Tuesday 29 August 2017

அடுத்த முதல்வர்... மக்கள் அங்கீகாரம் யாருக்கு...?

தமிழக அரசியலுக்கும் திரைத் துறைக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அதனால் தான், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத சூழ்லையில் மீண்டும் சினிமா பக்கம் தனது பார்வையை தமிழகம் திருப்ப, அங்கிருந்தும் சில சிக்னல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரஜினி, கமல், விஜய், விஷால் என தமிழ் ஹீரோக்களுக்கு அரசியல் ஆசை முளை விட்டு துளிர்த்து செடியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது மரமாகும் முன் சிலவற்றை அலசிப் பார்ப்பது நல்லது.

திரையில் இருந்து அரசியலுக்கு வரும் அனைவருமே உதாரணமாக கூறும் பெயர் எம்.ஜி.ஆர். ஆனால், காங்கிரஸ்காரர், திமுகவில் 17 ஆண்டு நட்சத்திர பேச்சாளர், எம்.எல்.ஏ, சிறுசேமிப்பு தலைவர் (அமைச்சர் பதவிக்கு நிகரானது), தனிக்கட்சி, எதிர்க்கட்சி என 20 ஆண்டு போராட்டத்துக்கு பிறகே அவர் முதலமைச்சரானார். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர் போல திமுக அனுதாபியாக இருந்தவர். அரசியலுக்கு வந்து மாநிலங்களவை எம்.பி., தனிக்கட்சி, எதிர்க்கட்சி தலைவர் என 10 ஆண்டுகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகே, 1991ல் அவரால் முதலமைச்சராக முடிந்தது.



தற்போது, தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள் யாருமே இல்லாத நிலையில் ரஜினியின் அரசியல் ஆர்வம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பாட்ஷா படத்தின்போது அதன் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனுக்கு ஜெயலலிதாவுடன் முரண்பாடு இருந்தது. அந்த சூழ்நிலையில், பாட்ஷா பட விழாவில் பேசிய ரஜினி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டது என குரல் கொடுத்தது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 40 பிளஸ் வயதில் ரஜினி இருந்த கால கட்டம்.


அப்போது, ஆட்சியில் இருந்த அ.தி.மு.க மீது மக்கள் அதிருப்தியில் இருந்த சமயம். அதே வேகத்தில் அரசியலில் ரஜினி தீவிர ஆர்வத்துடன் இருந்தார். அதனால் 1996 தேர்தலில் அவரது பங்கு முக்கியமாக இருந்தது. அந்த தேர்தலில் புதிதாக மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரசுடன் ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்து கூட்டணி சேர்ந்திருந்தால் அந்த கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும். அந்த சமயத்தில் தான் நீல வண்ணத்தில் நட்சத்திரமிட்ட கொடியையும் ரஜினி ரசிகர்கள் பயன்படுத்த தொடங்கி இருந்தனர். ஆனால், கருணாநிதியின் ராஜதந்திரத்தின் முன்பு, ரஜினியின் அரசியல் அப்போது கருகிப்போனது.

20 ஆண்டுகளுக்கு பிறகு, அரசியல் வசனத்தை நிஜ மேடைகளில் ரஜினி பேசத் தொடங்கி இருக்கிறார். சிஸ்டம் சரியில்லை. போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது இன்றைய அவரது கருத்துகள். ஆனால், மன்றத்தை நடத்துவதற்கும் கட்சியை நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விரைவில் அடுத்த ரசிகர்கள் சந்திப்பை நடத்தவும் ரஜினி முடிவு செய்திருக்கிறார். அதன் பிறகு, அரசியல் பற்றி அவர் முடிவு எடுக்கலாம் அல்லது ஏதேனும் கட்சியில் சேரவோ குரல் கொடுக்கவோ  அவருக்கு நிர்ப்பந்தங்கள் நேரிடலாம்.


ஒன்று நிச்சயம். ரஜினியை மென்மையாக அணுகுபவர்கள் கூட கன்னடர், அவரது மனைவியின் பள்ளி விவகாரம், திருமண மண்டபம் என ஏராளமான விமர்சனங்களை முன் வைப்பார்கள். அவற்றை எந்த அளவுக்கு அவர் எதிர்கொள்வார் என்பது அவரது அரசியலை பொறுத்து இருக்கிறது. ஆனால், போர் வரும்போது பார்க்கலாம் என்ற அவரது கருத்தைப் பார்த்தால், தேர்தல் சமயத்தில் யாருக்காவது வாய்ஸ் கொடுத்து விட்டு ஒதுங்கவும் செயயலாம்.


கமலை பொறுத்தவரை திரைப்படத்தை கடந்து பல ஆண்டுகளாகவே ஏதேனும் அரசியல் கருத்தை கூறி வருபவர். தீவிர நாத்திகவாதி, திராவிட இயக்க கொள்கை உடையவர் என்பது அனைவரும் அறிந்தது. ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து 8 மாதங்களாக மிகத் தீவிரமாக டுவிட்டரில் கருத்து கூறி வரும் கமலுக்கு திராவிட இயக்க தலைவர்களுடன் நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், நேரடியாக அரசியலுக்கு இவர் வருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இளைய தலைமுறை நடிகர்களில் விஜய் மனதில் அரசியல் ஆசை அதிகமாகவே உண்டு. மக்கள் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அவர் மீது, மெர்சல் படத்தின் பாடல் வரிகளால் அரசியல் முத்திரை அழுத்தமாகவே விழுந்திருக்கிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமான் வரை அனைவருமே விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது போல பேசியது தான் இன்றைய பரபரப்பு பேச்சு. ஆனால் அதே மேடையில் பேசிய விஜய், சுற்றி இருப்பவர்கள் இக்கட்டில் தள்ள நினைப்பார்கள் என கூறி இருக்கிறார். இதுவும் கவனிக்கத்தக்கது.

ஆனால், தமிழக அரசியல் களம் அவ்வளவு எளிதானதல்ல. இந்த மூன்று பேருமே தமிழகத்தில் அரசியல் ஆளுமைகள் வலிமையாக இருந்தபோது எதிர்த்து குரல் கொடுக்க துணியாதவர்கள். இதையும் தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். இந்த 3 பேருமே கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்று எதிர்ப்பு அரசியல் அறியாதவர்கள். 1961 முதல் 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்ததோடு மேல்சபை எம்.பியாகவும் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அரசியல் வெற்றி எப்படி அமைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய சிவாஜி, திருவையாறு தொகுதியில் 1989 தேர்தலில் வெறும் 10 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பித்த பாக்யராஜ், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் என அரசியலில்  அடி சறுக்கியவர்களின் எண்ணிக்கை ஏராளம். நடிக்கும் போது, தி.மு.க. சார்பு நடிகர்களுடன் நெருக்கமாக இருந்து 2005ல் தனிக்கட்சி தொடங்கிய விஜயகாந்த், அரசியலுக்கு வந்த பிறகு எதிர்கொண்ட விமர்சனங்கள் எத்தனை… எத்தனை…? அவரது கட்சியின் தற்போதைய நிலை…?

அனைவருக்குள்ளும் அரசியல் ஆசை துளிர் விட்டாலும், மக்களின் ஆதரவு என்னும் நூல் இருந்தால் தான் வெற்றி என்னும் பட்டம் அரசியல் வானில் வெற்றிகரமாக பறக்கும். தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் அதிகம். ஜெயலலிதா மறைந்து விட்டதால் அ.தி.மு.க வாக்குகள் அவர்களுக்குள் சிதறுமே தவிர, மற்றவர்களுக்கு செல்லும் என எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், ரஜினியின் கருத்துகள் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வுக்கு எதிராகவே இருந்து வரும் நிலையில், அ,தி.மு.க. அனுதாபிகளின் வாக்கு அவருக்கு செல்லும் என்பது நிச்சயமில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கென கிடைக்கும் வாக்கு வங்கியில் எந்த அளவுக்கு சேதாரம் ஏற்படும் எனவும் உறுதி இல்லை. ஏனெனில், 1989 தேர்தலின்போது ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே, ஜெ., ஜா என இரு அணிகள் வாங்கிய மொத்த வாக்கு சதவீதமானது, தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் சதவீதத்தை விட கொஞ்சம் தான் குறைவாக இருந்தது. இப்போது, ஆட்சி அதிகாரம் இரண்டும் அதிமுக.விடம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகள் வரை ஓ.பன்னீர் செல்வத்துக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதை உறுதி செய்து வருகின்றன. அதாவது, அரசியல் களத்தில் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் என புதிய முகங்கள் அறிமுகமாகி மக்களிடம் பிரபலமாகி விட்டது.


இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தமிழக மக்களிடம் ஒரு பிரபல முகத்தை முன்னிறுத்தி கட்சியை வளர்க்க நினைக்கும் பா.ஜ.க வின் முகமாக ரஜினி மாறலாம் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால், அவருக்கு சிவாஜி கணேசனின் நிலைமை மனதுக்குள் வந்து போகும். அதுபோலவே, அ.தி.மு.க.வுக்கும் 30 ஆண்டுக்கு முந்தைய அனுபவம் கண் முன்னே வந்து செல்வதால் தான் இந்த அளவுக்கு பிரிந்து, பிரிந்து… பின்… இணைகிறார்கள். ஆக, தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமை இல்லை என்ற குறை மட்டுமே. அதே சமயத்தில், பலமாக இருக்கும் இரண்டு கட்சிகள் மற்றும் அதன் அனுபவஸ்தர்களை தாண்டி புதிதாக ஒருவர் வருவதும், தன்னை நிலை நிறுத்திக் கொள்வதும் எளிதானது அல்ல.

ஆனால், அரசியல் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு பரமபத விளையாட்டு. பிப்ரவரி 15க்கு முன், தினகரனையும் எடப்பாடி பழனிச்சாமியையும் தமிழக மக்களுக்கு தெரியுமா…? விதி போடும் முடிச்சு என்ன என்பதை காலம் மட்டுமே அறியும். எனினும், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா என ஆதரித்து வந்த தமிழ் மக்கள், தகுதியான ஒரு ஆளுமையைத்தான் எதிர்காலத்தில் தேர்வு செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

No comments: