Friday 17 February 2017

வெற்றியை நோக்கி ... 22

   
வெற்றிக்கு முன்…
இந்த உலகில் பிறந்த  ஒவ்வொரு மனிதரிடமும், தங்களுக்குள் இருக்கும் ஆற்றலாக அவர்கள் நம்புவதை விட அதிகமான ஆற்றல் குடி கொண்டிருக்கிறது. அதை அவர்கள் அறிவதில்லை. ஒவ்வொருவரும் தன்னை சுய பரிசோதனை செய்து தன்னிடம் உள்ள திறமையை கண்டறிந்து வெற்றிப் பாதை நோக்கி செல்ல வழி காட்டுவதே தன்னம்பிக்கை அறிவுரைகள். அதற்கு பல்வேறு பெயர்களை சூட்டினாலும் அதன் பொருள் ஒன்றுதான். பல ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் தொடர்ந்து போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த அறிவுரைகள் மேலோட்டமாக புரிந்து கொள்ளப்படுகிறதே அன்றி, உள்ளுணர்வுடன் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உள்ளுணர்வுடன் புரிந்து கொண்டு நடக்கும்போது வெற்றியின் முதல் படிக்கட்டு புலப்படும். 

சாத்தியமே இல்லை என கருதும் ஒன்றை நோக்கி படிப்படியாக முன்னேறி செல்வதே வெற்றிக்கான வழிமுறைகள். மெதுவாகவும் படிப்படியாகவும் முன்னேறாமல் ஏதோ ஒரு மந்திரக் கோலால் ஒருவர் உயர்ந்தபட்ச அதிகாரத்தை அடைந்து விட்டார் என்றால் அவருக்கு மட்டுமல்லாமல் அவரால் அதிகாரம் செலுத்தப்படும் நபர்களுக்கும் அது அழிவையே தேடித் தரும். அதே வேளையில் தனக்குள் ஒளிந்து கிடக்கும் ஆற்றலை மிகச் சரியாக கண்டறிந்து வழி நடத்தாமல் போனாலும் அழிவு நிச்சயம். ஏனெனில், ஒருவரை வெற்றியின் சிகரத்துக்கு கொண்டு செல்வதற்கு அந்த ஆற்றலுக்கு எந்த அளவு வலிமை உண்டோ, அதே அளவுக்கு அவரை அழிக்கவும் அந்த ஆற்றலுக்கு வலிமை உண்டு. அதனால் தான், எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் என்று முன்னோர் கூறி வைத்து இருக்கின்றனர்.

இந்த பூமியில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நேரம் என்பது மிகவும் சொற்பமானது. தீபத்தை ஏற்றி வைத்து அணைப்பது போன்றது. எனவே, நடுக்காட்டிலோ ஆள் அரவமற்ற பாலைவனத்திலோ செல்லும் அச்சமற்ற பயணி போல எதிர்பார்ப்பு இல்லாமல் பயணிப்பது அவசியம்.  முன்னேற்றம் என்ற கீழ் வானத்தில் புத்திசாலித்தனம் என்னும் கதிரவன் உதித்தால் அறியாமை, சோம்பல், தோல்வி, ஏமாற்றம் என வெற்றிப் பாதைக்கு தடைக்கற்களாக இருக்கும் அனைத்தும் உதிரிகளாகி பொசுங்கி விடும். அதே நேரத்தில், வாழ்க்கையின் எந்தவொரு கணத்திலும் உண்மையான உழைப்பும் நேர்மையும் மட்டுமே வெற்றிப் பாதைக்கு வழி அமைத்து தரும்.
விடா முயற்சி, கற்பனை வளம், தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, உற்சாகம், சகிப்பு தன்மை, ஆளுமை திறன் என வெற்றிப் பாதைக்கு ஏராளமான உந்து சக்தி இருக்கலாம். அதன் கூடவே, அன்பு என்னும் விதையை தூவிச் செல்லுங்கள். அதனால் விளையும் அறுவடை மகத்தானதாக இருக்கும். தோல்வி என்பது வெளியில் இருந்து வருவது அல்ல. உள்ளுக்குள்ளேயே இருந்து வெளிப்படுவதாகும். எனவே, ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உள்ள வெற்றிக்கான குணங்களில் பலவீனமானது எது என்பதை கண்டுபிடித்து அறிந்து சரி செய்து கொள்வது அவசியம். நம்முடைய பலவீனத்தை விட மிக மோசமான தடை எதுவும் கிடையாது, என்கிறார் ஆங்கில சிந்தனையாளர் எமர்சன்.
மனித மனங்களுக்கு எதிர்மறை உணர்ச்சிகள் அதிகம். பத்தில் ஒரு பங்கு மட்டுமே நேர்மறை எனப்படும் பாசிடிவ் எண்ணங்கள் உள்ளன. எதிர்மறை எண்ணங்களை எண்ணினால் பயம், வெறுப்பு, கோபம், எரிச்சல், பொறாமை, பதற்றம், விரக்தி, படபடப்பு, மன அழுத்தம், தாழ்மை உணர்வு, குற்றவுணர்ச்சி என ஏராளமாக பட்டியலிடலாம். நேர்மறை எண்ணம் என பட்டியலிட்டால் சந்தோஷம், வியப்பு, உற்சாகம் இப்படி மிக குறைவானதாகவே தேறும். இது, சமூகம் கட்டமைத்துள்ள மனித இயல்பு. அதனாலேயே எதிர்மறை எண்ணங்கள் குறித்த செய்திகளையே மனம் அதிகமாக விரும்புகிறது.

இத்தகைய நெருக்கடியில் இருந்து வெளியேறினால் மட்டுமே வெற்றியை நோக்கி செல்ல முடியும். எதிர்மறை எண்ணங்களை வேரறுக்க நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும். அதை மனதுக்குள் அடிக்கடி கூறி பார்த்துக் கொள்வதும் அவசியம். ‘ஆல் இஸ் வெல்’, ‘உன்னால் முடியும்’, ‘யெஸ்’ இது போன்ற வார்த்தைகளால் நம்மை நாமே ஊக்கமளித்துக் கொள்ள வேண்டும். இதை நம்முடைய தினசரி உணவு போல தொடருவது அவசியம்.  

மனித வாழ்க்கையில் வெற்றி என்ற சொல்லுக்கு அர்த்தமாக பார்க்கப்படுவது சொகுசான வாழ்க்கை, பணம், பதவி, அதிகாரம் மற்றும் அதற்கு நிகரானவை தான். உண்மையில், நல்ல குணாதிசயங்களே ஒவ்வொரு வெற்றிக்கும் அடிப்படையாக இருக்கிறது. நல்ல குணங்களையும் நேர்மறை எண்ணங்களையும் ஒருவர் வளர்த்துக் கொண்டு இருந்தால் அவரை பற்றிய மற்றவர்களின் கருத்துகள் ஒரு பொருட்டே அல்ல. ஏனெனில், இறுதி வெற்றி அவர்கள் பக்கமே இருக்கும்.

ஆன்மிக பூமியான இந்தியாவின் பழங்கால புராணங்களும் இதிகாசங்களும் அதைத்தான் வெவ்வேறு கதை வடிவங்களில் வலியுறுத்துகின்றன. மகாபாரதத்தில் பாண்டவர்&கவுரவர் மோதல், ராமாயணத்தில் ராம பிரான்&ராவணன் மோதல் என ஒவ்வொன்றும் நல்ல குணங்களை கொண்டவர்களுக்கே இறுதி வெற்றி என்பதை வலியுறுத்துபவையாகவே உள்ளன. அத்தகைய நல்ல குணங்களை அடிப்படையாக கொள்வதோடு வெற்றி பெற தேவையான அனைத்து தகுதிகளையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். அந்த வெற்றியை நோக்கிய பாதையில் நடை போட்டு செல்ல அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

(முற்றும்)

No comments: