரர், எண்ணெய் வியாபாரி, முன்னிரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பொருட்கள் விற்பனை செய்யும் ஏலக்காரர் என ஒவ்வொருவரும் எனது ஏக்கப் பயிருக்கு தண்ணீர் விட்டுச் சென்றனர்.

அன்று, இளவேனில் பருவத்தின் காலைப் பொழுது. தெரு முனையில் சிறுவர்களின் ஆரவாரமும் சந்தோஷ கூச்சலும் என்னை வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்தன. கூச்சல் எழுந்த திசையை நோக்கியபோது வியப்பால் எனது விழிகள் விரிந்தன.

ஆம். கரிய நிற குன்று போல ஆடி அசைந்து வந்தது ஒரு யானை. யானைப் பாகனை சுமந்து கொண்டு, தும்பிக்கையை அங்கும் இங்கும் ஆட்டியபடி வந்த அந்த சைவப் புதிரை பார்க்க சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கூடி விட்டனர். யானையின் பின்னாலேயே ஒரு மாட்டு வண்டியில் தென்னை ஓலை, மரக் கிளைகள் என யானைக்கு தேவையான தீவனங்கள் வந்து கொண்டிருந்தன.

கடைகளில் தும்பிக்கையை நீட்டி காசுகளை பெற்றுக் கொண்டிருந்த யானை, தவறாமல் அவற்றை பாகனிடம் தந்தது. அதற்காக மேல் நோக்கி தும்பிக்கையை தூக்கும்போது தந்தமும், யானையின் பெரிய உதடுகளுடன் கூடிய வாயும் என்னை ஆச்சரியப்படுத்தின.

ஒரு சில சிறுவர்களை யானை மீது ஏற்றி சில அடி தூரம் யானைப் பாகன் கூட்டிச் சென்றான். அச்சத்தால் வீறிட்டு அலறிய சிறுவர்களின் முகத்தில் யானையின் தும்பிக்கையில் தண்ணீர் ஊற்றி தெளிக்கச் செய்தான்.

பக்கத்து வீட்டு பொன்னம்மா பாட்டிக்கு பெரிய உருவம். உட்கார்ந்த இடத்தில் இருந்து அவரால் எழுந்திருக்க முடியாது. ஆனால், சிறிய மலைக் குன்று போல இருக்கும் இந்த யானை மட்டும் எப்படி தனது பருத்த உடலை சுமந்து கொண்டு அசைந்தாடி நடக்கிறது. எனக்குள் ஆச்சர்யம். தும்பிக்கை, தந்தம், வால், அதில் இருக்கும் முடி, பரந்த நெற்றி, தூண்களை போன்ற கால்கள் என அனைத்துமே வியப்பை ஆழ்த்தின.

இந்த உலகில் உள்ளவைகளில் எந்த நேரம் பார்த்தாலும் வியப்பை தருபவைகளில் யானையும் ஒன்று அல்லவா?

எங்கள் ஊர் பெரிய கோவிலில் தான் அன்றைய இரவு யானையும் பாகன் உள்ளிட்டோரும் தங்கினார்கள். யானையை பார்த்த வியப்பு விலகாமலேயே இருந்த நானும் வீட்டை மறந்து கோவிலிலேயே தங்கி விட்டேன். என்னைப் போலவே வேறு சில சிறுவர்களும் இருந்தனர். அண்ணன் வந்து அழைத்த பிறகே வீடு திரும்பினேன், ஏக்கத்துடன் யானையை திரும்பி திரும்பி பார்த்தபடி.

அன்றைய தினம் முழுவதும் யானை பற்றிய பேச்சே ஊர் முழுவதும் நிலவியது. ஆனால், எனது எண்ணம் மட்டும் பாகனை சுற்றியே சிறகடித்தது. யானைப் பாகனாகி விட்டால் ஊரை சுற்றி வரலாமே? பெரியவனானதும் யானைப் பாகனாக வேண்டும் என்ற உறுதியுடனேயே தூங்கிப் போனேன்.

நாட்கள் சில கழிந்தன. கருப்பு நிற உருவம் ஒன்றை கையில் பிடித்தபடி ஒருவன் வந்து கொண்டிருந்தான். தட்டையான கால்களில் கூரிய நகங்களுடன் உருட்டி விழித்தபடி காணப்பட்ட அது, ஒரு கரடி. கரடியை அழைத்து வந்து வித்தை காட்டுபவர் யாராவது அவ்வப்போது எங்கள் ஊர் வழியாக செல்வது உண்டு.

கரடிக்கு பின்னாலும் ஒரு சிறிய கும்பல் வந்து கொண்டு இருந்தது. உடல் முழுவதும் நீண்ட முடிகளுடன் காணப்பட்ட கரடியை பார்த்த மிரட்சியா அல்லது பயமா என தெரியவில்லை. ஒரு நாய், தலையை சிலிர்த்தபடி எழுந்தாலும் குரைப்பதா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டு இருந்தது.

எங்கள் வீட்டு அருகே வந்த கரடிக்காரன், மலைப் பகுதியில் இருந்து வருவதாகவும் தென்காசி நகருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அம்மாவிடம் கூறினான். சாப்பிட ஏதாவது தருமாறு கேட்டான். காலையில் சூடாக செய்த இட்லிகளில் சிலவற்றை அம்மா கொடுத்தார்.

கரடிக்காரன் கைகளில் ஏராளமான கருப்பு நிற கயிறுகள் இருந்தன. ஒரு சிலர் அந்த கயிறை காசு கொடுத்து வாங்கிச் சென்றார்கள். அவர்களிடம் கொடுக்கும் முன் கரடியிடம் கயிறை நீட்டினான், அந்த கரடிக்காரன். உடனே, முன்னங்கால்களில் வலது காலை உயர்த்தி அந்த கயிறு மீது விசிறுவது போல கரடி ஆட்டியது. இப்படி, கரடியால் ஆசிர்வதிக்கப்பட்ட கயிறை கரடிக்காரன் காசுக்கு விற்றான். அந்த கயிறை கட்டினால் பேய், பிசாசு பயம் இருக்காது என்றார்கள்.

இப்போது கரடிக்காரனும் எனது மனதுக்குள் இடம் பிடித்து விட்டான். அவனைப் போலாகி விட்டால் ஊர் ஊராக சுற்றித் திரியலாமே?

ராக்கோடாங்கி, குரங்காட்டி, பாத்திரக்காரன், துணி விற்பவன், ஏலக்காரன், யானைப் பாகன், கரடிக்காரன் இப்படி ஊர் சுற்றிகள் அனைவருமே எனது மனதை சுற்றி சுற்றி வந்தனர். படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறேன்.

ஏதோ தொலைவில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘ஏங்க, இன்னும் என்ன தூக்கம். சீக்கிரம் எழுந்திருங்க’ நேரம் செல்ல செல்ல செவியின் அருகில் அந்த குரல் கேட்கத் தொடங்கியது. அட. என் மனைவி ராதா. அப்போ. இவ்வளவு நேரம் நான் கண்டது எல்லாம் கனவா?

‘ஏங்க, காலையில கோயம்புத்தூர் டிரயின புடிக்கணும்னு சொல்லிட்டு இப்படி தூங்கிக்கிட்டு இருந்தா எப்படி? எந்திரிங்க. வென்னீர், டிபன் எல்லாம் ரெடி. கிளம்புங்க!’ ராதா என்னை விரட்டினாள்.

பிரபலமான பெரிய நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறேன். இன்று மாலை கோவையில் ஒருவரை சந்திக்க வேண்டும். அப்படியே, திருச்சி சென்று அங்கு ஒரு கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அடுத்த வாரம் டெல்லி செல்வதற்காக கம்பெனியிலேயே விமான டிக்கெட் எடுத்து வைத்துள்ளனர்.

ச்சே! ஓய்வே இல்லாமல் காலில் சக்கரத்தை கட்டியபடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த பொழப்பு என்ன பொழப்பு? மனைவி, குழந்தைகளுடன் விடுமுறை தினத்தை மகிழ்ச்சியாக கழிக்க முடிகிறதா? அடுத்தகட்ட ஊர் சுற்றும் பயணத் திட்டத்தை மனதுக்குள் சபித்தபடியே குளியறை நோக்கி புறப்பட்டேன்.
Post a Comment