Thursday 15 December 2022

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளஙகள் -38

30 வருடங்களுக்கு முன்பு ரேடியோவே கதியென கிடக்கும் வானொலி நேயராக இருந்தால் இவரை கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. சென்னை, திருச்சி என தமிழக வானொலி நிலையங்களில் பழைய பாடல்கள் ஒலிபரப்பாகும்போது இந்த பெயரும் நிச்சயம் ஒலிக்கும்.

இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது துவங்கி ராஜா, ராஜேஸ்வரி சண்முகம் மாதிரியான அறிவிப்பாளர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த பெயரை சொல்லியிருப்பார்கள்னு அவர்களுக்கே தெரியாது. தென் தமிழகத்தில் 1980களின் வானொலி ரசிகர்களுக்கு இது தெரியும். அந்த பெயர் கண்டசாலா.



அடுத்ததாகபாதாள பைரவி படத்தில் கண்டசாலா பாடும் பாடல் என்ற அறிவிப்பும் அதைத் தொடர்ந்து வரும் "அமைதி இல்லா என் மனமே..." பாடலும் 80ஸ் வானொலி நேயர்கள் காதில் இன்றும் ஒலிக்கும்.

1950, 1960களில் இந்திய திரையுலகில் கண்டசாலா மிகவும் பிரபலம். இவர் பின்னணி பாடகர் கம் இசையமைப்பாளர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த கண்டசாலா தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் கோலோச்சியவர். சங்கீதத்தில் முறைப்படி தேர்ந்தவர். 



தெலுங்கில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மன தேசம்' படம்தான் ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ஆருக்கும் முதல் படம்

தமிழில் சுமார் 20 படங்களுக்கு கண்டசாலா இசையமைத்திருக்கிறார். திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் இவரிடம் உதவியாளராக இருந்தவர். மாயாபஜார், பாதாள பைரவி, கள்வனின் காதலி, கல்யாணம் பண்ணிப்பார்... இதெல்லாம் கண்டசாலா இசையமைத்தவற்றில் குறிப்பிடத்தகும் தமிழ் படங்கள்.

இன்றளவும் ரசிகர்களை ஈர்க்கும் "கல்யாண சமையல் சாதம், காய்கனிகளும் பிரமாதம்..."  பாடலுக்கு இசை கண்டசாலாதான்.



ஆனால், பின்னணி பாடகராகத்தான் கண்டசாலாவை தமிழ் சினிமா அறியும். 1950 துவங்கி 1960கள் வரை ஏராளமாக பாடி இருக்கிறார். ஏஎம் ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் கலந்த ஒரு குரல் இவருக்கு. இவரது வசீகர குரலுக்காக 'கான கந்தர்வன்' பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என திராவிட மொழிகள் அனைத்திலும், இந்தியிலும் பாடி இருக்கிறார் கண்டசாலா. பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசீலா, எஸ்.பி.பி போன்ற பிரபலங்களுக்கு ஆதர்ச குரு.


"உலகே மாயம் வாழ்வே மாயம் உலகில் நாம் காணும் சுகமே மாயம்..."

"முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக..."

"உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா சல்சா  செய்யடா..."

"ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா..."

'அமைதியில்லா தென் மனமே..."

இது போன்ற ஹிட் பாடல்கள் பல கண்டசாலா பாடியவை தான். 1960களில் திரைப்பட பாடல்களின் இசைத் தட்டுக்களை (ரிக்கார்டுகள்) பெரும்பாலும் பிரபல இசை நிறுவனமான ஹெச்எம்வி தான் வெளியிடும். அந்த நிறுவனத்தின் ஆஸ்தான பாடகராக இருந்தவர் கண்டசாலா. ஹெச்எம்விக்காக தனி இசை ஆல்பங்களையும் பண்ணி கொடுத்திருக்கிறார்.



திருப்பதி கோயிலின் ஆஸ்தான பாடகராகவும் இருந்தவர் கண்டசாலா. பகவத் கீதை பற்றி கண்டசாலா பண்ணிய ஆல்பம் திருப்பதி கோயிலில் ஒலிப்பது வழக்கம். 

'ஜகதேசா வீருணி கதா' என்ற தெலுங்கு படத்தின் சுமார் 7 நிமிட நீள பாடலான "சிவ சங்கரி சிவாநந்த லஹரி..." என்ற மிக பிரபலமான இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை கலந்த ஒரு சிக்கலான பாடலை ஒரே டேக்கில் பாடியவர் கண்டசாலா. புராண, இதிகாச, பாகவதர் டைப் படங்களில் இருந்து குடும்பக் கதைகளுடன் துவங்கிய ஜனரஞ்சக சினிமாவின் மூத்த  பின்னணி பாடகர் என்ற அவரை சொல்லலாம்.

பழம்பெரும் பாடகர் கண்டசாலாவின் பிறந்த நாள் நூற்றாண்டு (4-12-2022) சமயத்தில் அவருக்கான அஞ்சலி இந்த பதிவு

(பவளங்கள் ஜொலிக்கும்)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: