Monday 25 July 2011

பயம்

சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்த மதிய வேளை.

தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலில் ஜன்னல் ஓர இருக்கை கிடைத்தது. ரெயில் புறப்பட்டதும் எதிர் காற்றின் மிதமான வருடலால் சூரியனின் வெம்மை சற்று தணிந்தது போல இருந்தது. பயணத்தின் போது கண்ணயரும் பழக்கத்துக்கு நான் ஆட்படவில்லை.

ரெயில் பெட்டியில் என்னோடு பயணித்த சக பயணிகளை ஒவ்வொருவராக கவனித்தேன். எதிர் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன், என்னை கவர்ந்தான். அவனது தோற்றத்தைப் பார்த்தால் சாதாரண பயணி போல தெரியவில்லை. அவனுடன் யாரும் இல்லை என்றும் உணர்ந்தேன். அவனது கண்களை உற்று நோக்கியபோது பய ரேகைகள் அதில் காணப்பட்டன.

பயம். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒளிந்து கிடக்கிறது. உறுப்புகளைப் போலவே, பயமும் ஒரு அங்கமாக உடம்போடு ஒட்டியே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயம். பயத்தின் பெயர்கள் மாறலாம். ஆனால், பயம் என்பது பயம் தானே!

சிறு வயதில் நிலாச் சோறு ஊட்டும் போதே, ஒவ்வொருவருக்கும் பயமும் சேர்த்தே ஊட்டப்படுகிறது. சிறுவர்களின் கதைகள் அனைத்துமே பயத்தையே பேசுகின்றன. பயத்தை மையமாக கொண்ட பேய், பிசாசு கதைகளை பகிர்ந்து கொள்வதில் சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகம். மந்திரவாதி கதைகளும் பயத்துக்கு அடித்தளம் போட்டு வைக்கின்றன. ஹாரிபாட்டர் வரிசை மந்திர கதைகளில் சிறுவர்கள் வசமாகி கிடப்பதில் ஆச்சரியம் இல்லை.

பயத்தை வெல்ல முடியாது. அதை ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம். ஒரு சில பயங்கள், வயது ஏற ஏற தானாகவே மறைந்து விடும்.

பகல் நேரத்தில் சாதாரணமாக தோன்றும் பூனை கூட, இரவில் பயமுறுத்துகிறது. விளக்கு ஒளியில் மின்னும் நாய், மாடுகளின் கண்களும் பயத்தை உண்டாக்குகின்றன.

இந்த சிறுவனை பார்க்கும்போது வீட்டில் இருந்து ஓடி வந்தவனாக இருக்கலாம் என தெரிகிறது. உலகில் உலவிக் கொண்டு இருக்கும் காணாமல் போன, தொலைந்து போன கூட்டத்தில் இவனும் ஒருவனா?
பயத்தை விட மிகவும் வேதனை தருவது, காணாமல் போவது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சிறு வயதில் நானும் காணாமல் போய் இருக்கிறேன்.

அது ஒரு கோடைக் காலம். 10&ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. நான் எதிர்பார்த்தபடியே இரண்டு பாடங்களில் தோல்வி. ஆனால், வீட்டில் இதை எதிர்பார்க்கவில்லையே? நிச்சயமாக எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

என்ன செய்யலாம்? தேர்வு முடிவு தெரியும் முன், வீட்டை விட்டு காணாமல் போவதே சிறந்தது என முடிவு செய்தேன். வீட்டின் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் போன்ற கடுமையான வரையறைகளும் என்னை தொலைந்து போகத் தூண்டின.

தொலைந்து போவதென்றால் தெரிந்தவர்கள் யாரும் இல்லாத கண் காணாத இடத்துக்கு செல்வதே உசிதமானது. கண் காணாத இடத்துக்கு செல்வதாலேயே காணாமல் போவது என்ற பெயர் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

என்னை போன்றவர்களுக்காகவே, கெட்டும் பட்டணம் சேர் என சொல்லி வைத்திருப்பார்கள் போல. அவர்களுடைய கூற்றை பொய்யாக்காமல் சென்னை செல்ல தீர்மானித்தேன். கையில் கொஞ்சம் பணத்துடன் சென்னை பயணம் தொடங்கியது.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் சென்னையை அடைந்தேன். அப்படியே, கடற்கரை நோக்கி எனது கால்கள் சென்றன. நினைவுகளோ வீட்டை நோக்கி சென்றன.

ஏகாந்தமான நிலையில் இருந்து கடற்கரை போலவே எனது நிலைமை இருந்தது. ஆனால், உள்ளமோ கடல் அலைகள் போல கொந்தளிப்பதும் அடங்குவதுமாக மாறிக் கொண்டிருந்தது.

வீட்டில் என்னை தேடத் தொடங்கி இருப்பார்களா? காலையில் தான் தேடுவார்களா? யாரிடம், எங்கு முதலில் தேடுவார்கள்? எப்படி தேடுவார்கள்? பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் போலவே விடை தெரியாத கேள்விகள் மனதில் கும்மாளமிட்டன. மனக் குழப்பத்தினால் தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலையில் கடற்கரையும் அதன் அருகில் நீண்டு சென்ற சாலையும் பரபரப்பாகின. சென்னையின் புதிய பரபரப்பை கண்டு மனம் பிரமிப்பில் ஆழ்ந்தது. இந்த ஜனத்திரளுக்குள் மீண்டும் ஒருமுறை காணாமல் போய் விடுவேனோ என்ற பீதியும் சேர்ந்து கொண்டது. கண்ணெதிரே தோன்றும் ஒவ்வொருவரும் பயத்தை ஏற்படுத்துவதாகவே தோன்றியது.

திருவல்லிக்கேணி நோக்கி எனது கால்கள் பயணித்தன. பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் பிரமாண்டத்தில் மெய் மறந்து நின்றேன்.

அந்த கோவிலுடன் தொடர்புடைய பாரதியார், சுவாமி விவேகானந்தர் நினைவில் வந்து சென்றனர். அவர்களும் கூட, நாடோடியாக உலகை சுற்றித் திரிவதில் விருப்பம் கொண்டவர்கள் தானே. நானும் அவர்களைப் போல் ஆவேனோ? நாடோடியாக சுற்றித் திரிவேனோ? நினைவலைகள் தாலாட்ட கோவில் பிரகாரத்தில் கண்ணயர்ந்தேன்.

பாரதி, விவேகானந்தர் மட்டுமல்ல அம்மா, அப்பா, அண்ணன், அக்காள் என ஒவ்வொருவராக வந்தனர். தூக்கம் கலைந்தது. இரவு நெருங்கியதும் மீண்டும் கடற்கரை பக்கமாக ஒதுங்கினேன்.

எப்போதுமே, உலகம் முழுவதும் காணாமல் போன ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. காணாமல் போகும் நபர், துறவியாகவோ, ஞானியாகவோ, சமூக விரோதியாகவோ, பித்தனாகவோ, சூதாடியாகவோ அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் பெரும் பணக்காரனாகவோ மாறலாம். அதுபோன்று நானும் மாறுவேனோ?
சிந்தனைகளின் அலைக்கழிப்பில் தூக்கம் வரவில்லை. இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தன. மெரினா கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை என எனது நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அன்று கோடை வெயிலுக்கேற்ற இதமான கடற்காற்று வீசிக் கொண்டிருந்தது. கடற்கரை மணலில் புரண்டு கொண்டிருந்தபோது, அம்மா சமைத்து வைத்த சாம்பார் வாசம் என்னை சுற்றி வருவதை உணர்ந்தேன்.
அம்மிக் கல்லில் விழுதாக மசாலா அரைத்து எனது அம்மா சமைக்கும் கறிக் குழம்பும், கருவாடு குழம்பும் ஊரையே சுண்டி இழுக்கும். சாம்பார் தாளிக்கும் வாசமும் சப்தமும், பசியற்ற வேளையிலும் சங்கீத தாலாட்டும்.

அப்பாவின் பாசம், அண்ணனின் நேசம், அக்காளின் அரவணைப்பு. சிந்தனைகளின் கொந்தளிப்பால் கண்களில் நீர் பெருகி காது மடல்களில் வழிந்தது. குழப்பம் அதிகமான நிலையில், உடனடியாக வீட்டுக்கு செல்ல மனது துடித்தது.

கையிலோ பணம் இல்லை. மீண்டும் ஒரு நாள் சுற்றித் திரிந்த நிலையில், ஊரில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஒன்று மெரினா கடற்கரையில் நிற்பதை கவனித்தேன். யாராவது தெரிந்தவர்கள் இருக்கலாம் என்ற ஆவலினால் அருகே சென்று பார்த்தேன்.

எனது அண்ணனுடன் பள்ளியில் படிக்கும் பாபு என்ற அண்ணனின் தந்தையை கவனித்தேன். எனது உயிர் திரும்பியது போல உணர்ந்தேன். அவரிடம் சென்று, கண்களில் நீர் வழிய எனது நிலைமையை கூறினேன். சுற்றுலா ஏற்பாடு செய்தவருடன் அவர் பேசினார். அந்த பேருந்தில் எனக்கும் ஒரு இடம் அளித்தனர்.

ஐந்து நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியபோது புதிய இடத்துக்கு வந்தது போல உணர்வு கண நேரம் தோன்றியது. சமையலறையில் அம்மா இருந்தார். எனது கண்களையும் தோற்றத்தையும் பார்த்தே எனது நிலைமையை உணர்ந்திருப்பார் போலும். ஒரு தட்டில் சூடாக சாதமும், சாம்பாரும் போட்டு எடுத்து வைத்தார்.

ஆனால், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்பா, அண்ணன், அக்காள் இப்படி அனைவருமே! வார்த்தைகளை விட மவுனத்துக்கு வலிமை அதிகம் என்பதை உணர்ந்தேன். சொற்களால் திட்டி இருந்தாலோ, கைகளால் அடித்திருந்தாலோ இந்த அளவுக்கு வலி எனக்கு ஏற்பட்டிருக்காது. அவர்களின் மவுனம் ஏற்படுத்திய வலி என்னை உருக்கியது.

அன்று இரவில் அண்ணனும், அக்காளும் வந்து சொன்னார்கள். ஐந்து நாட்களாக வீட்டில் யாருமே தூங்கவில்லையாம். என்னை காணாமல் தவித்ததை பற்றி கூறினார்கள்.

தொலைந்து போவது என்பது தனி நபரின் துயரம் மட்டுமல்ல. அது பலரையும் பாதிக்கும் பெரிய துன்பம். விபத்தை விட பெரிய வலியை ஏற்படுத்துவது, அது.

ஊரை விட்டு தொலைந்து வேறு ஊர்களில் வேறு பெயர்களில் வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் துயரம் மிகுந்தவை. அவர்களின் கடை விழியில் பிரிவின் துயரம் இழையோடிக் கொண்டு இருக்கும்.
இந்த கனத்த நினைவுகளுடன் ரெயிலில் எதிரில் இருந்த சிறுவனுடன் பேசத் தொடங்கினேன்.

ஏனெனில், சாவை விடவும் தொலைந்து போவது என்பது பெருந்துன்பம். சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமல்ல. அவரை சார்ந்தவர்களுக்கும்!

= வை.ரவீந்திரன் 

No comments: