Tuesday, October 28, 2014

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...! நண்பனே...!


‘பசுமை நிறைந்த நினைவுகளே.... பாடித் திரிந்த பறவைகளே....’, ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்..... நம்மை நாம் அங்கே தேடலாம்...’ இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் பள்ளிப் பருவ பால்ய கால நினைவுகள் அலை மோதுவதை தவிர்க்க முடியாது.

பாடப் புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையே மயில் இறகை மறைத்து வைத்து, அதை இருட்டு அறைக்குள் எடுத்துச் சென்று அது குட்டி போட்டுள்ளதா என்று அவ்வப்போது ரகசியமாக எடுத்து பார்த்திருப்போம். அதுபோலவே, பள்ளிக்கூட நினைவுகளையும் நினைவு பொக்கிஷத்தில் பதுக்கி வைத்திருந்து ஓய்வு நேரங்களில் அதை ரகசியமாக எடுத்து எடுத்து பார்ப்பது என்ற அனுபவம் அனைவருக்குமே இருக்கும்.

அதுவும் பதின்மப் பருவமான டீன் ஏஜ் வயது பள்ளிக் கூட அனுபவங்களை பற்றி விவரிக்க தேவையில்லை. ஒட்டுமொத்த நினைவுகளை சுட்டுப் பொசுக்கினால் கூட அந்த நினைவுகளின் உயிர் கருகும் வாசம் சுழன்று கொண்டே இருக்கும். எனக்கும் கூட.....? அந்த நினைவுகள் அவ்வப்போது எழுந்து எட்டிப் பார்த்து விட்டு செல்வது உண்டு. அதுவும், 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான் படித்த பள்ளி வழியாக செல்லும் ஒவ்வொரு சமயத்திலும் அதன் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கும். பிறந்த வீட்டில் சகோதர, சகோதரிகளுடன் வாழ்ந்த நினைவுகளை அசைபோடும் இல்லத்தரசிகளை அப்போது நினைத்துக் கொள்வேன்.

இதுபோன்ற பள்ளிப் பருவ நினைவுகளை மீட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால்...? அதுவும் அந்த பள்ளியிலேயே...? நினைத்தாலே இனிக்கும் அத்தகைய நிகழ்வை, பள்ளித் தோழர்களுடன் ருசித்துப் பார்த்தேன்(தோம்). 24-10-2014 அன்று அந்த கிடைத்தற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்து ஏக்கப் பெருமூச்சு விட்ட அந்த தருணங்கள் அனைத்தும் நனவில், நிஜத்தில் ஈடேறியது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரில் உள்ள மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1989-1991 ஆண்டுகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணிதப்பிரிவில் படித்த மாணவ, மாணவிகள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடினோம். கால் நூற்றாண்டு காலத்துக்கு பிறகு பள்ளிக்குள் நுழையும்போதே உடலில் எடை என்னும் பாரம் குறைந்து மனம் மட்டும் அந்தரத்தில் இறகாக மிதந்து சென்று நினைவுகளை பள்ளியின் வான் வெளியில் கவிதை வரைந்து செல்வது பான்ற உணர்வு. உடன் படித்த மாணவர்கள் அனைவரையும் அவர்களுடைய குடும்பத்தினருடன் சந்தித்தபோது அந்த பரவச உணர்வு பன்மடங்காகி ஜிலீரிட்டது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, 25 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு பாடம் எடுத்து தற்போது ஓய்வு பெற்று 70 வயதை தாண்டி நிற்கும் ஆசிரியர்கள் அனைவரையுமே நேரில் பார்த்தபோது.... அதை மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது போன்ற வார்த்தைகளுக்குள் அடைத்து விட முடியாது. இந்த உலகில் ஒவ்வொரு விநாடியும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் ஒளித்து வைத்திருக்கிறது என்ற வார்த்தைகள் அடிக்கடி எனக்குள் தோன்றுபவை. அந்த வார்த்தைகளின் நிஜ வடிவத்தை அந்த நொடியில் உணர்ந்தேன்.

11 மற்றும் 12ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் எடுத்த ஆசிரியர்களும் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் அன்றைய தலைமை ஆசிரியர் (அவருக்கு இப்போது வயது 82) என அனைவருமே எங்களைப்போல குழந்தை மன குதூகலத்துடன் வந்திருந்ததை காணும்போது ஆசிரியர், மாணவர் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் திரிவேணி சங்கமம் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் அனைவருமே 70 வயதை கடந்த போதிலும் எங்களை காண்பதற்காகவே சிரமம் கருதாது பள்ளிக் கூடம் வந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. அதுவும் சென்னையில் குடியேறிவிட்ட இயற்பியல் ஆசிரியர் திரு.சுகிர்தராஜ், இதற்காகவே வந்திருந்தார். இந்த சந்திப்பானது மன நிறைவைத் தருகிறது என்று மகிழ்ச்சியில் திளைத்தார் எங்களுடைய உயிரியல் ஆசிரியர் திரு. அந்தோணி ஆரோக்கியசாமி.

அன்றைய மாணவர்களாகிய நாங்கள் அனைவருமே தற்போது 40 வயதை எட்டிப் பிடிப்பவர்கள். குடு குடு கிழவனாக இருந்தால் கூட, அவரது தாயாருக்கு அவர் என்றுமே குழந்தை தான். எங்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ எவ்வளவு வயது கடந்திருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் மாணவர்கள் தானே. அதனால், 40 வயதை கடந்து விட்ட நீங்கள் அனைவரும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று உடற்பயிற்சி ஆசிரியரும் ஒவ்வொருவரும் அவரவர் துறைகளில் சாதனையாளராக மாற வேண்டும் என்று இயற்பியல் ஆசிரியரும், ஒவ்வொருவரும் ஏதாவது தலைமை பொறுப்பிலோ நிர்வாக பொறுப்பிலோ இருக்கலாம் என்பதால் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெய்வத்தின் துணை கொண்டு வெல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் திரு. தெய்வ நாயகம் அவர்களும் கூறிய அறிவுரைகள் அர்த்தமுள்ளவை.

‘37 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக பணியில் இருந்திருக்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளை பத்திரிகை மற்றும் வெவ்வேறு வழிகளில் கேள்விப்படும்போது மனதுக்குள் லேசாக ஆசை துளிர் விடும். நம்முடைய மாணவர்கள் யாரேனும் இப்படி அழைக்கமாட்டார்களா என்று கருதுவேன். இப்போது, எனது ஆசை நிறைவேறிவிட்டது’ என்று வேதியியல் ஆசிரியர் திரு.கிறிஸ்டோபர் ஜெபசிங் அவர்கள் கூறியபோது எங்களுடைய மனமும் திருப்தியும் பெருமிதமும் கலந்த உணர்வில் ஆழ்ந்தது என்பது கற்பனை கலவாத நிஜம்.

தமிழ் வழிக் கல்வியை பலரும் குறை கூறும் இந்த காலத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதையும் தனது குழந்தைகள் இருவர் ஜெர்மனி, இங்கிலாந்தில் இருப்பதையும் நினைவு கூர்ந்தார், தமிழ் ஆசிரியர் திரு.ஜெயப்பிரகாஷ். அவருடைய குழந்தைகள் மூவரும் எங்கள் பள்ளியில் தான் படித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூழ்நிலையை கலகலப்பாக்கி வகுப்பறையாக மாற்றிய பெருமையை எடுத்துக் கொண்டார், தாவரவியல் ஆசிரியை திருமதி.ஜெயசீலி அவர்கள். அவர் நடத்திய தாவரவியல் வினாடி வினா போட்டியில் பங்கேற்று பதிலளித்த எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் பரிசுகளை அள்ளித் தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக கூடியுள்ள இந்த நிகழ்வானது கூடினோம்.... கலைந்தோம்... என்று இருக்காமல் இந்த பள்ளியில் தற்போது படித்து முடிக்கும் ஏழை மாணவர்களின் மேல் படிப்புக்கு உதவும் விதத்தில் ஒரு அமைப்பாக (அலுமினி அசோசியேஷன்) மாறுவதற்கான தொடக்கப்புள்ளியாக இருந்தால் நல்லது என்பது எங்களுடைய 12ம் வகுப்பு காலங்களில் பணியில் சேர்ந்து இன்றும் ஆசிரியர் பணியில் தொடரும் வேதியியல் ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியன், நெல்லையப்பன், வில்லியம், பாஸ்கர் ஆகியோரின் அன்பு வேண்டுகோளாக அமைந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அந்த பாதை நோக்கி இந்த பயணம் செல்லும் என்று நாங்களும் நம்புகிறோம்.

= வை.ரவீந்திரன் 
Post a Comment