ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கவிதைகளை செய்யுளாக அறிமுகம் செய்த மொழி தமிழ். ஆண் புலவர்கள் மட்டுமன்றி பெண்
புலவர்களும் ஏராளமான செய்யுளை வடித்துள்ளனர். தமிழரின் அகவியல் வாழ்க்கையை கூறும்
அகநானூறு உள்ளிட்ட இலக்கியங்களும் இதில் குறை வைக்கவே இல்லை. ஆணின் காதல்
ஏக்கத்துக்கு இணையாக காதல் வயப்பட்ட பெண்ணின் கொஞ்சு மொழிகளையும் செய்யுளாக
வடித்து வைத்திருக்கிறது.
அடுத்த நாட்டில் இருந்து கானகம்
வழியே வரும் ஆணழகன் மீது காதல் வயப்படுகிறாள் அந்த பெண். தனது வயல்வெளியில்
விளைந்து நிற்கும் தினைகளுக்கு காவலாக தோழியுடன் சென்ற இடத்தில் தினையுடன்
சேர்த்து இவர்களின் காதலும் வளருகிறது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் தாயாருக்கு
அந்த காதல் குறித்து தெரிய வருகிறது. உடனே, தனது மகளை தினைப்புன காவலுக்கு செல்ல
விடாமல் தடுக்கிறாள். இதை அறிந்த அந்த பெண், தனது தோழியிடம் காதல் பிரிவின் வெம்மை
தாங்காமல் புலம்புகிறாள்.
சிலம்பில் போகிய
செம்முக வாழை
அலங்கல்
அம்தோடு,அசைவளி உறுதோறும்
பள்ளியானைப்
பரூஉப் புறம் தைவரும்
நல்வரை நாடனோடு
அருவி ஆடியும்
பல்இதழ் நீலம்
படுசுனைக் குற்றறும்
நறுவீ வேங்கை இன
வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை
நயந்து விளையாடலும்
அரியபோலும் காதல் அம் தோழி
தோழியே! மலையில் செழித்து வளர்ந்து
நிற்கும் செவ்வாழை இலைகள் அனைத்தும் காற்றில் அசையும் போது, அங்கே உறங்கிக் கொண்டு
இருக்கும் யானையின் பருத்த உடலை தழுவும். இத்தகைய வளம் மிகுந்த மலை நாட்டைச்
சேர்ந்த எனது காதலனுடன் அருவியில் நீராட முடியாதோ? சுனையில் நீலப் பூக்களை பறித்து
மகிழ்ந்திருக்க முடியாதோ? வாசனை மிகுந்த மலர்களை கொண்ட வேங்கை மரத்தில் வண்டுகள்
ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் சோலையில் அவருடன் விளையாட முடியாதோ? இவை அனைத்தும்
இனிமேல் அரிதாகி விடும் போல தெரிகிறதே? என்று புலம்புகிறாள். அதன்பிறகும் அவள்
கூறுகிறாள் பாருங்கள்…
இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல்
கிளிபட விளைந்தமை அறிந்தும் செல்க என
நம் அவண் விடுநள் போலாள் கை மிகச்
சில சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இளமுலை
மெல்இயல் ஒலிவரும் கதுப்போடு
பல்கால் நோக்கும் அறன் இல்யாயே
அருகில் இருக்கும் பெரிய கற்களை
கொண்ட மலையின் அடிவாரத்தில் எனது குடும்பத்தினர் விளைவித்த தினைப்பயிரானது கரும்பு
போல அழகுடன் திரண்டு வளர்ந்து நிற்கிறது. இந்த நிலைமையில், அதை கிளிகள் வந்து
கொத்தும் என அறிந்தும் என்னை காவலுக்கு அனுப்பாமல் எனது தாய் இருக்கிறாள். அவள்
எனது திரண்டு வளர்ந்து நிற்கும் கொங்கைகளையும் மென்மையாக தழைந்து கிடக்கும் எனது
கூந்தலையும் அடிக்கடி பார்த்து செல்கிறாள். அதனால், இனிமேல் எனது காதலரை காண
முடியாதோ? என தோழியிடம் ஏங்கித் தவிக்கிறாள்.
அப்படியும் அவளது நெஞ்சம் ஆறவில்லை.
இளங்குளிரை மேனியெங்கும் வீசிச் செல்லும் வாடைக் காற்றை அழைத்து அதனிடம் தனது
நிலைமையை கூறி வேதனையை வெளிப்படுத்துகிறாள். எப்படி?
விண்அதிர்பு தலைஇய, விரவு மலர் குழையத்
தண்மழை பொழிந்த தாழ்பெற் கடைநாள்
எமியம் ஆகத் துனி உளம் கூரச்
சான்றோர் உள்ளிச் சில் வளை நெகிழப்
பெருநசை உள்ளமொடு வருநசை நோக்கி
விளியும் எவ்வமோடு, அளியள் என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கசியும் முன்பனிப் பானாள்
குன்று நெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை
எனக்கே வந்தனை போற்றி புனற்கால்
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிக்
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி
வினை விதுப்புனர் உள்ளலும் உண்டே
வானத்தில் முழங்கி கூடிய குளிர்ந்த
மேகம், தனது குறைவான பொழிதலைக் கொண்ட கூதிர் காலத்தின் இறுதி நாள். இப்போது,
பல்வேறு வகையான மலர்களும் குழைந்து கிடக்கின்றன. இப்போது உள்ளத்தில் வெறுப்பு
மிகுந்து என்னை பிரிந்து சென்ற காதலரை நினைத்து எனது கை வளையல்கள் கழன்று
விழுகின்றன. அதிக ஆர்வத்துடன் அவர் வரும் பாதையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
இறப்புக்கு காரணமான துன்பம் என்னை சூழ்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட என் மீது
உனக்கு இரக்கம் இல்லையா? தண்ணீரை யானை குடித்து விட்டு பெருமூச்சு விடும்போது
சிதறும் நீர்த்துளிகளால் கண் பார்வை மறைப்பது போல பனித் துளிகளால் தாமரை மலர்
மறைக்கப்படுகிறது. இத்தகைய பனிப்
பருவத்தில் மலைகளையும் நடுங்கச் செய்யும் குளிர்காற்றே என்னை வருத்துவதற்காக
வந்திருக்கிறாய்.
வாய்க்காலில் நீர் ஓடும்போது மணல்
மேடு கரைவது போல உனது நெஞ்சம் இளகாதா? அப்படி இளகினால் கொடியவரான எனது காதலர்
சென்ற திசை நோக்கி செல். அவர் எனது நிலைமை அறிந்து என்னிடம் திரும்பி வந்தாலும்
வருவார்.
இப்படி தோழியிடமும் வாடைக்
காற்றிடமும் தனது காதலை அடக்க மாட்டாமல் பிதற்றிக் கொண்டிருக்கும் பெண்ணின் காதல்
கைகூடி விடுகிறது. தோழி உதவியுடன் வீட்டாரை உதறி விட்டு காதலனை கரம் பிடிக்கிறாள்.
இனிமையாக செல்லும் இல்லறத்தில் சிறிது விரிசல் விழுகிறது. தலைவனின் உள்ளத்தில்
பரத்தைக்கு சிறிது இடம் கிடைக்கிறது. விரைவிலேயே பரத்தையின் வசிப்பிடத்தில்
தலைவனுக்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. அதை அறிந்த அந்த பெண் மனம் கொதிக்கிறாள்.
பரத்தை வீட்டில் இருந்து திரும்பி வரும் தனது காதலனை அதாவது கணவரை பார்த்து
கூறுகிறாள்.
இது நற்றிணையில் வரும் பாடல்…
வெண்ணெய் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழனப் பல் புள்இரிய, கழனி
வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல் கவின் தொலையினும் தொலைக! சார
விடேஎன் விடுக்குவென் ஆயின், கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய, குவவு முலை
சாடிய சாந்தினை; வாடிய கோதையை;
ஆசு உடை கலம் தழீஇயற்று
வாரல்; வாழிய, கவைஇ நின்றாளோ!
நீண்டு கிடக்கும் நெல் வயலில் கதிரை
அறுக்கும்போது பறவைகள் வந்து கொத்திச் செல்வதை தடுப்பதற்காக தண்ணுமை என்ற மேளத்தை
முழங்குவார்கள். அந்த முழக்கத்தை கேட்டதும் பறவைகள் அஞ்சி, வயலில் தாழ்ந்து
நிற்கும் கிளைகளை கொண்ட மருத மரத்தின் மீது சென்று அமரும். அதன் சுமை தாங்காது
மரத்தில் இருந்த பூக்கள் எல்லாம் வயலில் உதிரும். அத்தகைய செழிப்பான ஊர்
இருப்பையூர். அதுபோன்ற செழிப்பான எனது இயற்கை அழகு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.
எனது கணவா! உன்னை எனது அருகில்
நெருங்க விட மாட்டேன். அப்படி நீ வந்தாலும் எனது கைகள் உன்னை தடுக்கும் வலிமை
கொண்டது. நீ பரத்தையரின் சந்தனம் பூசிய மார்பகத்தை தழுவியவன். வாடிய மாலையை
சூடியவன். உன்னை தொடுவது குறைகளுடைய கலங்களை தொடுவது போன்றது. ஆதலால், நீ வர
வேண்டாம். நீயும் உன்னை தழுவிய பரத்தையும் நெடுங்காலம் வாழ்வீர்களாக…! என்கிறாள்.
இப்படியாக காதல், காதல் சார்ந்த
வாழ்வும் வாழ்ந்த பழங்கால பெண்டிரை பற்றி அகநானூறும், நற்றிணையும் அக
இலக்கியங்களும் அவர்கள் மொழியிலேயே பேசுகின்றன. சங்ககால பெண்களின் காதல் வாழ்வை
பதிவு செய்து வைத்துள்ளன. தமிழில் கவிதை வடிவம் என்பது பரிணாம வளர்ச்சி பெற்று
வளர்ந்து விட்டது. பழங்கால இலக்கியங்களை ஒப்பிடும்போது காதல் வயப்பட்ட பெண்
கூறுவது போன்ற காதல் கவிதைகள் இன்றைய நிலையில் சற்று குறைந்து விட்டதாகவே
தெரிகிறது.
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment