Tuesday 21 April 2020

ரேடியோ பொட்டி

 வேலை இல்லாதவனின் பகல் போழுதும் நோயாளியின் ராப் பொழுதும் ரொம்பவே நீளமா இருக்கும். இன்னியோட சரியா ஒரு மாசமாச்சி... 99 சதவீதம் பேரு மொத நிலையிலத்தான் இருப்பாங்க. இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் ஒரே ஆறுதல் சினிமா இல்லன்னா மியூஸிக்..

மியூஸிக்னதும் எனக்கு மொதல்ல ஞாபகத்துக்கு வருவது ரேடியோ தான். பெரிய சைஸ் ஓனிடா டிவி மாதிரியே இருக்கிற ரேடியோதான் நான் பாத்த மொத ரேடியோ. அத வால்வு ரேடியோன்னும் சொல்லுவாங்க. மெட்ராஸ்ல போலீஸ் வேலை பாத்து ரிட்டையர்டாகி வந்த மெட்ராஸ் தாத்தா வீட்டில அந்த ரேடியோ இருந்திச்சி.

காலைல ஆறு மணிக்கு 40 செகண்டுக்கு ஓபன் மியூசிக் ஓடும். அப்புறமாத்தான் ஸ்டேஷன திறப்பாங்க. முதல்ல ஒரு நிமிஷத்துக்கு வந்தே மாதரம். அதுக்குப் பிறகு தான் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். சாயந்திர நேரம் விவசாய செய்திக்காக பாடுற சுழன்றும் ஏர் பின்னது உலகம் பாட்டு, கிராமியக் கலை நிகழ்ச்சில்லாம் திருநெல்வேலி ஸ்டேசன்ல தனி ரகம்.

செல்போனுக்கு கவர் மாட்டிருக்கிற மாதிரி ரேடியோவுக்கும் தோல் கவர் மாட்டி பத்திரமா வச்சிருப்பாஙக சில பேரு. மர்பி கம்பெனி ரேடியோ அப்ப ரொம்ப பேமஸ்.

இந்திரா காந்திய சுட்டுக் கொன்னப்ப ரெண்டு நாளைக்கு ஓடிட்டிருந்த மியூஸிக். இன்னும் நெனவில இருக்கு. சோகத்த கொஞ்சம் கொஞ்சமா கரைச்சி காது, மனசுன்னு ஆரம்பிச்சி ஒடம்பு பூரா பரவ விட்டிச்சி. ஊர் முழுசும் கடைங்க அடைச்சிக் கிடக்க, கொலைங்கிற செய்தியும் சேந்தப்ப அந்த சோகத்தோட கொஞ்சம் திகிலும் கலந்து கிடந்திச்சி.

அதிலருந்து ஒரு ஆறு மாசத்துக்குள்ள நாங்களும் ஒரு செகண்ட் ஹேண்ட் ரேடியோ வாங்கிட்டோம். ஒரு ஞாயிற்றுக் கிழம மத்தியானம் பெரிய கோயில் தெருவில ரேடியோவ வாங்கிட்டு அத கேட்டுக்கிட்டே வீட்டுக்கு ரொம்ப மெதுவாவே நடந்து போனேன். அதில கேட்ட மொத பாட்டு "திருவிழா, திருவிழா, இளமையின் தலைமையில் ஒருவிழா..." அடுத்த பாட்டு "காளிதாசன் கண்ண தாசன் கவிதை நீ... எழுத வா படிக்க வா". இது முடியும்போது தான் வீட்டுக்கு போய் சேர்ந்தேன். மூணு நிமிஷ தூரத்த பத்து நிமிஷம் நடந்தேன்.

தெரிஞ்ச டெயிலர்கிட்டருந்து வாங்கின அந்த ரேடியோ வித்தியாசமானது. அது பிலிப்ஸ் கம்பெனி ரேடியோ. அதில, பண்பலை, மத்திய அலை இத்தோட சிற்றலை 1, சிற்றலை 2, சிற்றலை 3ன்னு ஐந்து விதமா மாத்திக்கலாம்.

வெளிநாடுகள்ல தமிழ் ஒலிபரப்பு டைம் எல்லாம் நோட் போட்டு எழுதி வச்சி அந்தந்த ஸ்டேஷனை போட்டு பார்ப்போம். ரேடிேயோவோட கெப்பாசிட்டிய செக் பண்றதோட அவங்களோட தமிழ கேக்கும்போது கூடுதல் சந்தோஷம். வெரித்தாஸ், மணிலா, பிபிசி லண்டன் அவ்வளவு ஏன் பாகிஸ்தான்லருந்து கூட 20 நிமிஷம் தமிழ் நிகழ்ச்சி இருந்திச்சி.

இலங்கையில உச்சகட்ட பிரச்சினையா இருந்த நேரம் அது. புலிகள் செய்திக்கு பிபிசின்னா, பாட்டுக்கு அதே இலங்கை அரசோட ஸ்டேஷன்தான். இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் அப்படின்னு கொழும்பு ஸ்டேஷன் ஒலிபரப்புற பாட்டுக்கு தென் தமிழகமே அடிமைன்னு சொல்லலாம். இது போக கண்டி ஸ்டேனும் எங்க ரேடியோல வரும்.

முழு நேரமும் தமிழ் சினிமா பாட்டுக்களா போட்டாலும் அதையும் வித்தியாசமா செய்வாங்க கொழும்பு ஸ்டேஷன்ல. சிறுகதை ஒண்ண சொந்தமா ரெடி பண்ணி அதுக்கு ஏத்த மாதிரியான பாடல்களை நடுவில செருகி அரை மணி நேரம் போடுறது வேற லெவல். கதைய வாசிக்கிறவங்க குரல்லயே ஜாலம் காட்டுவாங்க. ஏதாவது ஒரு கேள்விய கேட்டு அடுத்து வரும் பாட்டுக்குள்ள பதில் இருக்குற மாதிரி போடுறதும் தனி ரகம்.



பிபிசி செய்தின்னா ஆனந்தி, ஆகாசவாணின்னா சரோஜ் நாராயண்சாமி. அதே மாதிரி கொழும்பு ஸ்டேஷன்னா ராஜேஸ்வரி சண்முகம். பெரும்பாலும் கதையோட சேர்ந்த பாடல் நிகழ்ச்சியில அவங்கதான் வருவாங்க. மூணு மணி நேர சினிமாவ ஒரு மணி நேரமா சுருக்கி போடுற ஒலிச் சித்திரம் நிகழ்ச்சிக்கு நெறைய ரசிகருங்க உண்டு.

ஊரு பக்கம் குடும்பம் குடும்பமா பீடி சுத்துற வேல பாத்ததால கொழும்பு ஸ்டேஷன் தான் பெரிய பொழுதுபோக்கு. அப்பப்ப விடுதலைப் புலிகள் ஸ்டேஷனும் வரும். இதோ புலி வருகுது திட்டத்தில், அராஜகம் ஒழியுது மொத்தத்தில் என்ற விக்ரம் பாடல்தான் அதில் ஃபேவரைட். அது மாதிரி பாட்டுகள் கொழும்பு ஸ்டேஷனில் கேட்க முடியாது.

இலங்கை ஸ்டேஷன் இந்த அளவுக்கு வாழ்க்கையோட இணைஞ்சிருந்தாலும் திருநெல்வேலி ரேடியோவோட மவுசும் தனிதான். சினிமா பாட்டு போடுற நேரம், யாரும் சொல்லாமலேயே எல்லா வீட்டு ரேடியோவும் கோரசா பாடிட்டிருக்கும். பலருக்கு சினிமா பாட்டு வசனம் எல்லாம் மனப்பாடமா இருக்கும்.

இசை மட்டும் இல்லைன்னா மனுச மனம் பேதலிச்சிப் போவும். அது ரேடியோ காலத்தில ஆரம்பிச்சி பல பாதைங்கள கடந்து இப்ப முழு நேர பண்பலை வரை வளந்து நிக்குது. ஆண்ட்ராய்டு ஆப்பில் கூட ரேடியோ ஸ்டேஷன் வரிச கட்டி வருது. 

பேட்டரி ரேடியோவ கொர கொர இரைச்சலோட தலை மாட்டில வச்சி தூங்கினதோட லேட்டஸ்ட் வெர்ஷன் தான் பண்பலை ரேடியோவ ஹெட்ஸெட் மாட்டி கேட்டுகிட்டே தூங்குறது.

எப்ப எங்க எந்த பாட்டு போடுவாங்கன்னு காத்திருந்த நிலைமை மாறி, எப்ப நம்மள இந்தாளு கேக்க ஆரம்பிப்பான்னு பாட்டுங்கல்லாம் ஏங்கிக் கிடக்கிற காலம் வந்திடுச்சி.

அதுக்காவ மியுசிக் மலிஞ்சி போச்சின்னு சொல்லிற முடியாது. அது, மனுஷ மனம் பேதலிக்காம தடுக்கிற ஹைட்ராக்ஸி குளோரோ குயின்... 

அதாங்க.. மனுஷனோட மூச்ச சீராக்கும் மருந்து.

சென்னைக்கு வந்த புதுசில ஆல் இண்டியா ரேடியோ பி அலைவரிசையில நாலைஞ்சி முறை இளைய பாரதம் நிகழ்ச்சில நானும் இந்த ஹைட்ராக்சி குளோரோ குயின குடுத்திருக்கேன்ல..

#நெல்லை_ரவீந்திரன்

No comments: