Sunday 11 December 2022

பாபா... ரீ ரிலீஸ்... அரசியல்...

இருபது வருஷத்துக்கு பிறகு 'பாபா' ரீ ரிலீஸ். ரஜினி ரசிகர்கள் கிட்ட அவரோட படங்களோட பெயர்கள  கேட்டா 'பாபா' பெயரை சொல்லுவாங்களோ இல்லையோ, ரஜினி ஹேட்டர்ஸ் கண்டிப்பா 'பாபா' பெயர சொல்வாங்க.



அது பிளாப் படம்னு அவங்க கணக்கு. அந்த படத்தோட அவரோட சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போச்சின்னு அப்போ  கொண்டாடுனவங்க கூட உண்டு. ஆனா இன்னைக்கும் அவருதான் சூப்பர் ஸ்டார். ரஜனி படத்தில வாய்ப்புன்னா இந்த ஹேட்டர்ஸ்தான் மொத ஆளாவும் நிப்பாங்க...!!!



'குரு சிஷ்யன்' படத்தில "நாற்காலிக்கு சண்டை போடும்..."னு பாடி அரசியல்ல மெதுவா எட்டிப் பார்த்தவர, 'அண்ணாமலை', 'முத்து' படத்தில பேசுன வசனங்களை ஜெயலலிதாவுக்கு எதிரானது மாதிரியே கொண்டாந்து கடைசியில 'பாட்ஷா' வெற்றி விழாவில அவர நேரடியாவே எதுக்கிற அளவுக்கு கொண்டாந்து விட்டாங்க.


அப்படியே 1996, 1998 தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாய்சுன்னு,  இப்போதைய விஜய் மாதிரியே அரசியல் ஜர்னலையும் விடாம பிடிச்சிட்டு இருந்த ரஜினிக்கு பாமக தான் ரெட் கார்டு போட்டுச்சி, அது மூலமா அந்த கட்சியும் பப்ளிசிட்டி தேடிச்சி.



ரஜினி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதா? ரஜினிக்கு 14 கேள்விகள்னு ஆரம்பிச்சி அன்றைய அரசியல் பரபரப்புக்கு தீனி போட்ட கட்சி பாமக. 'பாபா' படப்பெட்டிய தியேட்டர்ல இருந்து (அப்போ பிலிம் சுருள்தான் சேட்டிலைட் டிஜிட்டல் கிடையாது) தூக்கிட்டு ஓடுனது வரை அட்ராசிட்டி நடந்திச்சி. 


கடுப்பான ரஜினி, 'ஜக்குபாய்'னு ஒரு படத்துக்கு பூஜை போட்டு "இறைவா எதிரிகளை நான் பார்க்கிறேன். துரோகிகளை நீ பார்த்துக் கொள்"னு பஞ்ச் டயலாக்கோட விளம்பரப் படுத்தினாரு. அப்புறமா அந்த படமே டிராப் ஆயிடுச்சி. பாபா படமும் பெரிசா போகலை.


2004 நாடாளுமன்ற தேர்தல்ல பாமக போட்டியிடும் தொகுதிகளில் தோக்கணும்னு கூட ரஜினி அறிக்கை விட்டார். ஆனா 5 தொகுதிகளிலயும் பாமக ஜெயிச்சிது. 'ஜக்குபாய்' டிராப், 'பாபா' தோல்வின்னு ரஜினியோட அரசியல் ஆசைக்கு அப்போ பிரேக் விழுந்தது. 



ரஜினிக்கு ஜனரஞ்சக படம்  மட்டுமே குடுக்கனும்னு பாடம் குடுத்தது பாபான்னு சொல்லலாம். சினிமா ரசிகனா பார்த்தா, அதில அவரு கெட்டப்பே அன்னியமா இருந்திச்சி. கதை (ரஜினி)யும் குழப்பம். படத்தோட வசனம் மட்டும் எழுத்தாளர் எஸ்.ரா. 'பாட்ஷா'ன்னு பிரியாணி பண்ணுன டைரக்டர வச்சி 'பாபா'ன்னு பஞ்சாமிர்தம் பண்ண வச்சா எப்பிடி இருக்கும்? ஆக, தீவிர ரஜினி ரசிகர்களை தாண்டி படம் ரீச் ஆகலை. இதுதான் உண்மையான காரணம். இதுக்கு நடுவில பாபா டி சர்ட், பாபா தொப்பின்னு லதா ரஜினி பண்ணுன தனி மார்க்கெட் அட்ராசிட்டியும் அதிருப்திக்கு காரணம்.


ரஜினி பிராண்ட் அதிரி புதிரி வெற்றி  இல்லைங்கிறதால பலரும் 'பாபா' படத்த போஸ்ட் மார்ட்டம் பண்ணி இப்ப வரைக்கும் பேசிட்டிருக்காங்க. ரஜினிய வேற மாதிரி எதிர் பார்த்த ரசிகர்களால, பாபா, ராகவேந்திரா மாதிரி ஏத்துக்க முடியல. அவரோட 100வது படமான ராகவேந்திராவும் வசூல் சாதனை படம் கிடையாது.



அடிக்கடி இமயமலை பயணம் போகிற ரகசியத்தை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சொல்லனும்கிற எண்ணத்திலதான் மகா அவதார் பாபா பற்றி அந்த படத்தை சொந்த தயாரிப்பாவே ரஜினி எடுத்தார். மிக அதிக எதிர்பார்ப்போட 17 கோடிக்கு விற்பனையாகி 13 கோடிய மட்டுமே வசூலிச்சதால தயாரிப்பாளரா அந்த 4 கோடி இழப்பை ரஜினி திரும்ப குடுத்தார். அதே நேரத்தில கோவை மண்டலத்தில மட்டும் பாபா வசூல் ஒண்ணரை கோடி. இதை மூணு வருஷம் கழிச்சி 2005ல ரஜினியோடட 'சந்திரமுகி' தான் முறியடிச்சிது.



ஆக, ரஜினியோட அரசியல் ஆசைக்கு பிரேக் போட்ட படம், இப்போ அரசியலுக்கு முழுக்கு போட்ட பிறகு மறுபடியும் ரிலீசாகுது. ஆனா இப்பவும் ரஜினி ஹேட்டர்ஸோட விமர்சனம் குறையல. அதுதான் இன்னமும் ரஜினியோட மவுசு குறையலங்கிறதுக்கும் உதாரணம்.

#நெல்லை_ரவீந்திரன்

No comments: