Saturday 21 June 2014

புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு



புதுச்சேரி வீதிகளின் பெயர்களில் வரலாறு

ஒவ்வொரு மனிதரையும் அடையாளம் காண்பதில் முகம் எவ்வளவு பங்கு வகிக்கிறதோ, அதே அளவிலான பங்கை முகவரி வகிக்கிறது. முகவரி என்பது சில வேளைகளில் சரித்திர பதிவுகளாகவும் மாறுகின்றன. அதுபோன்ற முகவரிக்கு முதுகு தண்டாக இருப்பது வீதி.

வீதிகளை அடையாளம் காண்பதற்கு பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாகவே நீடித்து வருகிறது. ஆனால், ஒருமுறை சூட்டப்பட்ட பெயர், நூற்றாண்டு கடந்து இருக்குமா என்பது சந்தேகமே? சென்னை மாநகரில் தமிழ் பெயர்களை சூட்டும் திட்டத்தினால் பல்வேறு வீதிகளின் பெயர்கள் மாற்றம் பெற்று விட்டன. அத்துடன் சாதி பெயர்களையும் நீக்கியதால் பாரம்பரியம் மிக்க வீதிகளும் கூட புதிய பெயரை ஆடையாக போர்த்தி நிற்கின்றன.

ஆனால், சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள்ள சில தெருக்களின் பெயர்கள் நூற்றாண்டுகள் கடந்தும் அப்படியே நீடித்து வருகின்றன. அதில் ஒன்று புஸ்சி வீதி. 

யார் அந்த புஸ்சி?

இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றிய டூப்ளக்ஸ், புதுச்சேரி கவர்னராக பதவி வகித்தபோது அவருடைய தளபதியாக இருந்தவர் புஸ்சி. 1747 முதல் 1754ம் ஆண்டு வரை டூப்ளக்ஸ் தலைமையில் பிரெஞ்சிந்திய தளபதியாக புஸ்சி இருந்தார். டூப்ளக்ஸ் காலத்துக்கு பின் 1783 முதல் 1785 வரை புதுச்சேரியில் கவர்னராகவும் இருந்துள்ளார்.

புஸ்சியின் வீரத்தினால் புதுச்சேரியில் இருந்து செஞ்சி, வந்தவாசி, தக்காணம் என பிரெஞ்சு எல்லை விரிவடைந்தது.  ‘எனக்கு இன்னும் ஒரு புஸ்சி கிடைத்திருந்தால் கர்நாடகத்தில் ஆங்கிலேயரை வேரறுத்து இருப்பேன்’ என டூப்ளக்ஸ் கூறிய வார்த்தைகளில் இருந்து புஸ்சியின் வீரத்தை அறியலாம். அதே நேரத்தில், புஸ்சி ஒரு மனித நேயர். ‘வெற்றிகளால் கிடைக்கும் விருதுகளை விட மனித உயிர் மிகவும் மதிப்பு மிக்கது’ என்பது புஸ்சி அடிக்கடி கூறும் வார்த்தைகள்.

அவரை பெருமை படுத்தும் வகையில் புதுச்சேரி நகரின் தென்பகுதியில் ஒரு வீதிக்கு அவரது பெயரை பிரெஞ்சியர் சூட்டினர். புதுச்சேரி பஸ் நிலையத்துக்கு கிழக்கு பகுதியில் அந்த வீதி உள்ளது. புஸ்சி வீதியை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி புஸ்சி சட்டப்பேரவை தொகுதி ஒன்றும் சமீப காலம் வரை இருந்தது. தொகுதி சீரமைப்பின்போது அந்த தொகுதி மாறி விட்டது. எனினும், புஸ்சி வீதி அப்படியே இருக்கிறது.

பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வந்து காலனி ஆதிக்கத்தில் மின்னல் கீற்றாய் ஒளி வீசிய புஸ்சியின் இறுதி மூச்சு, புதுச்சேரி மண்ணில் தான் 1785ம் ஆண்டு அடங்கியது. கடற்கரையோரம் உள்ள கப்ஸ் கோயிலின் (புனித மேரி தேவாலயம்) தென் பகுதியில் புஸ்சி சமாதி உள்ளது.



ஊர் பெயரில் வீதிகள்

ஒரு நகரத்தை நோக்கி செல்லும் சாலையை அந்த நகரின் பெயரால் அழைப்பது வழக்கம். திருச்சி நெடுஞ்சாலை, மதுரை ரோடு இப்படி பெயர்கள் சூட்டப்படுவது உண்டு. ஆனால், புதுச்சேரி நகருக்குள் செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை என வித்தியாசமான பெயர்களை காணலாம். இதற்கும் பிரெஞ்சியரே காரணம்

ஏற்கனவே கூறியபடி, புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் காலனி ஆதிக்கம் செலுத்த பிரெஞ்சியர் தீவிரம் காட்டி வந்தனர். அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து 3 திசைகளிலும் அவர்களின் எல்லையை முடிந்த அளவுக்கு விரிவு படுத்தி சென்றனர். அதில் மேற்கு நோக்கிய அவர்களின் பயணத்துக்கு முழுமையான வெற்றி கிடைத்தது.
அதாவது செஞ்சி, ஆம்பூர், ஆற்காடு, வந்தவாசி என தொடங்கி கர்நாடகம் வரை பிரெஞ்சு ஆட்சி எல்லையை விரிவு படுத்தி வந்தனர். ஒவ்வொரு நகரையும் கைப்பற்றும்போது புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அதுபோன்று செஞ்சி மற்றும் ஆம்பூர் நகரங்களை கைப்பற்றிய தருணத்தில் அதை காலம் காலமாக நினைவு கூறும் வகையில் புதுச்சேரி தெருக்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு நூற்றாண்டை கடந்தும் பிரெஞ்சியர் சூட்டிய பெயர்கள் இன்றும் புதுச்சேரி வீதிகளில் நிலைத்து நிற்கிறது. 

= வை.ரவீந்திரன் 


No comments: