Monday 7 September 2015

கண்ணதாசனை கவர்ந்த காப்பியம்


உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நமது தமிழ் மொழியை இயல், இசை, கூத்து (நாடகம்) என முன்னார் வகுத்து வைத்துள்ளனர். தொல்காப்பியத்தில் இதற்கு முழுமையான விளக்கம் கூறப்பட்டுள்ளது. இயல் தமிழ் என்பது மனதில் உள்ளதை இயல்பாக, யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவதாகும். இசைத் தமிழ் என்பது செய்யுளை இசையோடு இணைந்து பாடல் இசைப்பதற்கு ஏற்ற வகையில் எழுதுவதாகும். நாடகம் என்பது செய்யுளுக்குள்ளேயே கதா பாத்திரங்கள் உரையாடுவது போன்ற பாணியில் எழுதுவது. இது போன்ற மூன்று தமிழும் ஒருங்கே அமைந்த காப்பியம் சிலப்பதிகாரம்.

வழக்கமாக ஒரு காப்பியமோ அல்லது நெடுங்கதையோ முக்கிய கதாபாத்திரத்தின் பெயரிலேயே அழைப்பது வழக்கம். இதுவே தொன்று தொட்டு தொடரும் வழக்கம். அப்படித்தான் காளிதாசர் எழுதிய சாகுந்தலம் அமைந்தது. சகுந்தலையை காதல் கணவருடன் சேர்ப்பதற்கு உதவிய கணையாழி (மோதிரம்) முக்கிய பாத்திரமாக இருந்தாலும் கூட சகுந்தலையின் பெயரிலேயே சாகுந்தலம் என அந்த காவியம் அழைக்கப்பட்டது.

அதுபோல, மேலைநாட்டு அறிஞர் ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ஒத்தல்லோ’ நாடகத்தில் சாதாரண கைக்குட்டையே பிரதான பாத்திரமாக இருக்கும். ஆனால், அந்த நாடக காவியத்துக்கு கதையின் நாயகன் ஒத்தல்லோ பெயரையே அவர் சூட்டி இருந்தார்.

ஆனால், அவற்றில் இருந்து மாறுபட்டு தனது காப்பியத்துக்கு பெயரிடுவதிலேயே புதுமையை ஆரம்பித்து வைக்கிறார், இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரமான கால் சிலம்பையே அதற்கு பெயராக சூட்டியுள்ளார். கோவலன் பெயரிலோ, கண்ணகி பெயரிலோ அந்த காவியம் அழைக்கப்படவில்லை. காற் சிலம்பின் பெயரால், ‘சிலம்பு அதிகாரம் (சிலப்பதிகாரம்) என அழைக்கப்படுகிறது. தலைப்பில் ஆரம்பிக்கும் புதுமையானது வழி நெடுகிலும் சிலப்பதிகாரத்தில் சிதறிக் கிடப்பதை காணலாம்.

இயல் தமிழின் முக்கிய பகுதியாக ஆசிரியப்பா, கலிப்பா போன்றவற்றால் சிலப்பதிகாரத்தில் செய்யுள் இயற்றப்பட்டுள்ளது. காப்பியத்தின் ஆரம்பத்திலேயே,
‘திங்களை போற்றுதும் திங்களைப் போற்றுதும்...’

என்ற வரிகளிலேயே இயல் தமிழின் சாரம் சுரக்கத் தொடங்கி விடுகிறது.

மதுரையில் அருள் வந்து ஆடும் சாலினி என்ற பெண் கூறும்போது, 

‘இவளோ கொங்கச் செல்வி... குடமலையாட்டி... தென்றமிழ்ப் பாவை... செய்தவக் கொழுந்து... ஓருமாமணியாய் வந்த திருமாமணி...’
என கண்ணகியை பார்த்து கூறுகிறாள்.

இப்படி படிக்கும்போதே யாவரும் எளிதில் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் இயல் தமிழின் தாக்கம் சிலப்பதிகாரத்தில் விரவிக் கிடக்கிறது.

அடுத்ததாக இசைத் தமிழ் என்று பார்த்தோமானால் ஏராளமான பகுதிகளில் அதை இளங்கோவடிகள் அழகாக வடித்திருப்பார். மாபெரும் வணிகர்களின் குலக் கொழுந்துகளாக கோவலனுக்கும் கண்ணகிக்கும் மணம் முடிந்து தனியறையில் அமர்ந்திருக்கின்றனர், இருவரும். அப்போது,

“மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விறையே.. கரும்பே.. தேனே..’
என கோவலன் பாடுவதாக செய்யுள் அமைந்திருக்கிறது. இது இசைத்தமிழுக்கு சிறந்த சான்று.

இதுபோலவே, யாழிசை, குழலிசை போன்றவற்றை அரங்கேற்று காதையிலேயே இளங்கோவடிகள் அறிமுகம் செய்கிறார்.

‘குழல்வழி நின்றது யாழே யாழ் வழித்

தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே முழவோடு

கூடி நின்றசைத்தது ஆமந்திரிகை...

என குழல், யாழுடன் மத்தளம் குயிலு போன்ற கருவிகள் இணைந்து வாசிக்கப்பட்டதை அழகாக வருணிக்கிறார். அது மட்டுமல்ல குழல் என்பது எப்படி இருக்க வேண்டும்? யாழ் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மற்றொரு இடத்தில் மிக அழகாக இளங்கோவடிகள் விளக்குகிறார்.  

‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

காரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’

என்று கிருஷ்ணரை பக்திப் பெருக்குடன் ஆயர்குலச் சிறுமி பாடுவதாக அமைந்துள்ள செய்யுள் வரிகளில் இசை நயத்தை பருக முடிகிறது.

கண்ணகியை விட்டுப் பிரிந்து ஆடல் மாது மாதவியுடன் கூடி களிக்கும் கோவலன் பாடுவதாக அமைந்துள்ள செய்யுள்களும், இந்திர விழாவில் இருவரும் மாற்றி மாற்றி இசைத்துக் கொள்ளும் கானல்வரி பாடல்களும் இசைத் தமிழுக்கு மிகச் சிறந்த சான்று. அதில் இரண்டு துளிகள் இதோ....

‘திரைவரி தருதுறையே திருமணல் விரியிடமே

விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே

மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே

இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே’

என கோவலன் பாடும் பாடலும் அதற்கு பதில் கூறும் வகையில் மாதவி பாடுவதாக அமைந்துள்ள


‘கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே

எதிர்மலர் புரையுன்கண் எவ்வநீ ருகுத்தனவே

புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட் டுளதாங்கொல்

மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை’

என்ற பாடலும் அகத்திணையை அழகாக எடுத்துரைக்கும் வரிப்பாடல்களாக இசை இன்பம் ஊட்டும் சொல்நயமிக்க செய்யுளாக விளங்குகின்றன.

மூன்றாவதாக சிலப்பதிகாரத்தில் நாடகத் தமிழ் குறித்து பார்க்கலாம். நாடகம் என்றால் முழு நீள கதையும் அதன் இறுதியில் மங்களகரமாகவோ அல்லது அமங்களமாகவோ முடிவையும் கொண்டதாகவே இருக்கும். சிலப்பதிகாரமும் அப்படித்தான் அமைந்துள்ளது.

கோவலன்-கண்ணகி திருமணம், வசதி வாய்ப்பு பெருகவும் பரத்தையர் மற்றும் மாதவியுடன் கோவலன் செல்வது, பரத்தையருள் மாதவியின் கற்பு நெறி வாழ்க்கை, மனந்திருந்தி கண்ணகியிடம் கோவலன் திரும்புதல், மறுபடியும் வணிகத்தை தொடங்க கால் சிலம்பை விற்க செல்வது, சிலம்பு விற்க சென்ற இடத்தில் கள்வன் என குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்படுவது, கணவன் மரணத்துக்கு கண்ணகி நீதி கேட்பது என்று பெருங்கதையாகவே சிலப்பதிகாரம் விரிகிறது.

கோவலன் மாள்வது, மதுரை மன்னன் வீழ்வது என துன்பியலாக சிலப்பதிகாரம் கதை முடியும் தருணத்தில் வானுலகில் இருந்து புஷ்பக விமானம் கீழிறங்கி வந்து கோவலன், கண்ணகி இருவரையும் அழைத்துச் செல்வதாக இன்ப முடிவை அளித்திருப்பார், இளங்கோவடிகள். நாடக காப்பியமான சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உரையாடுவதாக அமைந்துள்ள செய்யுள் பகுதிகள் அனைத்தும் நாடகத் தமிழுக்கு சிறந்த உரைகல்.

சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி...
கையில் ஒற்றை சிலம்பேந்தி கருங்கயற் கண்களில் கோப ஒளியை ஏற்றி ஓங்கார ரூபமாக மதுரை வீதிகளின் வழியே நடந்து சென்று பாண்டிய மன்னனிடம் நீதி கேட்க கண்ணகி செல்லும் காட்சியும்... அரண்மனை வாசலில் பெருங்குரல் எடுத்து அவள் பேசும் வார்த்தைகளும் நாடகத் தமிழுக்கு அருமையான கட்டியம் கூறுபவை.

கண்களில் கனல் தெறிக்க மதுரை அரண்மனை வாயிலில் நிற்கும் வாயில் காப்போனிடம் பேசுகிறாள் கண்ணகி..







“வாயிலோயே வாயிலோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே

இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்

கணவனை யிழந்தாள் கடையகத்தாளென்று

அறிவிப்பாயே.. அறிவிப்பாயே...’

அதாவது, ‘வாயில்காப்போனே! அறிவு முழுவதும் அற்றுப்போன, நெஞ்சத்தில் அறநெறி தவறிப்போன, அரசநீதி தவறி விட்ட பாண்டிய மன்னனின் வாயில் காப்போனே..! பரலினை உடைய இரண்டு சிலம்புகளில் ஒன்றினைக் கையில் ஏந்தியபடி, கணவனை இழந்த பெண் ஒருத்தி அரண்மனை வாசலில் நிற்கிறாள் என்று உன் மன்னனிடம் சென்று கூறுவாய்’ என்கிறாள் கண்ணகி.

இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் கவனிக்கலாம். முத்தமிழின் உடலாக விளங்கும் மெய் எழுத்துகளை மூன்று வகையாக நமது முன்னோர் பிரித்து வைத்திருக்கின்றனர். வல்லினம், இடையினம், மெல்லினம் என்பவை அவை. மிக அழுத்தமாகவும் வலிமையாகவும் உச்சரிக்கும் எழுத்துகளே வல்லினம். அவை க,ச,ட,த,ப,ற ஆகிய எழுத்துக்களாகும்.  

ஒருவன் மிகவும் கோபத்துடன் பேசினால் பற்களை ‘நறநற’வென கடிப்பான் என்பது நாம் அனைவருமே அறிந்தது. அதே கோணத்தில் கண்ணகி கூறும் மேற்சொன்ன 6 வரிகளில்
‘அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன்..’
என்ற வரிகளை மட்டும் படித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். மிகவும் கடுங் கோபத்துடன் இருக்கும் ஒருவர், தனது பற்களை நறநறவென கடித்தபடி பேசுவது போலவே அந்த வரிகள் அமைந்திருக்கும். இதுதான், சிலப்பதிகாரத்தின் நாடகத் தமிழ்ச் சிறப்பு ஆகும்.


இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கியதால்தானோ என்னவோ...? ‘காவியத்தாயின் இளைய மகனும்... காதல் பெண்களின் பெருந்தலைவனுமான’ கண்ணதாசனும் சிலப்பதிகார காவியத்தின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தார். கவியரசராக மட்டுமே அவரை நோக்கும் பலரும் பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியதை அறிந்திருக்க முடியாது.

எம்ஜிஆர் நடிப்பில் உருவான மதுரை வீரன், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் ஆகிய படங்களுக்கும் அவரே கதை, வசனகர்த்தா. அதில், மன்னாதி மன்னன் என்ற திரைப்படமானது சேர, சோழ மன்னர்களைப் பற்றிய கற்பனை கலந்த கதை. அந்த படத்தை பார்த்தால் சிலப்பதிகார காட்சிகள் ஒத்துப் போவதை அறியலாம்.  

வஞ்சி அரண்மனையின் ஆடல் பெண்ணான (நர்த்தகி) பத்மினி மீது இளவரசரான எம்ஜிஆர் மையல் கொண்டு மோதிரம் அணிவித்து கந்தர்வ முறையில் ஏற்றுக் கொள்வது, சோழ மண்டலமான உறையூரில் காவிரி கரையில் நடைபெறும் இந்திர விழா, சோழ அரச குல பெண்ணை எம்ஜிஆர் மணம் புரிந்ததும் புத்த நெறியை பத்மினி தழுவுவது என ‘மன்னாதி மன்னன்’ திரைப்பட கதையின் பெரும்பகுதியும் சிலப்பதிகாரத்தை நினைவூட்டியபடியே செல்லும்.

மன்னர் காலத்து கதையை கற்பனை கலந்து எழுதியிருந்தாலும் கூட சிலப்பதிகாரம் மீது கண்ணதாசன் கொண்டிருந்த காதலால் சிலப்பதிகார காட்சிகள் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. படத்தின் பாடல்களும் கூட சிலப்பதிகாரத்தின் பிரதிநிதியாகவே அமைந்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க, தென் தமிழகத்தின் மிகப் பழமையான கர்ண பரம்பரை கதைகளில் ஒன்றான ‘மதுரை வீரன்’ கதையை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் உருவான ‘மதுரை வீரன்’ படத்துக்கும் திரைக்கதை, வசனம் கண்ணதாசன் தான். அந்த திரைப்படத்திலும் சிலப்பதிகார காட்சிகளை அவரால் தவிர்க்க முடியவில்லை.

கதையின் இறுதி காட்சியில் மதுரை வீரன் (எம்ஜிஆர்) மீது கள்வர்களுடன் கூட்டு சேர்ந்ததாக குற்றம் சாட்டி திருமலை மன்னன் அரசவையில் நடைபெறும் விசாரணை காட்சி, மன்னனிடம் நீதி கேட்டு வெள்ளையம்மாள் (பத்மினி), பொம்மி (பானுமதி) இருவரும் வாதிடும் காட்சி ஆகியவற்றை பார்க்கும்போது பற்களை நறநற என கடித்தபடி கண்ணகி வாதிடும் கோபாவேச காட்சிக்கு இணையாகவே இருக்கும். அரசவையில் கதறும் பொம்மி, ‘சிலப்பதிகார கண்ணகி’யை சுட்டிக் காட்டியே பேசுவார்.

இருவருடைய வாதங்களைக் கேட்டதும், ‘தவறு இழைத்து விட்டேன்’ என திருமலை மன்னன் மனம் திருந்தி தண்டனையை நிறுத்த புறப்பட்டுச் செல்வார். ஆனால், அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். சிலப்பதிகாரம் போலவே துன்பியலில் முடியும் இந்த கதையையும் கடைசி நேரத்தில் இன்பியலாக மாற்றி விடுகிறார், கண்ணதாசன். எப்படி..?

மாறு கால், மாறு கை வாங்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் வீரனுடன் சேர்ந்து அவனது இரண்டு மனைவிகளும் உயிர் துறக்கின்றனர். விடுகின்றனர். அதன் பிறகு, விண்ணில் இருந்து பூமாரி பொழிந்து மூவருமே தெய்வமாகி விடுகின்றனர்.

இப்படி, கவியரசு கண்ணதாசனை கவர்ந்த சிலப்பதிகார காப்பியமானது தமிழின் மிக உன்னத காப்பியம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. முற்கால தமிழ் பேரரசுகளான சோழ, பாண்டிய மண்டலங்களை கதைக்களமாக கொண்ட இந்த காப்பியத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள், சேர குலத்து இளவரசர்.

முத்தமிழும், மூன்று மண்டலங்களும் ஒரு சேர நிறைந்திருக்கும் சிலப்பதிகாரமானது, காலங்களை கடந்து தமிழர்களின் காதுகளில் சிலம்பு ஓசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும். 

= வை.ரவீந்திரன் 

No comments: