Monday 28 February 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள் -33

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத வசனங்கள் பல உண்டு. அவற்றை பட்டியலிட்டால் டாப் 10 ரகங்களுக்குள் இந்த வசனங்கள் நிச்சயமாக வரும். 

"சபாஷ்... சரியான போட்டி...", "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி...", "அண்டாக்கா கஸம் அபுக்கா குஸூம் திறந்திடு சீஸே..." இந்த வசனங்களுக்கு எல்லாம் சொந்தக்காரர், வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா. நம்பியார் காலத்துக்கு முந்தைய அரசர் கால கதை களங்களில் அதகளம் செய்தவர்.



கம்பீரமான உருவம், அசால்ட்டான பார்வை, கணீர் குரலில் மிக அலட்சியமான வசன உச்சரிப்பு, அட்டகாசமான வில்லத்தன சிரிப்பு. இப்படி வில்லனுக்கே உரித்தான இலக்கணத்தை வகுத்தவர் இவரே. இவரது ஹஹா ஹஹா ஹஹா.. என்ற வெடிச் சிரிப்பே பயங்கரமானது. கேட்டாலே அச்சமூட்டும் ரகம்.



படத்தில் எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போடும்போது யார் ஜெயிப்பார் என்ற பரபரப்பை கூட்டும் விதமாகவே இருக்கும். இணையான வில்லன் ஒருவர் இருந்தால் தான் ஒரு ஹீரோவுக்கு சிறப்பு. அது போன்ற ஒரு வில்லன் பி.எஸ்.வீரப்பா.



கொங்கு மண்டலத்தில் காளைகளுக்கு பெயர் பெற்ற காங்கேயத்தில் பிறந்து பொள்ளாச்சியில் தாத்தா வீட்டில் வளர்ந்த பி.எஸ்.வீரப்பா, சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஒரு நாடகத்தை பார்க்க வந்த கே.பி.சுந்தராம்பாள், இவரது நடிப்பை பாராட்ட, அவரிடமே சிபாரிசு கடிதம் பெற்று சென்னை வந்து சினிமாவில் அறிமுகமானார் பி.எஸ்.வீரப்பா. இவரை அறிமுகம் செய்தவர் அன்றைய பிரபல இயக்குநரான வெள்ளைக்காரர் எல்லீஸ் ஆர்.டங்கன்.


(எல்லீஸ் ஆர்.டங்கன் பற்றி அறிய...  http://thileeban81.blogspot.com/2020/08/15.html?m=1)


வீரப்பாவின் முதல் படம் 1939ல் வெளியான 'மணிமேகலை'.


இதே காலகட்டத்தில் குட்டி குட்டி வேடங்களில் தலைகாட்டிய எம்ஜிஆருடன் அறிமுகம் ஏற்பட்டு அது மிக நீண்ட கால நட்புறவாக மாறியது. நாயகனாக எம்ஜிஆர் நடிக்க துவங்கிய பின் அவருடன் ஏராளமான படங்களில் பி.எஸ்.வீரப்பா நடித்திருக்கிறார்.


தமிழின் முதல் முழு நீள கலர் படமான 'அலிபாபாவும் 40 திருடர்களும்', எம்ஜியாரின் சொந்த தயாரிப்பான 'நாடோடி மன்னன்', எம்ஜியாரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி தயாரித்து இயக்கிய 'அரச கட்டளை', 'சக்கரவர்த்தி திருமகள்', 'மகாதேவி', 'மருதநாட்டு இளவரசி', 'கலையரசி', 'மன்னாதி மன்னன்', 'விக்கிரமாதித்தன்' என எம்ஜிஆருடனான பி.எஸ்.வீரப்பாவின் பட பட்டியல் மிக நீளம். 



நாடோடி மன்னனில் எல்லாம் இவர் மிரட்டியிருப்பார். "மார்த்தாண்டனாம் மன்னனாம்...", "சொன்னாலும் புரியாதடா மண்ணாளும் வித்தை...", "நாடாம் நாடு... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்..."


இந்த வசனங்களை எல்லாம் இவரது உச்சரிப்பில் கேட்பதே மிரட்டல் ரகம். இதுபோல 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் முகத்தில் முழு நீள வெட்டுத் தழும்புடன் மிக கொடூரமான திருடனாகவே வாழ்ந்திருப்பார்.



சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார், பி.எஸ்.வீரப்பா. ஜெமினியுடன் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் பத்மினி, வைஜயந்திமாலா இருவரின் போட்டி நடனத்தின் நடுவே இவர் பேசும் வசனம் தான் தமிழ் சினிமா உலகில் சாகா வரம் பெற்ற "சபாஷ் சரியான போட்டி..." 


1960களுக்கு பின், குடும்ப கதை படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'ஆலயமணி', 'இரு துருவம்', 'ஆனந்த ஜோதி', 'மீனவ நண்பன்', 'பல்லாண்டு வாழ்க' எல்லாம் அந்த ரகங்கள் தான். அந்தந்த கால கட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறை நாயகர்களுடனும் திரைப் பயணம் செய்தவர். ஆனாலும் அரசர் கதை படங்கள் தான் பி.எஸ்.வீரப்பாவின் பெயரை கூறுபவை.



எம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்ல ரஜினி, கமலுடன் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' (1979) விஜயகாந்துடன் 'கரிமேடு கருவாயன்' (1986) என நடித்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என ஆறு முதல்வர்களுடன் நல்ல அறிமுகம் உடையவர்.



நடிப்புடன், பி.எஸ்.வி. பிக்சர்ஸ் என்ற பெயரில் ஏராளமான தமிழ், இந்தி படங்களையும் தயாரித்திருக்கிறார். 1960களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குநர் கே.சங்கருக்கு முதன் முதலில் அடையாளம் பெற்றுத் தந்த படம் 'ஆலயமணி'. சிவாஜி கணேசன் நடித்த அந்த படத்தை தயாரித்தவர், இவர்தான். இந்த படத்தை இந்தியிலும் தயாரித்தார்.



தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருந்த ராமராஜன் இவரது அறிமுகம் தான். ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் துணை இயக்குநராக திரையுலகில் போராடிக் கொண்டிருந்த ராமராஜனை இயக்குநராக உயர்த்தியவர் பி.எஸ்.வீரப்பா. முதன் முறையாக ராமராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய 'மண்ணுக்கேத்த பொண்ணு' (1985) திரைப்படம் இவரது தயாரிப்புதான். பிரபல நடிகராகும் முன் பல வெற்றி படங்களை ராமராஜன் இயக்கி இருக்கிறார் என்பதும் இந்த இடத்தில் கூடுதல் தகவல்.

1958 முதல் 1991 வரை ஏராளமான தமிழ், இந்தி படங்களை பி.எஸ்.வீரப்பா தயாரித்திருக்கிறார். அன்றைய பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இவரது நெருங்கிய நண்பர். இவரது வில்லன் சிரிப்புக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நிரந்தர ரசிகர். தமிழ் திரையுலகில் ஏராளமான வில்லன் நடிகர்கள் இருந்தாலும் பி.எஸ்.வீரப்பாவின் "சபாஷ்... சரியான போட்டிக்கு..." முன் யாருமே போட்டி இல்லை என்பதே உண்மை.

(பவளங்கள் ஜொலிக்கும்)

No comments: