Sunday 8 November 2015

பட்டை சோறு

தலை வாழை இலை விரித்து சூடான சோற்றை அதில் பரப்பியதும் இளஞ்சூட்டோடு வினை புரிந்து இலையில் எழும் வாசனைக்கு சிறிதும் குறைவில்லாதது, பனை ஓலையை வாகாக மடித்து பரிமாறும் சூடான சோறும். இளங் குருத்தும் இல்லாத முதிர்ந்த ஓலையும் அல்லாத பருவ பனை ஓலையை நேர்த்தியாக வகுந்து நுனி பகுதிகளை சேர்த்து, நடுப்பகுதியில் குழிவாக்கினால் ஓலைப்பட்ட(டை) தயார். அளவில் சிறிதாக குருத்து ஓலையில் செய்த ஓலைப்பட்டையில் பதநீர் ஊற்றி அருந்தும் சுகமே அலாதியானது. பதநீருடன் சுண்டு விரலின் நகம் அளவுக்கு நறுக்கிய மாங்காய் துண்டுகள் அல்லது இள நுங்கு சேர்த்தால்... அதுவே தேவாமிர்தம். அதுபோல, அளவில் பெரியதான ஓலைப்பட்டையில் சோறு பரப்பி சாப்பிடுவது தனி அனுபவம். அதுதான், பட்டை சோறு. 




ஆண்ட்ராய்டு போன், ஐ போன், டேப்லட், பேஸ்புக், விடுமுறை தின சிறப்பு திரைப்படம் இதுபோன்று எதுவுமே இல்லாத 20 ஆண்டுகளுக்கு முந்தைய விடுமுறை தினங்களில் பட்டை சோறுக்கு முக்கிய இடம் உண்டு. ஊரை ஒட்டிய காட்டுப்பகுதிக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் அரிசி, மசாலா பொருட்களுடன் கும்பலாக சென்று சமையல் செய்து சாப்பிடுவதே அன்றைய விடுமுறை தின கொண்டாட்டமாக இருந்தது. பனை வடலி (இளம் பனை)யில் இருந்து வாகான ஓலையை வெட்டி வந்து அழகாக பட்டை பிடித்து அதில் சோற்றையும் குழம்பையும் நிரப்பி பனை ஓலையின் வாசனை கலந்த சுவையுடன் உணவை ருசிப்பது…. பேரானந்தம்.

நெல்லை மாவட்டத்தில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அம்மன் கோயில்களில் கொடை விழா வெகு பிரசித்தம். விழாவின் இறுதி நாளில் ஊர் மக்கள் சார்பாக அண்டாவில் சோறு வடித்து, அதன்பிறகு கோயிலினுள் ஒரு பகுதியில் வைக்கோல் பரப்பி அதன் மீது பனை ஓலையால் செய்த பாயை விரித்து அந்த சோற்றை அம்பாரமாக கொட்டி வைப்பார்கள். அதற்கு, பெரும்பட(டை)ப்பு என பெயர். கூடவே, கோயில் சார்பாக (ஊர் மக்கள் சார்பாக) பொது கிடா ஒன்று அம்மனுக்கு பலி கொடுக்கப்படும். நண்பகல் பூஜை நேரத்துக்குள் அந்த கிடா சமைக்கப்பட்டு விடும். பெரும் படப்பு சோற்றுடன் ஆட்டு கறிக் குழம்பை ஊற்றி பெரிய அளவிலான ஓலைப் பட்டையில் அம்மன் முன் படைத்து வழிபடுவது வழக்கம்.



அம்மன் கொடை விழாவின் இறுதி நாள் கொண்டாட்டங்களில் வீட்டில் இருந்து பெண்கள் எடுத்து வரும் முளைப்பாரி, பலியிடப்படும் ஆடு, கோழிகள், மலர் மாலைகள் என பல்வேறு வகையான கதம்ப வாசனைகளுக்கு இடையே இந்த பட்டை சோற்றின் நறுமணம் தனித்து நிற்கும். திருவிழா முடிந்து சாமிக்கு வைத்த படப்பை (படையலை) எடுத்து அந்த சாதமும், குழம்பும் ஊர் மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இப்படியாக நினைவுக்குள் சுவை பரப்பி கிடக்கிறது பட்டை சோறு ...

= வை.ரவீந்திரன் 

No comments: