Thursday 25 June 2015

இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம்


இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்.... இதே நாளில்... 1975 ஜூன் 25... சுதந்திர இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம்.


அன்றைய தினம் தான் தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்ற ஒரே காரணத்துக்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 352 வது பிரிவை அமல் படுத்தி நாடு முழுவதும் நெருக்கடி நிலைமையை அறிவித்தார், இந்திரா காந்தி. அவருடைய கருத்தை ஏற்று எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்தவர் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது.

அதற்கு முன் 1962ம் ஆண்டு சீனாவுடன் யுத்தம் நடந்தபோதும், 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தபோதும் இரண்டு முறை நெருக்கடி நிலைமை இந்தியாவில் அமல் படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், 1975 நிலைமை முற்றிலும் வேறானது.

பல ஆண்டுகளாக அதிகாரத்தில் தொடர்ந்து நீடித்து வந்த ஒரு தனி நபரால்... பாகிஸ்தான் போரில் கிடைத்த வெற்றி மற்றும் வங்காளதேசம் பிரிவினையால் இரும்பு பெண்மணியாக பார்க்கப்பட்ட இந்திரா காந்தியால்... உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஜீரணிக்க முடியவில்லை. தெய்வத்துக்கு மனிதன் தண்டனை தருவதா...? என்ற எண்ணம்...!

இந்திராவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி, அவரது தனி உதவியாளர் ஆர்.கே.தவான், அப்போதைய மேற்கு வங்காள முதல் மந்திரி சித்தார்த்த சங்கர் ரே. இவர்களுடன் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது.



இந்த நால்வர் அணியின் ஆலோசனையால் விளைந்த நெருக்கடி நிலையால் ஒரே நாள் இரவில் தேசிய அளவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் (ஜேபி), மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி, அத்வானி ஆகியோர் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் ஆச்சார்யா கிருபளாணி, சரண் சிங் என இந்திராவை எதிர்த்த தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக கைதாகினர்.

தலைவர்கள் எப்படி கைது செய்யப்பட்டனர் என்பதற்கு அன்றைய இளம் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (பின்னாளில் கார்கில் யுத்தத்தின் போது வாஜ்பாயி ஆட்சியில் ராணுவ மந்திரியாக இருந்தவர்) இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட படமே சாட்சி.
அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், அரசை எதிர்க்கும் மக்கள் என எதிர்ப்படுவோரை கைது செய்ய உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) பயன் படுத்தப்பட்டது.


மாநில அளவிலும் கொடுமைகள் அரங்கேறின. இன்றைய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களும் சிறைச்சாலையில் ‘மிசா’ கொடுமைகளுக்கு ஆளானவர்களே. தமிழகத்தில் ‘மிசா’ கொடுமையை முழுமையாக அனுபவித்த கட்சி திமுக மட்டும் தான்.

அதே நேரத்தில், இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என தனியாக கட்சி நடத்தி வந்த பெருந்தலைவர் காமராஜரும் மனம் நொந்து இருந்தார். 1975 அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் எமர்ஜென்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்த்து இருந்த அவரது காதுக்கு ஆச்சார்யா கிருபளானி கைதான செய்தி தான் எட்டியது. அந்த அதிர்ச்சியிலேயே காமராஜர் உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசில் எந்த பதவியிலும் இல்லாத சஞ்சய் காந்தியே நெருக்கடி நிலை காலத்தல் அதிகார மையமாக இருந்தார் என்றால் அந்த நிலைமையை ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம். நெருக்கடி நிலை பிறப்பிக்கக்கட்ட அடுத்த நிமிடமே நாட்டில் உள்ள முக்கியமான பத்திரிகை அலுவலகங்களுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் மற்றும் சாதாரண குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள ஆறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.


பத்திரிகைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகாரிகளின் தணிக்கைக்கு பிறகே பத்திரிகைகள் வெளியாக முடியும். அரசுக்கு எதிரான சர்ச்சையான செய்திகள் இருந்தால் அதை நீக்கி விட்டு வேறு செய்தியை சேர்க்க வேண்டும். துக்ளக், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் அதற்கு உடன் படாமல் அந்த செய்திகள் இருந்த இடத்தை மட்டும் வெற்றிடமாகவே வைத்து பத்திரிகைகளை வெளியிட்டன.


1975 ஜூன் முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் நெருக்கடி நிலை நீடிக்கப்பட்டு 19 மாதங்கள் வரை நீடித்தது. இந்த கால கட்டத்தில் காரணம் எதுவும் கூறப்படாமலேயே ஒன்றரை லட்சம் பேர் (சர்வதேச கணக்குப்படி) கைது செய்யப்பட்டனர். ஜுமா மசூதி அருகே குடிசைகளில் வசித்த இரண்டரை லட்சம் முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். நாடு முழுவதும் 2 கோடி ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது.



ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்றவர்களை நினைவூட்டிய ‘மிசா’ கொடுமைகள் அரங்கேறி 40 ஆண்டுகள் முடிந்து விட்டன. கறுப்பு நாட்களாக கடந்து போன அந்த 19 மாதங்களும் இந்திய ஜனநாயகத்தில் எப்படி ஒரு கசப்பான வரலாறோ? அதுபோலவே, இதுபோன்ற காட்டு தர்பாரை நடத்தியதற்காக காங்கிரஸ் கட்சியோ நேரு குடும்பத்தினரோ இதுவரை குறைந்தபட்சம் நாட்டு மக்களிடம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பதும் வரலாறு.

= வை.ரவீந்திரன் 

No comments: