எம்ஜிஆர் ஆட்சிக்
காலத்தின்போது அமைச்சராக இருந்த தற்போதைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான
திருநாவுக்கரசர் அப்போது கூறிய வார்த்தைகள் பத்திரிகைகளில் மிகவும் பிரசித்தி
பெற்றது. அது, ‘எம்ஜிஆர் தான் நம்பர் 1. நாங்கள் அனைவருமே பூஜ்ஜியங்கள்’ என்ற வார்த்தைகள் 1ம் எண்
இல்லாவிட்டால் வெறும் பூஜ்ஜியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது அவரது
கருத்து. அவருடைய அந்த கருத்து இன்றும் கூட அதிமுகவுக்கு பொருத்தமானதாகவே
இருக்கிறது. ஒரு சின்ன வித்தியாசம். 1ம் எண் மட்டும் மாறி இருக்கிறது. அப்போது
எம்ஜிஆர். இப்போது ஜெயலலிதா.
முதன் முதலில் முதல்வராக
ஜெயலலிதா பொறுப்பு வகித்த காலத்தில் நடைபெற்ற குற்றத்துக்காக தற்போது, அவரும் சிறை
சென்று விட்டார். இனி, அதிமுக நிலைமை என்னவாகும்? ஜெயலலிதாவின் எதிர்காலம் என்னும்
பாதை எந்த திசை நோக்கி செல்லும்? தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்படுமா? இப்படி
விடை காண முடியாத அல்லது விடையை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள் சுழன்று கொண்டு
இருக்கின்றன. இந்த தருணத்தில் ஜெயலலிதாவின் 30 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பி
பார்க்கலாம்.
கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக
நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வரும் ஜெயலலிதாவின் அரசியல் பாதை முழுவதும்
வித்தியாசமானது. சத்துணவு திட்டத்தை எம்ஜிஆர் தொடங்கியபோது அது தொடர்பான
பணிகளுக்காக வந்த ஜெயலலிதாவை அவரது விருப்பத்தை அறியாமலேயே அரசியல் இழுத்துக்
கொண்டது. 1982ம் ஆண்டில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்
கொண்டார். பின்னர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், மேல்சபை எம்பி என பதவிகளும்
வரிசை கட்டி வந்தது. ஜெயலலிதாவின் அரசியல் பாதை ஏறுமுகமாக சென்றபோது 1987 டிசம்பரில்
எம்ஜிஆர் மறைந்தார்.
அதன்பிறகு, அதிமுக மூத்த தலைவர்களுக்குள்ளேயே
நடைபெற்ற தகராறுகள் அனைத்தும் அதிமுக வரலாற்றில் மட்டுமல்ல தமிழக அரசியல்
சரித்திரத்திலும் கருப்பு பக்கங்கள். ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய எடுத்துச்
சென்றபோது எம்ஜிஆர் உடல் இருந்த வண்டியின் மேல் இருந்து ஜெயலலிதா கீழே தள்ளி
விடப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். துக்க வீடுகளில் சொந்த பகையை தீர்த்து
வைக்கும் வழக்கம், அங்கும் அரங்கேறியது.
பின்னர், ஜானகி அணி,
ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னமும் தேர்தல்
ஆணையத்தால் முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை
தேர்தலில் தமிழகம் அதுவரை கண்டிராத அளவுக்கு திமுக, காங்கிரஸ், ஜெ அணி, ஜா அணி என
4 முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவில் அதிமுகவின் இரண்டு அணிகளுக்குமே
ஏமாற்றம் மிஞ்சியது. தமிழகத்தின் அரியணையை 12 ஆண்டுகளுக்கு பிறகு திமுக
கைப்பற்றியது. அதே நேரத்தில், அதிமுக தொண்டர்களும், அபிமானிகளும், எம்ஜிஆர்
விசுவாசிகளும் ஜெயலலிதா பக்கம் பெரும்பான்மையாக நிற்பது நிரூபணமானது. அறிமுகமே
இல்லாத சேவல் சின்னத்தில் தேர்தல் களமிறங்கி 29 தொகுதிகளை கைப்பற்றினார்,
ஜெயலலிதா. போடி நாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழக
சட்டப்பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரானார்.
ஆனால், எம்ஜிஆரின் மனைவி ஜானகி
தலைமையிலான அணியில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து பி.எச்.பாண்டியன் மட்டுமே
வெற்றி பெற்றிருந்தார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி தோல்வி
அடைந்தார். அவர் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியின்
தலைவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தோல்வியை ருசித்தார். அந்த தேர்தலுக்கு
பிறகு, இரண்டு அணிகளும் ஒன்றாகின. அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி பட்ஜெட்
தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து
பேரவையில் கலவரம் மூண்டது. அந்த கலவரத்தில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களால்
தாக்கப்பட்டு தலைவிரி கோலமாக சட்டசபையில் இருந்து வெளியேறினார், ஜெயலலிதா.
அப்போது, அவர் எடுத்த
சபதம், ‘இனிமேல் இந்த அவைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்’. ஏற்கெனவே, 1977ம்
ஆண்டில் இதே போன்ற சூழ்நிலையில் சபையில் இருந்து வெளியேறியபோது, எம்ஜிஆரும் இந்த
வார்த்தைகளையே கூறி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
அதன்பிறகு, 1991ம் ஆண்டு
நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அவரது வயது 43.
அரசியலுக்குள் நுழைந்து 10 ஆண்டுகளுக்குள் இவ்வளவு பெரிய பதவி அவரை தேடி வந்தது.
இடைப்பட்ட காலங்களில் அவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வழி நடத்தி வந்தவர்கள்,
நெடுஞ்செழியன் திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எஸ்டி சோமசுந்தரம் போன்ற
அதிமுக தலைவர்கள். ஆனால், இளம் வயதிலேயே மிகப்பெரிய பொறுப்பு கிடைத்ததும் கூடா
நட்பு, அதிகார போதை, பக்குவமின்மை போன்றவற்றால் ஏற்றி விட்டவர்களை கழட்டி
விட்டார். அதன் விளைவு தான், 20 ஆண்டுகளை கடந்து இன்றும் காலை சுற்றிய பாம்பாக
மாறி கடித்திருக்கிறது. எனினும், ஜெயலலிதாவின் இந்த போக்குக்கு 1996ம் ஆண்டிலேயே தமிழக
மக்கள் மிகச் சரியான தண்டனையை வழங்கினர். அப்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக
படுதோல்வியை தழுவியது. தர்மபுரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் சுகவனம் என்ற முன்பின்
அறிமுகமில்லாத திமுக வேட்பாளரிடம் ஜெயலலிதா பரிதாபகரமாக தோற்றார். ‘யானையின்
காதில் புகுந்த சிற்றெறும்பு’ என சுகவீனத்தை பார்த்து கருணாநிதி கூறிய
வார்த்தைகளும் அப்போது பிரபலமானது. விமர்சனமும் செய்யப்பட்டது.
இந்த காலகட்டத்தில் தான்,
ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர அப்போதைய
கவர்னர் சென்னாரெட்டியிடம் சுப்பிரமணியசாமி அனுமதி பெற்றிருந்தார். 1996ம் ஆண்டு
மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பல்வேறு ஊழல் வழக்குகளை ஜெயலலிதா மீது
பாய்ச்சினார். சென்னை மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். நாள்தோறும்
அவருக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது என்பதை அப்போதைய சட்ட அமைச்சர் ஆலடி அருணா
பட்டியலிட்டது தனிக்கதை. இப்போது, ஜெயலலிதாவுக்கு தண்டனை பெற்று தந்துள்ள வழக்கும்
அந்த சமயத்தில் தான் தீவிரமானது.
ஆனால், வழக்கை தொடர்ந்த
சுப்பிரமணிய சாமியே 1998ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணியாக இருந்தார் என்பதும்
மதுரை பாராளுமன்ற தொகுதியில் நின்று எம்பியாக வெற்றி பெற்றார் என்பதும் இப்போதைய
சூழ்நிலையை உற்று கவனிப்பவர்களால் நம்ப முடியாத உண்மை. அதுமட்டுமல்ல. இரண்டு மாத
சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்ததும் மதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகளை
ஒருங்கிணைத்து 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா
களமிறங்கினார். இப்போது, ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பாமகவும்,
வழக்கின் ஆரம்பகட்டத்தில் அவருடன் கூட்டணியில் இருந்தது என்பதும் ஆச்சரியமான
தகவல். அந்த தேர்தலில் 4 எம்பிக்களை வென்றதோடு மத்தியிலும் வாஜ்பாய் அரசில் மந்திரி
பதவிகளை பெற்றது, பாமக.
1996 தோல்வி, இரண்டு மாத
காலம் சென்னை மத்திய சிறையில் வாசம் என அஸ்தமனம் நோக்கி சென்ற ஜெயலலிதாவின்
அரசியல் வாழ்க்கையில் 1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி தெம்பை
கொடுத்தது. அப்போது, அதிமுக மட்டும் 18 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனாலும், அவரது
அடிப்படை குணம் மாறவில்லை. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணிக்கு ஆதரவு
தெரிவித்த போதிலும் கடிதத்தை ஜனாதிபதியிடம் அளிப்பதில் காலதாமதம் செய்தார்.
கடைசியில் 13 மாதங்களில் அந்த ஆட்சியை கவிழ்க்கவும் செய்தார். அந்த ஆட்சி
கவிழ்ப்பு செயலில் அப்போது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர் இதே சுப்பிரமணிய
சாமி.
ஜெயலலிதாவின் இத்தகைய தான் தோன்றித்தனத்தை
மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார், கருணாநிதி. அதனால், மத்தியில் வாஜ்பாய்
ஆட்சி கவிழ்ந்து 1999ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது பாஜக
கூட்டணிக்குள் திமுக புகுந்தது. அதிமுக வெளியேறியது. அப்போது, மத்தியில் கால் தடம்
பதித்த திமுக, சுமார் 15 ஆண்டு காலம் இடைவிடாமல் மத்திய அரசில் அங்கம் வகித்தது
என்பது ஊரறிந்த உண்மை. திமுகவின் இந்த ஏற்றத்துக்கு ஜெயலலிதாவே ஒருவகையில் மறைமுக
காரணம். வாஜ்பாய் ஆட்சியின்போது பாஜகவுடன் அவர் இணக்கமாக இருந்திருந்தால் இந்த
வாய்ப்பு திமுகவுக்கு கிட்டி இருக்காது.
மத்தியில் கிடைத்த
செல்வாக்கை தவற விட்டாலும், 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மூப்பனாரின் தமாகா
மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றது.
அப்போது, டான்சி ஊழல் வழக்கு காரணமாக அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
எனினும், அதிமுக வெற்றி பெற்றதும் முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர், சுப்ரீம்
கோர்ட் உத்தரவால் இதே ஓ.பி.எஸ்சிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்து விட்டு 7 மாத
இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதல்வரானார்.
டான்சி வழக்கில் ஜெயலலிதா
தப்பியதால், 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் திமுக தீவிர கவனம் செலுத்த
தொடங்கியது. சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைப்பது போல, ஜெயலலிதாவுக்கு
மிகச் சரியாக செக் வைப்பதில் தீவிர கவனம் செலுத்தியது. வழக்கு விசாரணையை கர்நாடக
மாநிலத்துக்கு மாற்ற உறுதுணையாக இருந்தது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸ்
கட்சியுடன் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது.
ஆனாலும், 1996ம் ஆண்டு
தேர்தல் தோல்வியை தவிர்த்து பார்த்தால் தமிழகத்தில் அவரது செல்வாக்குக்கு எந்த
பங்கமும் நிகழவில்லை. எனினும், வெற்றி, தோல்வி என்ற பரமபத விளையாட்டாகவே அவரது
அரசியல் பயணம் தொடர்ந்தது. 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட ஆளும்
அதிமுக தோல்வி அடைந்தாலும் 70 தொகுதிகளை கைப்பற்றியது. அப்போது, காங்கிரஸ் தயவில் ஆட்சியில்
அமர்ந்த திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 25 இடங்கள் தான் வித்தியாசம். அதனாலேயே,
‘மைனாரிட்டி திமுக அரசு’ என்பதை கூறி வந்தார், ஜெயலலிதா. அப்போதைய திமுக
ஆட்சியின்போது, ஒருமுறை அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு சஸ்பெண்ட்
செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டிருந்தார். அன்றைய தினம் ஜெயலலிதா சபையில்
இல்லை. அதனால், அவருக்கு அந்த உத்தரவு பொருந்தவில்லை. எனவே, தனியாளாக மறுநாள்
சபைக்கு சென்று திமுக மூத்த அமைச்சர்கள் அனைவரும் திணறும் அளவுக்கு பல்வேறு
கேள்விகளை எழுப்பி திணற வைத்தார். ஜெயலலிதா. அப்போது, அவருடைய அரசியல் மற்றும்
ஆட்சி அனுபவ அறிவு வெளிப்பட்டது.
அதன்பிறகு, 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து சந்தித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். வழக்கம்போல, அவருடைய குணம் வெளிப்பட்டது. கம்யூனிஸ்ட், தேமுதிக கட்சிகளுடன் பகைமை ஏற்பட்டது. 2014 தேர்தலிலும் யாருடனும் கூட்டணி இல்லை என்று தனியாக புறப்பட்டார். வென்றார். ஆனால், அந்த
வெற்றியால் கிடைத்த பலன் என்ன? தற்போது, தமிழக அரசியலில் இன்று தனியாகவே அதிமுக இருக்கிறது. தற்போது, ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் ஜெயலலிதா இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதிமுகவுக்கு எதிராக ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதிமுகவின் நிலைமை என்னவாகும்......? ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் எப்படி போகும்.......?
வெயிட் அண்ட் ஸீ....
= வை.ரவீந்திரன்.
No comments:
Post a Comment