Saturday 18 October 2014

அன்புள்ள ரஜினிகாந்த்....

அன்புள்ள ரஜினிகாந்த்....
இந்த திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த போதிலும் இன்னமும் தமிழக மக்களின் அன்புக்குரியவராகவே இருக்கிறார், ரஜினி. ‘16 வயதினிலே’ படத்தில் பரட்டை கதாபாத்திரத்தில் அவரது வில்லத்தனம் கண்டு மிரண்ட தமிழ் ரசிகர்கள், பின்னாளில் அவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாட தொடங்கியது காலம் அவருக்கு அளித்த பரிசு. ‘புவனா ஒரு கேள்விக் குறி’, ‘மூன்று முடிச்சு’, ‘நினைத்தாலே இனிக்கும்’ என இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவே தலை காட்டிய ரஜினியின் கலைப்பயணம் சாதாரணமானது அல்ல. நடந்தவை அனைத்துமே வியத்தகு வளர்ச்சி. ஒவ்வொரு படத்தையும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியதோடு அவரை திரையுலகின் ராஜாதி ராஜாவாக்கினர், தமிழக மக்கள்.

20 ஆண்டுகளுக்கு முன் ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியானபோது, தமிழகமே சுறுசுறுப்பானதே. அந்த படத்தை இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் கூட எனது 10 வயது மகன் ரசித்து பார்க்கிறான். கார்ட்டூன் சேனல் பார்க்கும்போது கூட விளம்பர இடைவேளை சமயத்தில் ரிமோட்டை தேடும் அவன், ‘பாட்ஷா’ படத்தை விளம்பரங்களுடன் பார்த்ததை கண்டு வியந்தேன். இத்தனைக்கும், அவன் ஏற்கனவே சில முறை அந்த படத்தை பார்த்திருக்கிறான். அந்த படம் வெளியாகி 10 ஆண்டுக்கு பிறந்த சிறுவனை கூட கவர்ந்திழுக்கும் அந்த திரைபடத்தின் வெற்றி விழா சமயத்தில் ரஜினிகாந்த் உதிர்த்த வார்த்தைகள் தமிழக அரசியலையே புரட்டி போட்டன. ‘இப்போதைய ஆட்சி மீண்டும் திரும்பினால்.... இந்த தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்பதே அந்த வார்த்தைகள். அதன்பிறகு, ‘ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று பட்டி தொட்டி எங்கும் பரவிய வாசகங்களும், அமெரிக்காவில் இருந்தபடியே ரஜினி அளித்த தொலைக்காட்சி பேட்டியும் தமிழகத்தில் அரசியல் பிரளயத்தையே ஏற்படுத்தின.

அதன்பிறகு, அவ்வப்போது அரசியலுக்கு ரஜினி வருவதாக தகவல்கள் வெளியாவதும் அந்த சமயங்களில் அவரது ஏதாவது ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற உடனேயே அந்த செய்திகள் அடங்குவதும் வாடிக்கையாகி விட்டன. இப்போது கூட, அவரை சுற்றி ஒரு அரசியல் வட்டம் பிரகாசிக்க தொடங்கி இருக்கிறது. வயதும் அறுபதை கடந்து விட்டதால், இனி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று ஒரு கூட்டம் எதிர்பார்ப்பது உண்மை. ஆனால், அதற்கு முன் சில உண்மைகளை அவர் புரிந்து கொள்வது அவசியம். 1999ம் ஆண்டு படையப்பா வெளியான பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் அவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை 4 மட்டுமே (குசேலனை தவிர). அதிலும் பாபா பிளாப். இந்த நிலையில் கூட, ரஜினி என்ற மூன்றெழுத்துக்கு தமிழகமே கட்டுண்டு கிடக்கிறது. இதை அவருக்கான ஏகபோக ஆதரவு என்று கருதினால், அதை விட இமாலயத் தவறு எதுவும் இருக்காது.

ஏனெனில், திரையுலகம் வேறு. அரசியல் களம் வேறு. குடும்பங்கள் தொடங்கி பணி புரியும் இடங்கள் வரை எங்கெங்கும் அரசியல் நிலவும் இன்றைய காலகட்டத்தில் அரசியல் துறையில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். திரையுலகில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் பற்றிய தகவல்களையும் ரஜினி ஆராய்ந்து பார்ப்பது நல்லது. தந்தை பெரியாரால் பட்டம் சூட்டப்பட்ட நடிகவேள் எம்ஆர் ராதா, லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் ஆகியோர் அரசியலில் தீவிர நாட்டம் கொண்டவர்கள். அவர்கள், ஆட்சியிலோ  அதிகாரப் பதவியிலோ அமர்ந்ததில்லை. தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகப் பட்டாளத்தை வைத்திருந்த (இன்றும் வைத்திருக்கும்) சிவாஜி கணேசனால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. அவர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை கூட தமிழக அரியணையில் அவரால் ஏற்ற முடியவில்லையே? அது மட்டுமல்ல. தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி அதிமுக (ஜா) அணியுடன் 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலை அவர் சந்தித்தபோது, அந்த அணிக்கு 4வது இடமே கிடைத்தது. அவரே  தொகுதியில் 3ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார். எம்ஜிஆரால் கலை உலக வாரிசு என அடையாளம் காட்டப்பட்ட பாக்கியராஜ் மற்றும டி.ராஜேந்தர் ஆகியோரின் அரசியல் பயணமும் இந்த வழியில் தான் முடிந்தது.

தியாகு, வாகை சந்திரசேகர், நெப்போலியன், ராதாரவி, ராமராஜன், குமரி முத்து, தீபா, சிம்ரன், விந்தியா என திரையுலக அரசியல் பிரபலங்கள் ஏராளம். வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பொது ஒற்றுமை உண்டு. அதாவது, தேர்தல் சமயங்களில் மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளால் அவர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றனர். இந்த வரிசையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் அரசியலில் குதித்தவர், விஜயகாந்த். தனித்து நின்றபோது தனியாளாக மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது. இன்றைய அரசியல் அரங்கில் அவரது நிலைமையும் நிலைப்பாடும் என்ன என்பதை ரஜினிக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கனவு தொழிற்சாலை என்னும் திரையுலகம் வேறு. மக்களின் கனவுகளை தொழிற்சாலையாக்கி லாபம் பார்க்கும் அரசியல் உலகம் வேறு.

இந்த அரசியல் சூழலில் நீந்தி கரை சேர்ந்ததோடு அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர், எம்ஜிஆர் மட்டுமே. மேலெழுந்தவாரியாக பார்த்தால் கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்குள் ஆட்சியை எம்ஜிஆர் கைப்பற்றியது போல தோன்றும். உண்மையில், 1950ல் தொடங்கி 27 ஆண்டு கால அரசியல் பயணத்துக்கு பிறகே அவருக்கு அந்த வெற்றி சாத்தியமானது. முதன் முதலில் அவர் கதை நாயகனாக நடித்த ராஜகுமாரி, மந்திரி குமாரி (கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படம்) படங்கள் வெளியான சமயத்திலேயே திராவிட இயக்கத்துடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். தனது படங்களில் காட்சிகள், நடிகர்களின் உடை, பாடல்கள் என சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுக கொள்கையை, கட்சிக் கொடியை, சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் அக்கறை காட்டினார்.

திரையுலகம் மட்டுமல்ல நேரடி அரசியலிலும் முழு ஈடுபாட்டுடன் அவர் பங்காற்றினார். திமுக முன்னணி பேச்சாளர்களுக்கு இணையாக ஊர் ஊராக சென்று பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். ‘தம்பி... ராமச்சந்திரா.  உன் முகத்தை காட்டு ஓரு லட்சம் ஓட்டுகள் விழும்’ என்று பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகளும் ‘வேட்டைக்காரன் வருவாண்ணேன்.. வேட்டையாடிட்டு போயிருவாண்ணேன்...’ என்று பெருந்தலைவர் காமராஜர் கூறிய வார்த்தைகளும் இதை உறுதிப்படுத்துபவை. 1967ம் ஆண்டு முதலில் எம்எல்ஏ ஆனார். பின்னர், 1972லும் எம்எல்ஏ. அதன்பிறகே 1977ல் தமிழக முதல்வராக முடிந்தது. எம்ஜிஆரின் இந்த 27 ஆண்டு கால அரசியல் அனுபவம், மக்கள் செல்வாக்கு ஆகியவை கவசங்களாக இருந்ததால் தான் அரசியல் களத்தில் ஜெயலலிதாவால் வெற்றி பெற முடிந்தது.

எனவே, எம்ஜிஆர் வழியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று ரஜினிகாந்த் கருதினால் அது அவரது அறியாமையின் வெளிப்பாடாகவே அமையும். மேலும், அரசியல் என்பது சாதாரணமானது அல்ல. நெருங்கிய நண்பர்கள் கூட ஜென்ம விரோதிகளாக மாறும் ஆச்சரியங்கள் நடைபெறும். கூரிய வாளாக விமர்சனங்கள் பாய்ந்து வந்து இருதயத்தை அறுத்தெடுக்கும். ‘மலையாளி, அட்டைக்கத்தி வீரர்’ என்பதெல்லாம் எம்ஜிஆர் எதிர்கொண்ட விமர்சனங்களில் சில. காமராஜர் பற்றிய விமர்சனங்களை அச்சில் ஏற்ற முடியாது. பேரறிஞர் அண்ணாவை கூட தெலுங்கு நடிகை ஒருவருடன் இணைத்து பேசியது உண்டு. இதுபோன்ற விமர்சன பானங்களால் ஜெயலலிதாவும் துளைத்து எடுக்கப்பட்டார். நேற்று அரசியலுக்கு வந்த குஷ்பு வரை இந்த தனிநபர் விமர்சனங்கள் தொடருகின்றன. தமிழகத்தின் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பற்றிய விமர்சனமும் தமிழக மக்களிடையே அவரைப் பற்றி உருவாக்கப்பட்டு இருக்கும் ஒருவித பிம்பமும் ரஜினி அறியாதது அல்ல.

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ரஜினி காந்தின் செல்வாக்கை பயன்படுத்தி ஓட்டு அறுவடை செய்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளன என்பதே உண்மை. ஒருவேளை ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அவர் இணைந்தால், மாற்று அணிகளில் இருந்து கிளம்பும் சரம் சரமான விமர்சன கணைகளை எப்படி எதிர்கொள்வார். 1999ம் ஆண்டில் பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தபோது ரஜினியை நோக்கி ராமதாஸ் எழுப்பிய 10 கேள்விகள் இன்னமும் விடை கிடைக்காமல் அப்படியே இருக்கின்றன. இதுபோல, ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக ரஜினி அளித்த வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசியலில் புகுந்தால் இவை எல்லாம் விசுவரூப விமர்சனங்களாக மாறலாம். தமிழகத்துக்கு அவர் செய்தது என்ன? என்பதில் தொடங்கி அவரது கர்நாடக பூர்வீகம் வரை அலசப்படும். நதி நீர் இணைப்பு திட்டத்துக்காக ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார். அதுவும் இப்போது தூசி தட்டி எடுக்கப்படும். இதற்கெல்லாம், அரசியல் ரீதியாக என்ன பதில் வைத்திருக்கிறார், ரஜினி.

எந்த வித தொந்தரவும் இல்லாமல் நடிப்பு, ஓய்வு, ஆன்மிகம், அமைதி என்று செல்லும் ரஜினியின் வாழ்க்கை ஓட்டத்துக்கு எந்த அளவுக்கு அரசியல் கை கொடுக்கும்?  என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், விமர்சனத்தை எதிர் கொள்ளும் சக்தியும் தோல்வியை கண்டு துவளாத மனப் பக்குவமும் இருந்தால் அரசியலுக்கு ரஜினி வரலாம். ஏனெனில், இது ஜனநாயக நாடு. சாதாரண மனிதனும் அரியணை ஏறலாம், ஆட்சி பரிபாலனம் செய்யலாம்.... மக்கள் ஆதரவு இருந்தால்....!

இந்த ஆதரவை பெற முடியாமல் தோல்வியை நோக்கி ரஜினியின் அரசியல் பயணம் சென்றால்.....? வனத்தில் கம்பீரமாக உலவும் சிங்கமானது, சர்க்கஸ் கூண்டிலோ உயிர்க்காட்சி சாலையின் செயற்கை வனத்திலோ உலவ நேரிடலாம். ஆனால், சிங்கம் என்பது சிங்கமாகவே இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

= வை.ரவீந்திரன் 

No comments: