மன்னராட்சி மறைந்து
மக்களாட்சி மலர்ந்த பிறகும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனி
அரசு முத்திரைகளை வைத்துள்ளன. முத்திரை என்பது அந்தந்த அரசுகளின் தனித்துவ
அடையாளம். அந்த வரிசையில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் புண்ணிய பூமியாம்
புதுச்சேரி மாநிலத்தின் அரச முத்திரையாக ஜொலிப்பது, ஆயி மண்டபம்.
புதுச்சேரி
கடற்கரையோரத்தில் பாரதி பூங்காவின் நடு நாயகமாக வீற்றிருக்கும் வெள்ளை நிற ஆயி
மண்டபத்துக்கு சுமார் 200 ஆண்டு கால நெடிய வரலாறு உண்டு. கிரேக்க ரோமானிய கட்டிடக்
கலை கலந்து அழகுற கட்டி எழுப்பப்பட்டுள்ள ஆயி மண்டபம் எதற்காக கட்டப்பட்டது? இந்த
மண்டபத்தை கட்டியவர் யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை பின் தொடர்ந்து சென்றால்
ஆச்சரியமான தகவல்கள் நம்மை வரவேற்று விழி விரிய செய்கின்றன.
இந்தியாவில் பல
ஆண்டுகளுக்கு முன் தேவதாசி தொழில் அதிகமாக இருந்தது. அப்போது, கோயிலுக்கென்றே
தங்களை அர்ப்பணித்து உழவார பணிகளை செய்பவர்கள், செல்வந்தர்களின் விருப்பங்களை
பூர்த்தி செய்பவர்கள் எ பல்வேறு பிரிவினர் இருந்தனர். அதுபோன்ற இனத்தில் பிறந்த
ஒரு பெண் தான் ஆயி. புதுச்சேரியை அடுத்த முத்தரையர் பாளையத்தில் 16ம் நூற்றாண்டில்
மிகப் பெரிய மாளிகையில் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தவர். அந்த பகுதியை
சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தனது மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு
குளம் ஒன்றை வெட்டினார். அது தான் ஆயி குளம். புதுச்சேரியை அடுத்த முத்தரையார்
பாளையத்தில் இன்றும் கூட ஆயி பெயரிலான அந்த குளத்தை காணலாம்.
ஆயி வாழ்ந்த காலத்தில் புதுச்சேரி
எல்லை வரை கிருஷ்ண தேவராயரின் ஆட்சி பரவி இருந்தது. ஒருமுறை முத்தரையர் பாளையம்
பகுதிக்கு அவர் நகர்வலம் வந்தபோது ஆயி உடன் மோதல் ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக ஆயி
வாழ்ந்த மாளிகையை இடித்து தள்ளி தரைமட்டமாக்க கிருஷ்ண தேவராயர் உத்தரவிட்டதாகவும் அதனால்
மாளிகையை தானே இடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தில் குளத்தை ஆயி வெட்டியதாகவும் செவி
வழி கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.
17ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் புதுச்சேரிக்குள் வலுவாக காலூன்றிய பிரெஞ்சியர், கடலோர பகுதியை
கைப்பற்றி அங்கேயே நகரை நிர்மாணித்து வசிக்க துவங்கினர். கடலோரம் என்பதால்
அவர்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. 1850களில் இந்த பிரச்சினை பெரிதாக
எதிரொலிக்க துவங்கியதும் பிரான்சில் ஆட்சி செய்த மூன்றாம் நெப்போலியனிடம்
முறையிட்டனர். அப்போதைய புதுச்சேரி கவர்னர் போன்டெம்ப்ஸ் மூலமாக இந்த புகார்
சென்றது.
உடனே, தனது தலைமை பொறியாளர்
லாமைரெஸ்சே என்பவரை புதுச்சேரிக்கு நெப்போலியன் அனுப்பி வைத்தார். அவரோ,
புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் எங்காவது நல்ல குடிநீர் கிடைக்கிறதா என ஆய்வு
செய்தார். அப்போது லாமைரெஸ்சே கண்ணில் பட்டது, ஆயி குளம். அங்கிருந்தே நகருக்குள்
குடிநீர் கொண்டு வரலாம் என லாமைரெஸ்செ தீர்மானித்தார். அதன்படி, அங்கிருந்து
புதுச்சேரி நகருக்கு வாய்க்கால் வெட்டப்பட்டது அந்த வாய்க்கால் வழியாக வந்த நீரை
தேக்கி வைத்த இடம் தான் இப்போதைய பாரதி பூங்கா. அங்கிருந்தே நகருக்குள் வசித்த
பிரெஞ்சியருக்கு தண்ணீர் விநியோகம் துவங்கியது.
புதுச்சேரியில் பிரெஞ்சியருக்கு தண்ணீர் பிரச்சினை நீங்கிய தகவலையும் லாமைரெஸ்சே பணியையும் பாராட்டி மூன்றாம் நெப்போலியனுக்கு கவர்னர் போன்டெம்ப்ஸ் கடிதம் அனுப்பினார். அதில், லாமைரெஸ்சேயை கவுரவிக்கும் வகையில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மூன்றாம் நெப்போலியனோ, முழு விவரத்தையும் கேட்டதோடு புதுச்சேரி அருகிலேயே அருமையான குளம் எப்படி உருவானது என்றும் அதன் பின்னணியையும் விசாரித்தார்.
புதுச்சேரியில் பிரெஞ்சியருக்கு தண்ணீர் பிரச்சினை நீங்கிய தகவலையும் லாமைரெஸ்சே பணியையும் பாராட்டி மூன்றாம் நெப்போலியனுக்கு கவர்னர் போன்டெம்ப்ஸ் கடிதம் அனுப்பினார். அதில், லாமைரெஸ்சேயை கவுரவிக்கும் வகையில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மூன்றாம் நெப்போலியனோ, முழு விவரத்தையும் கேட்டதோடு புதுச்சேரி அருகிலேயே அருமையான குளம் எப்படி உருவானது என்றும் அதன் பின்னணியையும் விசாரித்தார்.
தாசி குலத்தில் பிறந்தாலும்
உயர்ந்த எண்ணத்துடன் இருந்த ஆயி குணம் அவரை கவர்ந்தது. எனவே, அவள் நினைவாகவே ஒரு
நினைவு சிக்கம் எழுப்பலாமே என முடிவு செய்தார். அதன் விளைவாக, ‘ஆயி என்ற தாசிப்
பெண்ணின் நல்ல மனதை கவுரவிக்கும் வகையில் அவள் நினைவாக ஒரு மண்டபம் எழுப்புங்கள்’
என உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவால் எழுந்ததே ஆயி மண்டபம்.
கிரேக்க-ரோமானிய கட்டடக்
கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் அந்த மண்டபம், பிரெஞ்சு மன்னர் மூன்றாம்
நெப்போலியன் ஆட்சி செய்த கி.பி.1852-1870 காலத்தில் கட்டப்பட்டது. புதுச்சேரி
மக்களின் குடிநீர் தேவைக்காக குளம் வெட்டிய ஆயி என்ற தாசிப் பெண்ணுக்கு எங்கிருந்தோ வந்த பிரெஞ்சியர் கவுரவம் அளித்த
நிலையில், சுதந்திரத்துக்கு பிறகு புதுச்சேரி அரசும் அந்த மண்டபத்தை அரசு
சின்னமாக்கி மேலும் பெருமை படுத்தியது. புதுச்சேரி வரும் மக்களை வரவேற்றபடி,
இரண்டு நூற்றாண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிப்புடன் வரவேற்கிறது, ஆயி மண்டபம்.
= வை.ரவீந்திரன்
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment