Wednesday 1 July 2020

கொரோனா ரிலாக்ஸ்

 பொது முடக்கத்தால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களின் பொழுதுபோக்குக்காக விஜய் டிவியின் ரீ டெலகாஸ்ட் 'மகாபாரதம்' கிளைமாக்ஸை நெருங்கி விட்டது.




ஆறு ஆண்டுகளுக்கு முன் அரை மணி நேர எபிஸோடுகளாக சுமார் ஓராண்டுக்கு மேல் நீடித்த இந்த தொடர், இப்போது தினமும் இரண்டு மணி நேரம் வீதம் நூறு நாட்களில் நிறைவை நெருங்கியுள்ளது.


இந்த வேளையில் இந்த தொடர் பற்றி அந்த நாளில் எழுதிய எனது எழுத்துகள்...

👇👇👇👇


யாராவது ஒருவர் நீட்டி முழக்கி கதை அளந்து கொண்டு இருந்தால், ‘நீ என்ன மகாபாரத கதையா சொல்கிறாய்?’ என்று கேட்பது வழக்கம். அந்த அளவுக்கு மகாபாரதம் என்றால் மிக நீநீநீளளமான இதிகாச காவியம். 


சாந்தனு மகாராஜாவுக்கு பிறகு விசித்திர வீரியன். அவனுக்கு பிறகு, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு. அவர்களுடைய வாரிசுகள் துரியோதனன் மற்றும் தர்மர், அர்ச்சுனன். அர்ச்சுனனின் மகன் அபிமன்யு, அவனது புதல்வன் பரீட்சித்து என 6 தலைமுறையினரைப் பற்றிய நீண்ட நெடிய வரலாறு, அது. 


அந்த வரலாற்றில் 5 தலைமுறையினருடன் வாழ்ந்தவர், சாந்தனு மற்றும் கங்கா தேவிக்கு மகனாக பிறந்த தேவவிரதன் எனப்படும் பீஷ்மர். இன்றைய தலைமுறையிடம் இவ்வளவு நீண்ட இதிகாச கதையை படிக்கும் பொறுமையை நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. 


அதனால்தானோ என்னவோ? டிவி சேனல்களில் அவ்வப்போது மகாபாரதத்தை நெடிய தொடராக ஒளிபரப்புகின்றனர். கால் நூற்றாண்டுக்கு முன் தூர்தர்ஷனில் ‘இத் கோ மஹாபாரத் கதா’ என்ற டைட்டில் பாடலுடன் தொடர் ஆரம்பிக்கும்போது மொழி புரியாவிட்டாலும் அதை ரசித்து பார்க்க பெரிய கூட்டமே காத்து கிடந்தது. பின்னர், மொழி வாரி சேனல்கள் பெருகியதால் பிராந்திய மொழிகளிலேயே மகாபாரதம் காண முடிகிறது. ஆனாலும், அதன் நீண்ட நெடிய வடிவாக்கத்தை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சலிப்பு இல்லாமலும் மக்களுக்கு தருவதில் ஒவ்வொரு சேனலும் வேறுபட்டன. 


அதில் ஸ்டார் குழுமத்தை சேர்ந்த விஜய், வித்தியாசமாக நிற்கிறது. ஏற்கெனவே, ஸ்டார் பிளஸ் சேனலில் இந்தியில் ஒளிபரப்பான தொடரின் டப்பிங் வெர்சன் தான் ஸ்டார் விஜய் ஒளிபரப்பிய மகாபாரதம். டப்பிங் நெடி சிறிது கூட இல்லாமல் அசல் தமிழ் தொடர் உணர்வை அளித்தது.


கிருஷ்ணன், சகுனி, துரியோதனன் ஆகிய வேடங்களை ஏற்றவர்களின் நடிப்பு பிரமிக்கத்தக்கது. முகத்தில் சாந்தமும், கருணையும், சமயோசித சாணக்கியத்தனமும் ஒருங்கே காட்சியளித்த கிருஷ்ணரை காணும்போது உண்மையில் கிருஷ்ணர் இப்படித்தான் இருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. 


ஒற்றை கண்ணை மட்டும் திறந்து கொண்டு சதி ஆலோசனைகளை அள்ளி விடும் சகுனி கதாபாத்திரத்தை ஏற்றவரின் நடிப்பு மிகவும் அசாதாரணமானது. இதிகாச சகுனி கூட, இப்படி இருந்திருப்பாரா என்பது சந்தேகமே? 


பீஷ்மர், துரோணர், நேத்திரங்களை இழந்த திருதராஷ்டிரர், காந்தாரி, பாஞ்சாலி, அர்ச்சுனன், அசுவத்தாமன், கர்ணன், அபிமன்யு என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக செய்திருந்தனர்.


தமிழில் எழுதப்பட்ட டப்பிங் வசனங்களும் கூட எதுகை, மோனையோடு மிக அழகாக அமைந்திருந்தன. கீதை உபதேசம் செய்யும் காட்சிகள், மிக முக்கியமான தருணங்களில் நடைபெறும் வாக்குவாதங்கள் போன்றவற்றில் கையாளப்பட்ட வார்த்தை ஜாலங்களே இதற்கு உதாரணம். 


தமிழில் பின்னணி குரல் கொடுத்தவர்களுக்கும் தொடரின் அபரிமிதமான வரவேற்பில் முக்கிய பங்கு உண்டு. காட்சி அமைப்பில் சிறு பிசிறு கூட இல்லாமல் இதிகாச காலத்தை கண்முன்னே நிறுத்தியதில் ஸ்டார் விஜய்க்கு ஷொட்டு. 


அஷ்டவசுக்களில் ஒருவராக இருந்து கங்கா தேவியின் மூலமாக மானிட பிறவியை அடைந்தவரும் ராஜநீதிகளை அறிந்தவருமான பீஷ்மரால் துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களின் தவறுகளை தடுக்க முடியவில்லை. பீஷ்மர் என்ற மாபெரும் துணை இருப்பதாலேயே அஸ்தினாபுர யுவராஜன் துரியோதனனின் அட்டகாசத்தை அண்டை நாட்டு அரசர்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. தனது தமையன் பாண்டுவுக்கு சொந்தமான அரசை கூட, அவனது புத்திரர்களுக்கு அளிக்க திருதராஷ்டிரனுக்கு மனம் இல்லை. அவனது புத்திரபாசம் தடுத்தது. புத்திர பாசத்தால் தனது மகன் அசுவத்தாமனுக்கு ஒரு ராஜ்ய பரிபாலனம் கிடைக்கும் என்பதாலேயே துரியோதனனை சார்ந்து இருந்து அவனது தவறுகளை குரு துரோணராலும் இடித்துக் கூற முடியவில்லை. 


இப்படி இன்மைகள் அதிகரித்தபோது அரசன் வழியிலேயே குடிமக்களும் செல்வார்கள் என்பதால் ஒரு யுகத்தை அழித்து புதிய யுகம் படைத்ததாக கிருஷ்ணர் கூறுகிறார். 


மாபெரும் சபையில் ஒரு பெண்ணுக்கு (அதுவும் ராஜகுலத்தை சேர்ந்தவருக்கே) நேரிட்ட அவமதிப்பு தொடங்கி உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பிரம்மாஸ்திரத்தால் அழிக்க நினைக்கும் அசுவத்தாமன் வரை ஒவ்வொரு தவறுக்கும் தண்டனைகளை வாரி வழங்கும் கிருஷ்ணரிடம் பாஞ்சாலி கேட்கும் கேள்விகள் சிந்திக்க தூண்டுபவை. 


இவ்வளவு கோரமான யுத்தம் எதற்காக? எதிரிகளாக இருந்தாலும் மிக கொடூரமாக உயிரிழந்த பிறகு அவர்கள் மீது பரிதாபமே தோன்றுவதோடு எனது தரப்பிலும் வாரிசுகளை இழந்து நிற்கிறோமே? அனைத்து லீலைகளையும் புரிபவன் நீ என்பது உண்மை என்றால், மனிதர்களின் மனதை மாற்றி இருக்கலாமே? மாபெரும் நாசகார யுத்தத்தை நிகழ்த்தியது ஏன்? இப்படி அடுக்கடுக்காக துருபத கன்னிகை பாஞ்சாலி எழுப்பும் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறும் பதில், எக்காலத்துக்கும் பொருந்தும். 


‘ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் அவர்களாகவே சுயமாக சிந்தித்து செயல்படும் சுதந்திரம் உண்டு. (அதில் கடவுளும் தலையிட முடியாது). ஆனால், அக்கிரமம் அதிகரித்து அதர்மம் தலை தூக்கினால் அதை ஒட்டு மொத்தமாக அழித்து புதிய யுகம் படைப்பது கடவுளின் கடமை. அதுதான், இந்த யுத்தத்தில் நடைபெற்றது.


அபிமன்யுவின் மனைவி உத்தரை வயிற்றில் வளரும், உலகை எட்டிப் பார்க்காத சிசு கூட கர்ப்பத்திலேயே உயிரை இழந்து மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. அந்த சிசுவே, ‘பரிட்சீத்து மகராஜா’வாக (அர்ஜுனனின் பேரன்) புதிய பாரதத்தை தொடங்குவான்’ என்பதே அந்த பதில். 


18 நாள் மகாபாரத யுத்தத்தில் காந்தார அரசன் சகுனி, அஸ்தினாபுர அரசன் துரியோதனன், திரிகர்த்த தேச அரசன் சுதர்மன், சிந்து அரசன் ஜயத்ரதன், பாஞ்சால தேச அரசன் துருபதன், மத்ரிய அரசன் சல்லியன், அங்க தேச அரசன் கர்ணன், உத்தரதேச அரசன் விராடன் என பல்வேறு தேசத்து அரசர்களும் கொல்லப்படுகின்றனர்.


கிருஷ்ணர் கூறுவது போல முற்றிலுமாக அனைத்து ஆட்சிகளும் துடைத்து எறியப்பட்டு புதிய ஆட்சி மலருகிறது. அக்கினியில் உதித்த பாஞ்சாலி மற்றும் நாடிழந்து நின்ற பாண்டவர்கள் மட்டுமே யுத்தத்தின் முடிவில் உயிர் பிழைத்து நிற்கின்றனர். 


மகாபாரதத்தில் கிருஷ்ணர் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கினால் பல்வேறு கருத்துகள் பொதிந்த தத்துவ விசாரங்களாகவே உள்ளன. கூடுமான வரை அவற்றை ஸ்டார் விஜய் சரியாக கையாண்டு இருக்கிறது. ஆங்காங்கே சில தவறுகளும் குறைகளும்


(உதாரணம்=அபிமன்யு வதத்தில் கோரம், குந்தி மற்றும் காந்தாரி போன்ற மூத்த ராஜமாதாக்களின் இளமை தோற்றம்) இருந்தாலும் நிறைவு பெற்ற மகாபாரதம், நிறைவாகவே இருக்கிறது. இனிமேல், மஹாபாரதம் இல்லா பொழுதை நினைத்தால் வெறுமை கவிழ்கிறது.


‘விதியாடும் விளையாட்டில் 

சதி வலையில் வீழ்ந்தனரே

தர்மம்... இங்கு பலியானதே

சதி செய்த சூழ்ச்சி தனில்

கதியின்றி போயினரே...’

 

‘அகிலம் போற்றும் பாரதம்

இது இணையில்லா ஒரு காவியம்

தர்ம, அதர்ம வழியினிலே

நன்மை, தீமையின் நடுவினிலே

விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமோ...’


‘கிருஷ்ணனின் மகிமையும்

கீதையின் பெருமையும்

ஒன்றாக சங்கமிக்கும்

ஒரு புண்ணிய காவியம் 

மகாபாரதம்... மகாபாரதம்...’


ஆகிய பாடல்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கெண்டிருக்கின்றன.

மீள் பதிவின் எடிட்டட் வெர்ஷன்

கொரோனா முடிந்து புது யுகம் பிறக்கும் நம்பிக்கையுடன்

#நெல்லை_ரவீந்திரன்

No comments: