Sunday 6 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -31

நூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் 55 ஆண்டு காலம் சத்தமே இல்லாமல் ரசிகர்களை கவர்ந்த ஒருவர் தான் இன்றைய நமது பவளம். பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நிற்கும் அவரை நகைச்சுவை நடிகராகத்தான் பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவரது கலையுலக பின்னணி ஆச்சரியங்களின் குவியல். 

விருதுநகரை பூர்வீகமாக கொண்ட வி.கே.ராமசாமிக்கு சின்ன வயது முதலே நடிப்பில் ஆர்வம். ஆனால், அவரது குடும்பம் வியாபார குடும்பம் என்பதால் அதை கவனிக்கச் சொல்ல, வீட்டை விட்டு பலமுறை வெளியேறி நாடக குழுக்களில் வேஷம் கட்டி இருக்கிறார். தந்தையும் உறவினர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் அவருக்கு அணை போட முடியவில்லை. தனது சொந்த அண்ணனின் நாடக கம்பெனி தொடங்கி அன்றைய பிரபல நாடக குழுவான பாய்ஸ் கம்பெனி வரை பலவற்றில் நடித்திருக்கிறார், வி.கே.ராமசாமி.

ஒரு முறை, நாடகத்தில் கள்ளச் சந்தை வியாபாரி (1940, 1950களில் பெரு வியாபாரிகள், பண்ணையார்கள், செல்வந்தர்கள் எல்லாம் உணவு தானியங்களை பதுக்கி விற்பது போன்ற கதைகள் தான் அதிகமாக நாடகங்கள், சினிமாக்களாவது சகஜம்) வேடத்தில் 60 வயது பெரியவராக நடித்திருந்தார். அந்த நாடகத்தை பார்த்து இம்ப்ரஸாகிப் போன தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அந்த நாடகத்தை சினிமாவாக்க விரும்பி பேச்சு நடத்தியபோது, யாரோ ஒரு பெரியவர் தான் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் என்றே நினைத்திருக்கிறார். கடைசியில் மிக சிறு வயது பையன் என்பதை அறிந்து ஆச்சரியமாகிப் போயிருக்கிறார், ஏ.வி.எம். அந்த பையன் வி.கே.ராமசாமி.



அப்படியே 'நாம் இருவர்' என்ற பெயரில் அந்த நாடகத்தை படமாக தயாரித்தபோது பிளாக் மார்க்கெட் சண்முகம் என்ற அந்த 60 வயது வேடத்துக்கு வி.கே.ராமசாமியையே நடிக்க வைத்தார் ஏவிஎம். இதுதான் வி.கே.ராமசாமியின் முதல் திரைப்பட அறிமுகம். அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் நாயகனாக நடித்த அந்த படம் வெளியான ஆண்டு 1947. தனது முதல் அறிமுக படத்திலேயே 60 வயது கேரக்டரில் நடித்த வி.கே.ராமசாமிக்கு அப்போது வயது வெறும் 21 தான். 


அதன் பிறகு 55 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடர்ந்தது, அவரது திரைப் பயணம். ஆனால், சின்ன வயதுக்கேற்ற தோற்றத்தில் அவர் நடித்ததே இல்லை. தமிழ் திரையுலகில் டி.எஸ்.பாலையா, ரங்காராவ் இவர்கள் இருவரைப் போலவே வி.கே.ராமசாமியும் பருவ வயதிலேயே முதுமை வேடங்களை ஏற்று அதையே தொடர்ந்தவர்.



'நாம் இருவர்' படத்தை தொடர்ந்து எம்.என்.நம்பியார் ஹீரோவாக நடித்த 'திகம்பர சாமியார்'. சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி' என தொடர்ந்து வயதான பண்ணையார், கள்ளச்சந்தை வியாபாரி மாதிரியான வேடங்களே அவரை பின் தொடர்ந்து வந்தன. ஆனாலும் சலிக்கவில்லை. பண்ணையார், கள்ளச் சந்தை என்றால் வில்லத்தனம் வேண்டாமா? அப்படித்தான் அன்றைய கொடூர வில்லனாகவும் வி.கே.ராமசாமி நடித்தார்.



1960களுக்கு பின் நகைச்சுவை பிளஸ் குணச்சித்திரத்துக்கு மாறினார். அந்த வி.கே.ராமசாமி என்ற பிம்பம்தான் இப்போது வரை அனைவரின் மனதிலும் இருக்கிறது. குணச்சித்திர வேடத்துக்கு மாறிய பின் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ஜெயலலிதா என 1960களின் திரை பிரபலங்களுக்கு தந்தை அல்லது மாமனாராக வெளுத்து வாங்கி இருப்பார். சிலவற்றில் நகைச்சுவை, சிலவற்றில் சோகம், அவ்வப்போது வில்லன் கோஷ்டி என பலவித கேரக்டர் ரோலில் கலந்து கட்டி அடித்திருப்பார்.



நாகேஷ், மனோரமா, சோ மாதிரியான நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டுமல்ல கவுண்டமணி, செந்தில் காலத்திலும் காமெடியில் ஈடு கொடுத்திருப்பார். அடுத்த தலைமுறை நாயகர்களான கமல், ரஜினி, பிரபு, கார்த்திக், பாண்டிய ராஜன் என 1980, 1990களிலும் மாதவன், சிம்பு என 2000த்திலும் தொடர்ந்து நின்று விளையாடியவர். 1947ல் அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கத்துக்கு தந்தையாக நடித்தவர், 2000ம் ஆண்டுகளில் குஷ்பூவுக்கு தந்தை, ஜோதிகாவுக்கு தாத்தா என நடித்திருக்கிறார் என்றால் பாருங்கள்.



பட்டிக்காடா பட்டணமா, வீரபாண்டிய கட்டபொம்மன், மாட்டுக்கார வேலன்,  தர்மத்தின் தலைவன், கல்யாண ராமன், வருஷம் 16, அக்னி நட்சத்திரம், அரங்கேற்ற வேளை, டும் டும் டும் என வி.கே.ஆரின் 55 ஆண்டு கால படங்களின் லிஸ்ட் மிக நீளம்.


'மாட்டுக்கார வேலன்' படத்தில் "ஊருக்குள்ள நான் எவ்ளோ பெரிய வக்கீல். நான் செத்துப் போயிட்டேன்னு எவ்ளோ சின்ன செய்தியா போட்டிருக்கான்னு..."  அவர் பேசுற ஸ்டைலே தனி. வசனங்களும் கூட, சில ஸீனுக்கு ஏற்றவாறு அவரே சேர்த்துக் கொள்வதும் உண்டாம்.



1960களில் அடித்த அதே லூட்டியை 1980, 1990களில்  'ஆண்பாவம்' படத்தில் பாண்டியராஜனின் அப்பா வேடத்திலும் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் ஜனகராஜுடன் சேர்ந்து பலான படத்தை வீட்டில் ஸ்கிரீன் போட்டு பார்க்கும் பெரிய மனுஷன் கேரக்டரிலும்  'அரங்கேற்ற வேளை'யில் பிரபு -ரேவதியுடன் சேர்ந்து கலக்கும் நாடக கம்பெனி ஓனர் வேடத்திலும் அப்படியே பார்த்து ரசிக்கலாம். அதுதான் வி.கே.ராமசாமி. 'அருணாச்சலம்' படத்தில் ரஜினியின் வில்லன்களில் ஒருவர்..! 'வேலைக்காரன்' படத்தில் ரஜினிக்கு தாத்தா...!



ஆரம்ப கால நாடக நடிகர் என்பதால் அவரது குரல் மிகவும் தனித்தன்மையாக இருக்கும். அதோடு அவரது டயலாக் டெலிவரி முறையும் தனித்துவமானது. அதுதான் அவரது ஸ்பெஷல். நடிகர் மட்டுமல்ல, கதாசிரியர் தயாரிப்பாளர் என்ற வேறு பல முகங்களும் வி.கே.ராமசாமிக்கு உண்டு.

பிற்கால பிரபலங்கள் பலருடன் அவர்களது ஆரம்ப காலத்திலேயே அறிமுகமும் நட்பும் இருந்தது. அதில் சூப்பர் ஹிட் புராண படங்களின் இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் ஒருவர். அவருடன் இணைந்து 1958ல் 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அந்த படத்துக்கு கதாசிரியரும் வி.கே.ராமசாமி தான். அப்படியே, பின்னாளில் தனியாகவும் 15 படங்களை தயாரித்திருக்கிறார்.

ஒரு தயாரிப்பாளராக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர்,  வி.கே. ராமசாமி. அதற்கு முன் இரண்டு முறை திரையில் நுழைந்து சோர்ந்து போன எம்.ஆர்.ராதா நாடகங்களுக்கே திரும்பிய நிலையில், 1950களில் நாடகங்கள் நொடிந்து போக தொடங்கின. அவரது 'ரத்தக் கண்ணீர்' படமும் கமர்சியலாக சரியாக போகவில்லை. இந்த சமயத்தில் தான் 'நல்ல இடத்து சம்பந்தம்' மூலம் எம்.ஆர்.ராதாவுக்கு புது பாதையை வி.கே.ராமசாமி. அந்த படத்தின் கேரக்டர்தான் எம்.ஆர். ராதாவின் அக்மார்க்காகி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிசியான நடிகராக இருந்தார். இப்படியாக  வி.கே.ராமசாமி மூலம்  மூன்றாவது இன்னிங்சை எம்.ஆர்.ராதா தொடங்கியபோது அவரது வயது 51. ஆனால் வி.கே.ஆர். வயது 32.

சிவாஜி-பிரபு, முத்துராமன்- கார்த்திக், சிவகுமார்- சூர்யா என அடுத்தடுத்த தலைமுறைகளை பார்த்து 55 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த அவரை, "சினிமாவில் பிழைக்கத் தெரியாத மனிதர்..." என அவரிடமே சிவாஜி சொல்வாராம். உண்மையும் அது தான். 1960களின் பிற்பகுதியில் தான் ஓரளவுக்காவது வி.கே.ராமசாமி பிழைக்கத் துவங்கினார் என்பதே நிஜம்.

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

1 comment:

lavernepacey said...
This comment has been removed by a blog administrator.