Sunday 19 July 2015

அருவி ஒரு ஆச்சரியம்...





அருவி ஒரு ஆச்சரியம்...

பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் மெலிதான புன்னகையையாவது வரவழைக்கும் சூட்சுமம் அருவிக்கு உண்டு. அருவி என்றதும் முதலில் குற்றாலம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

முன்பெல்லாம் வாடை காற்றின் குளிர்ச்சியை வைத்தே குற்றாலத்தில் சாரல் சீஸன் ஆரம்பித்து விட்டதை சுற்றியுள்ள ஊர்களில் கண்டு பிடித்து விடுவார்கள். கூடவே விசிறி வரும் சாரல் மழை தூறலின் புண்ணியத்தில் அருவியில் குளிக்கும் ஆசை துளிர் விட தொடங்கி விடும். 30 கி.மீ. தொலைவில் உள்ள எங்கள் ஊரிலும் அப்படித்தான்.

பள்ளிப் பருவத்தின்போது ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை (பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை வாரச் சம்பளம் வழங்குவார்கள்) குடும்பத்துடன் அருவியில் குளிக்கச் செல்வது வழக்கம். தென்காசி பேருந்து நிலையத்தை அடைந்ததுமே மனதில் உற்சாகம் கொப்புளிக்க தொடங்கி விடும்.

மெலிதான ஊசி போன்ற சாரல் மழையின் தூறல், பேருந்து நிலையத்தின் மெல்லிய ஈரப்படலம், குளிர்ந்த காற்று என தென்காசியிலேயே குற்றால சீஸன் வரவேற்க தொடங்கி விடும். கோடை முடிந்த உடனேயே ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் வரை கூட சீஸன் நீடிக்கும்.

குற்றாலம், ஐந்தருவி. அதன்பிறகு சிற்றருவி அல்லது பழைய குற்றாலம் என கண்டிப்பாக 3 அருவிகளில் குளித்து விடுவோம். வீட்டில் அம்மா தயாரித்து எடுத்து வரும் இட்லி, கெட்டியான தேங்காய் சட்னி கூடவே சேமியா பாயசம் என குற்றாலம் சென்று வருவதே ஜாலி டிரிப்.

ஒரு சில சமயங்களில் சாரல் மழை இல்லாமல் மேகமூட்டமாக மப்பும் மந்தாரமுமாக வானம் காணப்படும். அந்த சமயங்களில் ஒட்டு மொத்த குற்றாலத்துக்கும் ஏசி வசதி செய்யப்பட்டது போல இருக்கும். தென்காசி பேருந்து நிலையம், குற்றாலம் பேருந்து நிலையம், ஐந்தருவி என அனைத்து இடங்களிலும் எந்நேரமும் பேருந்துகளும் தயாராக இருக்கும். கூடவே, வெளியூர்களில் இருந்து வேன், கார்களில் வரும் பயணிகள் கூட்டமும்.

அருவிக்கரை, பேருந்து நிலைய பூங்கா, ஐந்தருவி, குற்றாலநாதர் கோயில், கடை வீதி என எங்கு சென்றாலும் மனித தலைகளே தென்படும். அரைக்கால் சட்டை அணிந்து மேலுக்கு சீஸன் துண்டு போர்த்தியபடி உலவுவதே தனி அனுபவம்.

1995ல் ஊரில் இருந்து புறப்பட்டு வந்த பிறகு ஆண்டுதோறும் சீஸன் சமயத்தில் குற்றாலம் செல்வது எட்டாக்கனியாகி விட்டது. இந்த ஆண்டில் சந்தர்ப்பம் வாய்த்ததால் பழைய நினைவுகளை அசைபோட்டபடியே ஜூலை முதல் வாரம் குற்றாலம் புறப்பட்டுச் சென்றேன். கூடவே எனது மூத்த மகன் திலீபன்.
தென்காசி பேருந்து நிலையத்தில் (இப்போது அது பழைய பேருந்து நிலையம்) இறங்கியதுமே சுள்ளென முகத்தில் அறைந்த வெயில் தான் எங்களை வரவேற்றது.

குற்றாலம் செல்ல பேருந்து தேடினால் ஒரேயொரு மினி பேருந்து மட்டும் நின்றது. அதில் ஏறி குற்றாலம் சென்றால் பேருந்து நிலைய வாசலிலேயே இறக்கி விட்டு சென்றார்கள். பேருந்து நிலையத்தினுள் எட்டிப் பார்த்தால் பேருந்துகள் எதுவுமில்லை. ஐந்தாறு வேன்கள் நின்றிருந்தன. வேன் நிறுத்தமாக மாறி விட்டது. பேருந்து நிலைய பூங்காவும் ஆள் அரவமின்றி வெறிச்சோடி கிடந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பு சீஸன் சமயத்தில் இருந்த குற்றாலமாக தெரியவில்லை. அருவியிலாவது தண்ணீர் விழுமா என மனதில் எழுந்த சந்தேகத்துடனேயே சென்றோம். பேரூராட்சியின் சுற்றுலா பயணியர் விடுதியை கடந்ததுமே மெல்லிய இரைச்சலை முன் அனுப்பி வரவேற்கும் பேரருவியின் உபசரிப்பு இல்லை. அருவிக்கு வயதாகி விட்டதா...? இல்லை எனக்கா...? குழப்பத்துடனே அருவிக் கரை அருகே சென்றபோது மெலிதாக இரைச்சலை கேட்க முடிந்தது.

அருவியின் நடுப்பகுதியில் மட்டும் தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது. அருவிக் கரையின் இரு மருங்கிலும் படர்ந்து விரிந்து விழும் குற்றால அருவி மிஸ்ஸிங். பேரிரைச்சலுடன் வீழும் கம்பீரத்தை பார்க்க முடியவில்லை. நடுங்கும் குளிரில் வெடவெடக்கும் உடலுடன் சிரித்தபடி குளிக்கும் முகங்களையும் காண முடியவில்லை. சுற்றுப்பகுதியில் உள்ள ஏதோ ஒரு கோயிலுக்கு குடங்களில் புனித நீர் சேகரித்துச் செல்லும் ஒரு கும்பல் மட்டும் நின்றிருந்தது. கூடவே, சிறிய அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம்.

குறைவான அளவில் கூட்டம் இருந்ததால் நிறைவாகவே எங்களால் அருவியில் குளிக்க முடிந்தது. ஆனால், 20 ஆண்டுக்கு முந்தைய பழைய உற்சாகம் மருந்துக்கும் இல்லை...

பயணம்... அருவி குளியல்... கடைவீதி.. இத்யாதி.. என இதே நிலைமை தான் ஐந்தருவியிலும்....

இரண்டு அருவியிலும் ஒரு ஒற்றுமையை என்னால் உணர முடிந்தது. அருவி நீரின் ஆவேசமான வீச்சை விட மதுவின் வீச்சம் அதிகமாக இருந்தது....!

= வை.ரவீந்திரன் 

No comments: