தமிழ் திரையுலகில் மிக நீண்ட காலம் கலைப்பயணம் மேற்கொண்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 1917ல் நாடக நடிகராக நடிப்புலகில் நுழைந்து, 1937ல் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர். அன்றைய காலத்தில் எல்லாம் பெயருடன் ஊர் பெயரை சேர்த்துக் கொள்வது திரை பிரபலங்களின் வழக்கம். விருதுநகர் கே ராமசாமி, சிதம்பரம் எஸ் ஜெயராமன், திருச்சி லோகநாதன் மாதிரியான வரிசையில் சென்னைக்கு பெருமை சேர்த்தவர். ஆம் இவரது ஒரிஜினல் பெயர், மெட்ராஸ் ஆர். ராதாகிருஷ்ணன்.
எம்.ஆர்.ராதா என்ற பெயரை சொன்னதுமே ஒரு பிம்பம் நம்முடைய மனதுக்குள் வருமே? அது, இவரது 50 பிளஸ் வயது தோற்றம் தான். சின்ன வயதிலேயே நடிக்க வந்தாலும் 50 பிளஸ் வயதில்தான் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். காரணம், மேடை நாடகங்களுக்காகவே தன்னை ஒப்படைத்திருந்தார்.
அரசியல், கடவுள் மறுப்பு கொள்கை, துணிச்சல், சர்ச்சை, நாடகம் இப்படி பல வகைகளில் இவர் பற்றி ஏராளமாக எழுதலாம். மிகச் சிறந்த நடிகர், ஆனால் நிஜத்தில் நடிக்கத் தெரியாதவர். ராணுவத்தில் இருந்த இவரது தந்தை ரஷ்யாவில் உயிரிழந்த நிலையில், பத்து வயதிலேயே நடிக்க வந்து விட்டார்.
வீட்டில் கோபித்துக் கொண்டு, வெளியேறி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை நடிக்க வைத்தது, ஆலந்தூர் பாய்ஸ் நாடக கம்பெனி. பிரபல நடிகர்கள் பலருக்கும் நாடகம் அடிப்படையாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்த பின் அங்கு திரும்பிச் சென்றதில்லை. ஆனால், இவர் அந்த ரகம் இல்லை.
1917ல் துவங்கிய 20 ஆண்டு கால நாடக வாழ்க்கைக்கு பின் தனது 30ஆவது வயதில் முதன் முதலில் சினிமாவுக்கு வந்தார், எம்.ஆர்.ராதா. 1937ல் அறிமுகமாகி 'ராஜசேகரன் ஏமாந்த சோனகிரி', 'பம்பாய் மெயில்', 'சந்தன தேவன்', 'சத்யவாணி' என சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் நாடக உலகுக்கே திரும்பி விட்டார். முழுக்க முழுக்க ஊர் ஊராகச் சென்று மேடை நாடகம் போடுவதிலேயே ஆர்வம் காட்டினார். இவரது நாடகங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ரகங்கள். அதில் ஒன்று தான் 'ரத்தக் கண்ணீர்'. அதை சினிமாவாக்க விரும்பினார்.
இதற்காக, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து, தனது 45ஆவது வயதில் தமிழ் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார், எம்.ஆர்.ராதா. ஆனால், அந்த படம் பலராலும் பாராட்டி பேசப்பட்ட அளவுக்கு கமர்ஷியலாக பெரிய லாபம் ஈட்டவில்லை. இதனாலேயே, மேடை நாடகங்களில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார், எம்.ஆர்.ராதா.
ஆனால், 1950களில் ரசிகர்களிடம் சினிமாத் துறை பெரிய வரவேற்பை பெற்றிருந்ததால், மேடை நாடக கலை தடுமாற்றத்தில் இருந்தது. இதனால் சினிமா உலகுக்கே மீண்டும் திரும்பினார். அவருக்கு கை கொடுத்தவர்கள் வி.கே.ராமசாமி, ஏ.பி.நாகராஜன். இப்படியாக 51ஆவது வயதில், தமிழ் சினிமாவில் 3ஆவது இன்னிங்சை துவக்கினார், எம்.ஆர்.ராதா.
புதிய வளமான துவக்கத்தை ஆரம்பித்து வைத்த படம் 'நல்ல இடத்து சம்பந்தம்'. ஹீரோவான இவர் ஹீரோயின் சவுகார் ஜானகியை டார்ச்சர் செய்யும் வித்தியாசமான கேரக்டர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு எம்.ஆர்.ராதா காட்டில் அடைமழை கொட்ட தொடங்கியது. எம்.ஆர்.ராதா மொத்தம் நடித்துள்ள 125 படங்களில் 90% படங்கள், இந்த காலகட்டத்தில் நடித்தவை தான்.
வில்லனாக மிரட்டுவதாகட்டும், காமெடியாகட்டும், காமெடி கலந்த வில்லனாகட்டும் எம்.ஆர். ராதாவுக்கு நிகர் அவர் மட்டும்தான். திரைப்படங்களில் பாடல்களிலும் கூட நடித்திருக்கிறார். 'இருவர் உள்ளம்' (1963) படத்தில் 'புத்தி சிகாமணி பெத்த பிள்ளை...' பாடல் இவர் நடிப்புதான். எம்ஜிஆர், சிவாஜியின் கருப்பு வெள்ளை கால படங்களை எல்லாம் இவர் இல்லாமல் நினைத்து பார்க்கவே முடியாது.
சிவாஜியுடன் 'ஆலயமணி', 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்' என ஏராளம். 1962ல் வெளியான 'பலே பாண்டியா' படத்தில் சிவாஜியுடன் பாடி லூட்டி அடிக்கும் "மாமா மாப்ளே..." பாடலை இன்றும் பார்த்து ரசிக்கலாம். எம்ஜிஆருடன் 'பெற்றால்தான் பிள்ளையா', 'குடும்பத் தலைவன்', 'பாசம்', 'நீதிக்கு பின் பாசம்' என பெரிய லிஸ்ட் உண்டு.
இந்த இடை விடாத திரை ஓட்டம், 1967ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று வாய் தகராறு ஒன்றில் எம்ஜிஆரை துப்பாக்கியால் சுடும் வரை தொடர்ந்தது. அந்த சம்பவத்துக்கு பின், பெரிய அளவில் எம்.ஆர்.ராதாவுக்கு படங்கள் இல்லை. எல்லாம் முடிந்து 1974ல் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நடித்த 'சமையல்காரன்' மூலம் ரீ என்ட்ரி கொடுத்தாலும் சொற்ப எண்ணிக்கையிலான படங்களே வாய்த்தன.
எம்.ஆர்.ராதா இயற்கையிலேயே கோபம் மற்றும் துணிச்சல் அதிகம் உடையவர், வித்தியாசமானவர். ஊர் ஊராக மக்களிடமே நேரடியாக சென்று 5000 நாடகங்களுக்கு மேல் போட்டிருக்கிறார். மேடை நாடக உலகின் சூப்பர் ஸ்டார் இவர் ஒருவரே. ராமாயணத்தை கிண்டல் செய்து 'கீமாயணம்' என்ற பெயரில் இவர் போட்ட நாடகம் சர்ச்சையாகி தமிழக சட்டப் பேரவையில் நாடக தடை மசோதா போடும் வரை போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடைசி வரிசை ரசிகர் வரை வசனம் கேட்கும் வகையில் மிக சப்தமாக வசனம் பேசுவாராம். அதற்காக வெங்காயம், பழைய சோறு என அதிகமாக சாப்பிடுவாராம். அதே நேரத்தில் தனது நாடக கம்பெனி ஆட்களுக்கு நான் வெஜ் கொடுப்பதில் நல்லவர். சமையலிலும் வல்லவர். நாடக மேடையிலேயே பைக் ஓட்டுவது, ரசிகர்களுக்கு முதுகை காட்டியபடியே 15 நிமிடம் வரை இடைவிடாமல், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாத வகையில் வசனம் பேசுவது என கலக்கியவர்.
முதலிலேயே சொன்னது போல் இவர் பற்றி ஒவ்வொரு வகையிலும் ஏராளமாக எழுதலாம். இறப்பதற்கு முன்பு கூட, சிங்கப்பூர் மலேசியா என நாடகம் போட்டு விட்டுத்தான் திரும்பி இருந்தார்.
திராவிட இயக்கம், குறிப்பாக பெரியாரின் கடவுள் மறுப்பு நாத்திக கொள்கையில் சமரசம் இல்லாமல் கடைசி வரையிலும் மிகுந்த பிடிப்போடு இருந்தவர் எம்.ஆர்.ராதா. குழந்தைகளுக்கு பழனி, சிதம்பரம், திருப்பதி என வைப்பது போல் தனது மகளுக்கு ரஷ்யா என பெயர் வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எம்.ஆர்.ராதா மறைந்தது கூட பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதியில்தான் (1979ம் ஆண்டு).
நடிகர்கள் எம்.ஆர்.ஆர். வாசு, ராதாரவி, வாசு விக்ரம், நடிகைகள் ராதிகா, நிரோஷா... இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசுள்
(பவளங்கள் ஜொலிக்கும்)
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment