Wednesday 23 September 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 21

ரசிகர்களை மகிழ்விப்பதை கடந்து எதிர்காலத்தை சரியாக கணித்து சொல்வதோடு மக்களுக்கு தேவையான விஷயங்களையும் கூறும் கலைஞனே காலத்தை வென்று நிலைத்து நிற்பான். அதற்கு மிகச் சிறந்த ஒரே உதாரணம் இவர்தான்.  "நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா..." என தன்னைத் தானே கூறிக் கொண்டவர். அவர்தான், இறந்து அறுபது ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 


நாகர்கோவிலில் பிறந்த இவர், ஏழ்மையால் நாடக கொட்டகையில் தின்பண்டங்கள் விற்று வாழ்க்கையை தொடங்கி, பின்னாளில் சொந்தமாக நாடக கம்பெனியையே நடத்தும் அளவுக்கு உயர்ந்தார். வில்லுப் பாட்டுக்காரராகவும் சில காலம் காலம் தள்ளியவர், என்எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமா பிரபலங்கள் பலருக்கும் முகவரி தந்த 'சதிலீலாவதி'தான் இவருக்கும் முதல் படம். ஆனால், முதலில் வெளியானது 'மேனகா' என்ற படம். 1935ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுக்குள் பாகவதர் காலம் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி காலம் வரை 150 படங்களில் நடித்து விட்டார்.


1940களில் தமிழ் திரை உலகை உலுக்கிய லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கி இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும் மனம் தளராதவர், என்எஸ்கே. அந்த வழக்கில் சிக்கிய அன்றைய சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதரே நிலை குலைந்து அதற்கு பின் படங்களில் பெரிதாக தலைகாட்ட வில்லை. ஆனால், என்எஸ்கே தளரவில்லை. அதுதான் அவரது எதையும் தாங்கும் குணம். சிறை மீண்ட பிறகு தான் அவருக்கு கலைவாணர் பட்டம் கொடுக்கப்பட்டது. கொடுத்தவர் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார்.


என்எஸ்கே அவரது மனைவி டி.ஏ. மதுரம் இருவரும்  இணைந்து நடித்த அனைத்து காமெடி ஸீன்களுமே தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ரகங்கள் 1936ம் ஆண்டில் வெளியான 'வசந்த சேனா' படத்தில் ஜோடியாக அறிமுகமான மதுரம், பின்னர், நிஜத்திலும் என்எஸ் கிருஷ்ணன் ஜோடியாகி விட்டார்.



எதிர்ப்பவரின் மனம் புண்படாமல் படங்களில் பகுத்தறிவு புகட்டியவர். சமூக சீர்திருத்த கருத்துகளை நாசூக்காக சொன்னவர். பராசக்திக்கு முன்பே அண்ணா கதை வசனத்தில், இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'நல்ல தம்பி' (1949) படத்தின் தயாரிப்பாளர் என்எஸ் கிருஷ்ணன். 


இந்த படத்தில் இவர் பாடும் "விஞ்ஞானத்த வளக்க போறேண்டி..." பாடலை முழுமையாக கேட்டால் போதும் அவரது எதிர்கால தீர்க்க சிந்தனையை அறியலாம். கிரைண்டர், டெஸ்ட் டியூப் பேபி, அணு மின்சாரம் என ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு பிந்தைய விஞ்ஞான வளர்ச்சிகளை நான்கு நிமிட பாடலில் என்எஸ்கே பிட்டு பிட்டு வைத்திருப்பார். "மனுஷன மனுஷன் ஏய்ச்சி பிழைச்சது அந்தக் காலம்..." பாடல் இவரது முற்போக்கு சிந்தனையை சொல்லும். அந்த படத்திலேயே அவரது கிந்தனார் கதாகாலட்சேப பாடல், நையாண்டியுடன் கூடிய அக்மார்க் சமுதாய  விழிப்புணர்வு ரகம்.



இதுபோல, "சிரிப்பு... சிந்திக்க தெரிந்த மனித இனத்துக்கே சொந்தமான கையிருப்பு..." பாடலில் மனிதர்களின் சிரிப்பின் வெரைட்டிகளை என்எஸ்கே பாடியிருப்பார். அது யாருமே சிந்திக்காத விஷயம். 'முதல் தேதி' படத்தில் "ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்... இருபத்தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்..." பாடலில் மாத சம்பளக்காரனின் நிலையை அப்போதே தெளிவாக சொல்லியிருப்பார், என்எஸ் கிருஷ்ணன்.

'அம்பிகாபதி' படத்தில் "கண்ணே உன்னால நான் படும் கவலை கொஞ்சமா...." என டிஏ மதுரத்தை சீண்டியபடி, தங்கமே... தேனே... என வரிக்கு வரி நையாண்டியுடன் பாடும் பாடல் எவர்கிரீன் காதல் நகைச்சுவை ரகம். 


தமிழில் வழக்கொழிந்து போன லாவணி வகை பாடல் ஒன்றை 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் எம்ஜிஆருடன் பாடியிருப்பார் என்எஸ்கிருஷ்ணன். அதில் ஒரு வரி "உலகிலே மிக பயங்கரமான ஆயுதம் எது... கத்தி.. இல்ல... கோடாரி... இல்ல... மனிதனோட நாக்கு...". 



எம்ஜிஆரின் வளர்ப்பு தந்தையாக 'மதுரை வீரன்' படத்தில் நடித்திருப்பார், என்எஸ்கே. இவர் மீது எம்ஜிஆருக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏழைகளுக்கு உதவும் குணம் எம்ஜிஆரிடம் குடியேறியதற்கு காரணமே என்எஸ்கே தான். அவரது வள்ளல் தன்மை தான் எம்ஜிஆரையும் தொற்றியது.

தயாரிப்பாளர், நடிகர், பாடகர் மட்டுமல்ல என்எஸ் கிருஷ்ணன் நல்ல வசனகர்த்தாவும் கூட. அவரது காமெடி டிராக்குகளை அந்தக்கால தயாரிப்பாளர்கள் விலை கொடுத்து வாங்கி பயன் படுத்தியுள்ளனர். இது மட்டுமல்ல, சிவாஜி நடித்த பணம் (1952) மற்றும் மணமகள் (1951) படங்களையும் இயக்கி இருக்கிறார், என்எஸ்கே. இரண்டுக்கும் கதை வசனம் கலைஞர் கருணாநிதி.


1937ம் ஆண்டு பாகவதரின் அம்பிகாபதி படத்திலும் 1957ல் வெளியான சிவாஜியின் அம்பிகாபதி படத்திலும் நடித்திருக்கிறார். இதுபோல 1939ல் வெளியான மதுரை வீரன் படத்திலும் 1956ம் ஆண்டு வெளியான எம்ஜிஆரின் மதுரை வீரன் படத்திலும் நடித்திருக்கிறார், கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்.

தமிழ் சினிமாவின் முதல் திராவிட இயக்க ஆதரவாளர் என்எஸ்கே தான். திமுகவுக்காக பிரசாரமும் செய்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என மூவருமே மிகுந்த மரியாதை வைத்திருந்த என்எஸ்கே 'பணம்' படத்தில் பாடிய பாடல் ஒன்று, "தீனா மூனா கானா...." என தொடங்கும்.

ஆனால், திராவிட ஆட்சி அமைவதற்கு பத்து ஆண்டுகளுக்கு  முன்பே கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் மறைந்து விட்டார். சிரிப்பு மருத்துவர், இந்தியாவின் சார்லி சாப்ளின் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1957ம் ஆண்டில் இறந்தபோது அவரது வயது 50ஐ கூட தொடவில்லை. வெறும் 48 தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: