Friday 24 April 2020

வெயிலோடு விளையாடி...

 


வெயில் சரம் சரமா பெய்ய தொடங்கி கூரை வீடுகளில் விழுந்து தரை மீது சிதறுகிறது. சிதறி விழும் இடத்தில் இருந்த எறும்பு கூட்டம் ஒன்று கூரை நிழலை நோக்கி ஓடுகின்றன. வனத்துக்குள் பனை மரமாய் வளர்ந்து நிற்கும் மாடி வீடுகளின் தலையில் விழுந்த வெயில் துளிகள், படிக்கட்டுகள் வழியாக வழிந்தோடுகின்றன, துவட்டி விடுவதற்கு ஆளின்றி.

சாலையை வாய்க்காலாக்கி ஓடும் வெயில், ஆங்காங்கே ஒழுகி, சாலையோர மரம் நோக்கி வருகிறது. கையில் சைக்கிள் டயரை பிடித்தபடி, நண்பர்களை எதிர் நோக்கி காத்திருக்கும் என் காலடியை தொடுகிறது. மழை காலம் போலவே குடை பிடித்து நிற்கிறது, வேப்ப மரம். டயர் வண்டி ஓட்டுவதற்கான வாகை மர குச்சியை கன்னத்தில் வைத்தபடியே மேல் நோக்கி பார்க்கிறேன்.

மரக் கிளையில் ஓய்வெடுக்கும் ஓணான் ஒன்று கண்களை மூடியபடி தியானத்தில் மூழ்கி கிடக்கிறது. தொண்டையின் மேல், கீழ் அசைவுகளை பார்த்தால் தாகத்தில் தவிப்பது போல தெரிகிறது. இது போல எத்தனை ஓணான்களை அடித்துக் கொன்றிருப்போம். நண்பர்கள் வரட்டும். ஆனால், இந்த ஓணான் மீது கொஞ்சம் பரிதாபம் வருகிறது. மர நிழல் தனிமையில் துணையாக இருப்பதால் வந்த பாசமாகவும் இருக்கலாம்.

ஒருத்தரையும் காணோமே. டயர் வண்டியை ஓட்டியபடி, ஊர் சுற்ற மனம் பரபரக்கிறது. வீட்டில் இருந்து கிளம்பும் போதே அம்மா தடுத்தது நினைவுக்கு வருகிறது. இது மாதிரியே, நண்பர்களும் வீட்டில் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு வர நேரமாகலாம். மனதை சமாதானப் படுத்திக் கொண்டே ஓணானை ரசிக்க தொடங்கினேன்.

அதற்கு தாகமெடுத்தால் என்ன செய்யும். வெயிலில் டயர் வண்டி ஓட்டிக் கொண்டு ஊர் சுற்றப்போகும் எங்களுக்கு கவலை கிடையாது. கொச வாத்தியார் வீட்டம்மா, ஆசாரிமார் வீட்டு ஆச்சி, கசாப்புக் கடை தேவர் வீடு, பால் வியாபாரம் பாக்கிற கோனார் வீடு, ஊரைத் தாண்டி போனா பள்ளக்குடியில ஏதாவது ஒரு அக்காள் வீடுன்னு தண்ணீரை வாங்கி நாங்க குடிச்சிப்போம்.

இப்பிடித்தான் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கி குடிச்சிட்டு அம்மாகிட்ட திட்டு வாங்கினது ஞாபகம் வருகிறது. ஆனால், மற்ற வீடுங்களுக்கு போனது பற்றி அம்மா ஏதுவும் சொன்னதில்ல. அவங்களும் ஒரு பானை நிறைய தண்ணீரை வாசல்லேயே வச்சிருப்பாங்க.

இந்த நினைப்பே தாகம் வர வைத்து விட்டது. மழை பெய்தால் கையில் பிடித்து குடிக்கலாம். வழிந்தோடும் வெயிலை கைகளில் எப்பிடி பிடிப்பது? சமையல் முடிந்த அடுப்பில் நிறைந்து கிடக்கு கங்குகள் அருகில் இருப்பது போலவே தோன்றுகிறது. வேப்ப மர நிழல் மட்டும் கொஞ்சம் ஆறுதல். வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்யும் அம்மாவும்  நினைவுக்கு வந்து போகிறார்.

வெயிலை ரசித்தபடியே ஏதேதோ நினைவுகள் சுழன்றது. தண்ணீருக்குள் குதித்தபடி வரும் குதிரைகள் போல, கானல் நீரை சிதறடித்து டயர்களை குச்சியால் தட்டியபடி ஓட்டி வரும் நண்பர்கள் தென்பட தொடங்கினார்கள். சைக்கிள் டயருக்கு பதில் ஏதாவது பைக்கின் டயரை ஓட்டி வந்தால் எங்களை பொருத்தவரை வசதியானவன்.

ஒரு வழியாக நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டோம். இனிமேல், ஊர் சுற்ற கிளம்ப வேண்டியது தான். மரத்தில் ஓணானை பார்த்தேன். பாவமாக இருந்தது. நண்பர்களிடம் ஓணானை காண்பிக்கவில்லை. சொன்னால் அதற்கு இறுதி மரியாதையை செய்த பிறகே புறப்படுவார்கள்.

எல்லோரும் அவரவர் டயர் வண்டிகளை ஓட்டியபடி, மெதுவாக ஓடத் தொடங்கினோம். வாய் உலர்ந்து, மேல் அன்னத்துடன் நாக்கு ஒட்டியது போல இருந்தது. முதலில் பக்கத்து தெருவில் இருக்கும்  வீட்டில் தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டும். அம்மா திட்டினாலும் பரவாயில்லை. அவர்களுக்குள் என்ன சச்சரவோ? தாகத்தில் அது கரைந்து போகட்டும்.

#நெல்லை_ரவீந்திரன்

No comments: