Sunday 10 December 2017

எம்.ஜி.ஆர் vs ரஜினிகாந்த்...


எம்.ஜி.ஆர் vs ரஜினிகாந்த்...
 

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பேசும் பெரும்பாலானோரின் கருத்துகளில் தவறாமல் இடம் பெறும் பெயர் எம்.ஜி.ஆர்.  ரஜினியை ஆதரிப்பவர்களும் சரி. எதிர்ப்பவர்களும் சரி. எம்.ஜி.ஆரை உதாரணம் காட்ட தவறுவதே கிடையாது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் யாராலும் அசைக்க முடியாத உச்ச நடிகராக நீடித்ததை தவிர, எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது என்பதை யோசிப்பதில்லை. அதுவே, அரசியலுக்கு தகுதி என்ற ரீதியில் பேசுகின்றனர். 



1950ம் ஆண்டில் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளியான மந்திரி குமாரி படத்தில் நடித்தபோதே திராவிட இயக்கத்துடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்து விட்டார், எம்.ஜி.ஆர்.  தென்குமரி தொடங்கி இமயமலை வரையிலும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலத்திலேயே, அதற்கு நேர் மாறான நிலைப்பாட்டை எடுப்பதில் எந்த அளவுக்கு உறுதி வேண்டும். அதுவும் திரை உலகில் ஆரம்பகட்ட நடிகராக இருந்த ஒருவருக்கு... இந்த உறுதி ரஜினியிடம் இருக்கிறதா...? 

1951 முதல் 1967 வரை 17 ஆண்டு காலம், தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த நேரத்தில், அப்போதுதான் புதிதாக தொடங்கப்பட்ட தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்ததோடு, நடிக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் தி.மு.க மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்காக ஊர் ஊராக சென்றவர், எம்.ஜி.ஆர். அதுபோன்று ஆளும் தலைமையை  தொடர்ந்து எதிர்க்கும் துணிச்சல் ரஜினியிடம் துளி கூட கிடையாது. 

எம்.ஜி.ஆரின் பாடல்களில் கூட நேரடியாகவே கொள்கை பிரச்சார நெடியை பார்க்கலாம்.  அதன் தாக்கம் தாங்க முடியாமல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொடுத்த நெருக்கடி அதிகம். பெற்றால்தான் பிள்ளையா படத்தின் பாடலில், 'மேடையில் முழங்கு... அறிஞர் அண்ணா போல்...'  என்ற பாடல் மேடையில் முழங்கு திரு.வி.க. போல் என மாற்றப்பட்டதே அதற்கு சாட்சி. இப்போதும் இரண்டு விதமான வரிகளில் அந்த பாடல்களை கேட்கலாம்.

முழுக்க முழுக்க காங்கிரஸ்காரரான ஏ.வி.எம். தயாரித்த அன்பே வா படத்திலேயே, 'உதய சூரியனின் பார்வையிலே... உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...' என்ற வரிகளை வைத்தவர், எம்.ஜி.ஆர். 'ஓடும் ரயிலை வழி மறித்து, அதன் பாதை தனிலே தலை வைத்து...' என்ற எங்கள் தங்கம் பாடல் தொடங்கி, 'கூந்தல் கருப்பு... குங்குமம் சிவப்பு...' என காதல் பாடல் வரை கட்சியை நினைவூட்டிக் கொண்டே இருந்தவர், எம்.ஜி.ஆர். 

இது மட்டுமல்ல, நல்லவன் வாழ்வான் போன்ற கருப்பு வெள்ளை படங்களில் வரும் வீடுகளின் ஜன்னல், கதவுகளில் உதய சூரியன் போன்ற வடிவமைப்பு இருப்பதை பார்க்கலாம். ஈஸ்ட்மெண்ட் கால படங்களில் எம்.ஜி.ஆரின் காஸ்ட்யூமே கருப்பு, சிவப்பு வண்ணத்தில் தான் இருக்கும். இவை எல்லாம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 17 ஆண்டு காலத்தில் எம்.ஜி.ஆர். செய்த அட்ராசிட்டிகள். இதில் துளி அளவு துணிச்சலாவது ரஜினியிடம் இருந்ததா...? 

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்தபோது சிறிதளவு முணுமுணுப்பை கூட காட்டாத ரஜினி, இப்போது சிங்கம், புலி இல்லாத சமயத்தில் 'சிஸ்டம் சரியில்லை' என கூறிக் கொண்டு இருக்கிறார். இவ்வளவு தான் அவரது துணிச்சல். எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தபோதே, தி.மு.க தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் நடித்ததோடு, தி.மு.க. கரை வேட்டியையும் கட்டி நடித்துக் கொண்டு, மறைமுகமாக தி.மு.க. ஆதரவு நடிகர் போலவே வலம் வந்த விஜயகாந்திடம் இருந்த தைரியம் கூட ரஜினிக்கு கிடையாது. 

இது தவிர, அரசியல் அனுபவம் என்று பார்த்தால் கூட, எம்.ஜி.ஆருடன் ஏணி வைத்தால் கூட எட்டாது. எம்.ஜி.ஆர். தனது 45ஆவது வயதிலேயே (1962ம் ஆண்டு) எம்.எல்.சி.யாகி விட்டார். அதன்பிறகு, 1967 முதல் இறக்கும் வரை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 1969ல் அண்ணா மறைந்ததும் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலையில், தி.மு.க.வில் பெரிய அளவில் சலசலப்பு ஏற்படாமல் கருணாநிதியை முதலமைச்சராக்கியதில் எம்.ஜி.ஆருக்கும் கணிசமான பங்கு உண்டு. பின்னர், கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது ஆட்சியின் நெருக்கடியையும் சந்தித்தவர் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி கொடுத்த தொல்லைகள் ரஜினிக்கு தெரியுமா...? அதை எல்லாம் எதிர் கொண்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வெற்றியே அதற்கு சாட்சி. ஆனால், பா.ம.க.வின் எதிர்ப்பை கூட 'பாபா'வால் சமாளிக்க முடியவில்லையே...?

1977ம் ஆண்டில் தமிழக முதலமைச்சராவதற்கு முன் 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலோடு பின்னிப் பிணைந்து இருந்தவர் எம்.ஜி.ஆர். நடிப்புடன் கூடவே, அவரது அரசியல் பயணம் நீடித்து இருந்தது. திடீரென கட்சி ஆரம்பித்து, அடுத்த சில ஆண்டுகளில் தமிழக ஆட்சியை எம்.ஜி.ஆர். பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆரின் அரசியலோடு ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒப்பிடுபவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். 

ரஜினி நல்லவர்... வல்லவர்... பச்சை தமிழர்... அவர் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும்... இப்படி எதை வேண்டுமானாலும் அவரது ஆதரவாளர்கள் கூறிக் கொள்ளலாம். ஆனால், எம்.ஜி.ஆருடன் மட்டும் ரஜினியின் அரசியலை ஒப்பிட்டு பேச வேண்டாம்.

= நெல்லை ரவீந்திரன்

No comments: