Sunday 19 April 2020

டெண்ட் கொட்டாய்

 சீர்காழி கோவிந்த ராஜனோட கணீர் குரல், விநாயகனே வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே...ன்னு என காத்துல தவழ்ந்து வரும்போதே மனசுக்குள்ள உற்சாகம் ஊற்றெடுக்கும். பழைய ரெக்கார்டு தட்டு சுழல சுழல குழாய் செட் உச்சஸ்தாயில் கூப்பிடும். காலைலேயே வீட்டில பெர்மிசன் வாங்கிருந்தா இன்னும் கூடுதல் சந்தோசம்.

ஊரில இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலவுல இருந்தா கூட, புளிய மரங்கள்ல விளையாடிகிட்டிருக்க காத்து, பயித்தங் காடு வழியா பாட்ட சுமந்து கிட்டு வரும். அது பாட்டு மட்டுமில்ல. ஒரு சிக்னலும் கூட. அன்னிக்கு என்ன படம் ஓடுதோ அதுக்கு ஏத்த மாதிரி, எம்ஜி ஆர் பாட்டு, சிவாஜி பாட்டுன்னு போடுவாங்க.

திறந்தாச்சின்னா அதுக்கு ஒரு பாட்டு, டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சதும் ஒரு பாட்டு, படம் போடப் போறாங்கன்னா அதுக்கும் ஒரு பாட்டு இது தான் எங்க ஊரு டூரிங் டாக்கீசுக்கு பொது விதி. டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சதும் வீட்லருந்து கிளம்பினா போதும். படம் ஆரம்பிக்கவும் போயிரலாம்.

சாயந்தரம் ஆறே முக்காலுக்கு படம் போட்டுருவாங்க. தரை டிக்கெட், பெஞ்சு டிக்கெட்டுன்னு ரெண்டு விதம். பெஞ்சின்னா சிமெண்ட் சிலாப் போட்டு வச்சிருப்பாங்க. அப்பாடான்னு சாஞ்சோம்னா, பின்னாடி இருக்கவங்க மடியிலதான் போய் விழனும். அப்புறம் அவ்ளோதான்.

அதனால, தரை டிக்கெட் தான் நம்ம ஃபேவரைட். நல்ல ஆத்து மணல் போட்டு வச்சிருப்பாங்க. கொட்டகைக்கு வெளியில கூட மண்ண குமிச்சி வச்சி உக்காந்தும் படம் பார்க்கலாம், படுத்துக் கிட்டும் பாக்கலாம். கோடை வெயில் காலத்திலல்லாம், அப்பிடி படுத்துக்கிட்டு ஃபர்ஸ்ட் ஷோ பாக்கிறதே தனி சுகம். 

பிலிம் ஓட்டுற சத்தம், ஆபரேட்டர் ரூம்லேருந்து திரை வரைக்கும் நீளமா இருக்கிற புகை, அத்தோட, படம் பாத்துக்கிட்டிருக்கவங்க யாராவது இழுத்து விடுற புகை. இதுக்கு நடுவில பொம்பிளையாளுங்க தலையில வச்சிருக்கிற பூ வாசம். இப்பிடியான கதம்பமான டெண்ட் 

கொட்டாய் வாசன, இப்பவும் மூக்க சுத்திகிட்டே இருக்கு.


இன்டெர்வெல் நேரத்தில கை முருக்கு விப்பாங்க பாருங்க அந்த ருசிய இதுவரை எதுவுமே அடிச்சிக்கல. டூரிங் தியேட்டர்லல்லாம் நாலு பார்ட்டா படம் போடுவாங்க. அதனால மூணு இன்டர்வெல் வரும். 

அப்பல்லாம் ஆபரேட்டர் ரூமுக்கு வெளியில நின்னு ரீல் மாத்துறத வேடிக்க பாக்குறது தனி ஆச. பெரிய ஆளா ஆனதும் எப்பிடியாவது ஆபரேட்டராயிடனும்னு கூட நெனப்பு வந்து போகும். அத மனசில வச்சி.வீட்டில பிலிம் ஓட்டி பாத்தது தனி கதை.

அது ரஜினி, கமல் காலம்னாலும் எம்ஜிஆர் ஆட்சி காலம். அதனால சனி ஞாயிறுன்னா எம்ஜிஆர் படம் நிச்சயம். சிவாஜி படமும் சில வாரங்கள்ல போடுவாங்க. எம்ஜிஆரோட படங்கள்ல 80க்கும் மேல எனக்கு காமிச்சது டூரிங் தியேட்டர்தான். அப்பப்ப சிவாஜி படமும் பாக்கிறது உண்டு.

ரொம்பவும் அழுகாச்சியா படம் போச்சிதுன்னா பனை ஓலை சங்கீதமும், சிலு சிலுன்னு காட்டுக்குள்ளற வீசுற காத்தும் தானாவே கண்ணுல தூக்கத்த வரவழைச்சிரும். 

தியேட்டருக்கே கூட இது மாதிரி சோகம் வந்திருக்கு. அதான் வசந்தம்ங்கிற பேர்ல கொஞ்ச நாளும் குமரன்ங்கிற பேர்ல கொஞ்ச நாளும் டூரிங் தியேட்டர் ஓடிச்சி. வேற சில சிக்கல் வந்தா ரெண்டு முணு நாளு மூடிருவாங்க. அப்பிடித்தான் அந்த ஏழு நாள் படம் ஏழு நாள் ஓடிச்சி. அதாவது படம் ஓடுணுது முணு நாள் தான். மத்த நாள்ல தியேட்டர் மூடிக் கிடந்தது.

சனி, ஞாயிறு இல்லாம மத்த நாளுங்கள்ல ரஜினி, கமல், பாக்யராஜ், பாண்டியன் படங்கள போடுவாங்க. அந்த நாளுங்கள்ல வருத்தப்படாத வாலிபர்கள நெறைய பார்க்கலாம். அப்பல்லாம் கள், சாராய கடைங்க உண்டு. அதனால, சித்தப்பு, மாமான்னு சொந்தக்கார குடிமகன்களும் நிறைஞ்சிருப்பாங்க.

இதனாலேயே சனி, ஞாயிறு தான் ஊருக்காரங்க அதிகமா வருவாங்க. சனிக்கிழம பீடிக்கடை சம்பள நாள் வேற. இந்த நினைவுகளல்லாம் புகையா மனசெல்லாம் சுத்திட்டிருக்கு.

இப்ப தினசரியும் சன் லைப், முரசு, கே டிவி சேனல்கள்ல போடுற படங்கள் எல்லாம் அந்த புகை மேல வெளிச்சம் போடுறதால, பழைய நெனப்பெல்லாம், தனித்தனி படங்களா மனசுக்குள்ள டெண்ட் கொட்டாய் போட்டு ஓடிட்டிருக்கு.

#நெல்லை_ரவீந்திரன்

No comments: