Monday 25 July 2011

சுமை தாங்கி


= வை.ரவீந்திரன் 


தெரு முனையை தாண்டி வீட்டிற்குள் ரவி நுழையும் முன்பே, லேசான விசும்பல் ஒலி வரவேற்றது. சந்தேகமே இல்லை. அது, அனுசுயாவின் குரல் தான். கூடவே, அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் அகல்யாவின் குரலும் கேட்டது. இந்த முறை என்ன பிரச்சினையோடு வந்திருக்கிறாளோ? யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தான், ரவி.

அனுசுயா, ரவியின் தங்கை. திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு மாதம் கூட, முழுமையாக கணவன் வீட்டில் இருந்தது இல்லை. ஒவ்வொரு முறை கணவன் வீட்டில் இருந்து வரும்போதும் அவளையும் அவளுடைய கணவன் முரளியையும் சமாதானப்படுத்தி அனுப்புவதே ரவிக்கும் அவனது மனைவி அகல்யாவுக்கும் முழு நேர வேலையாகி விட்டது.

அனுசுயா பிறந்த சில ஆண்டுகளிலேயே பெற்றோரை பறி கொடுத்து விட்டாள். அப்போது, ரவி வளர்ந்து பெரியவனாகி இருந்ததால் அனுசுயாவுக்கு அவனே தாயுமானவனாக மாறினான். அதில் இருந்து ரவியின் உலகம் அனுசுயா. அதுபோல, அனுசுயாவின் உலகம் ரவி. தாய், தந்தையரை சரியாக அறிந்திராத அவளுக்கு அண்ணன் ரவி தான் எல்லாமுமாக இருந்தான். குடும்பப் பொறுப்பை தோளில் சுமந்ததாலேயே, இளமையிலேயே பக்குவமும் முதிர்ச்சியும் ரவிக்கு தானாகவே அமைந்து விட்டன.

தங்கை மீது பாசத்தை கொட்டிய ரவி, அவளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தான், பட்டப்படிப்பை முடித்த கையோடு அவளுக்கு வரன் பார்க்க தொடங்கிய போது தான் பிரச்சினை முளைத்தது. தன்னோடு கல்லூரியில் படித்த ஒரு மாணவனை காதலிப்பதாக அனுசுயா கூறியபோது ரவி அதிர்ச்சி அடைந்தான். அதுவரை, தனக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தங்கையின் பாசத்தில் பங்கு கொள்ள வேறொரு நபர் நுழைந்ததை கண்டு சற்றே கலக்கமுற்றான்.

வாழ்க்கை விதியில் பெண்ணும் நெற்கதிரும் ஒரே இனம் தானே! நாற்றங்காலில் வளர்ந்து நிற்கும் நெல் நாற்றுக்களை எடுத்து வயலில் நடுவது போலவே, வீட்டில் வளர்ந்து நிற்கும் இளம் பெண்களும் புகுந்த வீட்டில் வாழ்க்கையை தொடருபவர்கள் தானே!

மனதை ஒரு வழியாக தேற்றிக் கொண்டு தங்கையின் மனதை கவர்ந்த அந்த மாணவ நண்பன் குறித்து விசாரிக்கும் முயற்சியை ரவி தொடங்கினான். அவனுக்கு கிடைத்த தகவல்கள் எதுவும் திருப்திகரமாக இல்லை.

முரளி, அவனது பெயர். சரியான வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றித் திரிகிறான் என்பது ரவியிடம் சிலர் கூறிய தகவல். அதே நேரத்தில், அவனது குடும்பப் பின்னணியை பற்றி விசாரித்தபோது அந்த அளவுக்கு மோசமாக இருக்கவில்லை.

ஆனாலும், தனது தங்கை அனுசுயாவிடம் பல்வேறு விஷங்களையும் எடுத்துக் கூறினான். காதலுக்குத் தான் கண்கள் கிடையாதே! செம்புலப் பெயல் நீர் போல விழுந்த இடத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல மாறுவதற்கு பெயர் தானே காதல். இறுதியில் காதல் வென்றது.

தனது சக்திக்கு ஏற்ற வகையில் திருமணத்தை சிறப்பாகவே ரவி செய்து முடித்தான். இந்த இடத்தில் அகல்யா பற்றி கூறுவது மிகவும் முக்கியம். ஏனெனில், சுக துக்கங்களில் முழுமையாக பங்கு பெறும் சக தர்மினியாக அவள் வாய்த்தது ரவி செய்த பூர்வ ஜென்ம புண்ணியம்.

தனது குடும்பத்திலேயே பல்வேறு இக்கட்டான நிலைமைகளை கண் கூடாக பார்த்த அனுபவம் அகல்யாவுக்கு உண்டு. அதனால், ரவியின் நிலைமையை நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். ரவியின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் பக்க பலமாகவே இருந்து வந்தாள். நல்ல தங்காள் கதையில் வரும் அண்ணன் மனைவியை போன்றவள் அல்ல, அவள்.

ஒவ்வொரு முறை தாய்வீட்டுக்கு அனுசுயா வரும்போதும் ‘தாயினும் சாலப் பரிந்து ,,,’ என்பதற்கு ஏற்ப தாயைப் போலவே அவளை அகல்யா பேணிப் பாதுகாத்தாள்.

திருமண சடங்குகளின் போது, மண்டபத்தில் பொய்க் கோபத்துடன் சென்ற மாப்பிள்ளையை ரவி சமாதானப் படுத்தி அழைத்து வந்தான். திருமணச் சடங்குகளில் அதுவும் ஒன்று. ஆனால், அன்றை தினத்தில் இருந்து மாப்பிள்ளையையும் தங்கையையும் சமாதானப்படுத்துவதே ரவியின் முழு நேர வேலையாகிப் போனது தான் சோகம்.

இப்போது கூட ஏதோவொரு பிரச்சினைக்காகவே, அனுசுயாக வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்பதை ரவி புரிந்து கொண்டான். அனுசுயாவை ஆறுதல் படுத்தும் மனைவி அகல்யாவை நினைத்து மனதுக்குள் பெருமிதம் அடைந்தாலும், இப்போது முளைத்துள்ள பிரச்சினை என்னவாக இருக்கும் என்ற யோசனையே மேலோங்கியது.

இரவு நேர சாப்பாட்டுக்கு பிறகு, அனுசுயாவிடம் மெதுவாக விசாரிக்க ஆரம்பித்தோம். இது போன்ற குடும்ப பிரச்சினைகளை அலசி ஆராய ஏற்ற நேரம் அது தானே? மெல்லிய விசும்பலுடன் பேசத் தொடங்கினாள், ரவியின் அருமைத் தங்கை.

எந்த வேலையும் இல்லாமல் வெட்டியாக சுற்றித் திரிவதே முரளியின் முழு நேரப் பணி. சில வேளைகளில் நண்பர்கள் அளிக்கும் உற்சாக விருந்தில் கலந்து கொள்ளுவதும் உண்டு. கடந்த வாரத்தில் ஒரு நாள் வீட்டில் சமையல் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பதை அனுசுயா சுட்டிக் காட்டியபோது மெதுவாக வாய்த் தகராறு ஆரம்பித்தது.

முதலில் வாய்த் தகராறாக ஆரம்பித்த அந்த சச்சரவு, சில மணித் துளிகளில் சண்டையாக மாறியது. இறுதியில் கை கலப்பில் முடிந்தது. வீட்டில் இருந்த சில பாத்திரங்களுக்கும் அன்றைய தினம் போதாத வேளையாக அமைந்தது. இந்த சந்தர்ப்பத்தின்போது, அனுசுயாவுக்கு சரமாரியாக அடி விழுந்துள்ளது.

காதலித்து திருமணம் செய்தவர்கள் என்பதால் முரளியின் பெற்றோர் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. புகுந்த வீட்டில் எந்த ஆதரவும் இல்லாமல் தான் அனுசுயா இருந்தாள். அதன் காரணமாக, அண்ணன் வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள். விசும்பலுக்கிடையே தொடங்கிய இந்த சம்பவத்தை அனுசுயா விவரித்து முடிக்கும்போது, கண்ணீரும் கம்பலையுமாக காணப்பட்டாள்.

கண்ணீரும் சோகமும் கலந்ததாக இரவு கழிந்தது. ரவியின் வீட்டுக்கு அது புதியதல்ல, அனுசுயா திருமணத்துக்கு பிறகு, அது சாதாரணமாகி விட்டது. பொழுது விடிந்ததும் முதல் வேலையாக முரளியை தேடி ரவி புறப்பட்டான். நல்ல வேளையாக வீட்டில் இருந்தான். காலை நேரம் அல்லவா?

வழக்கமான சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு, முரளியுடன் சமாதானம் பேசத் தொடங்கினான், ரவி. முதலில், மாப்பிள்ளை முறுக்கு காட்டினாலும் இறுதியில் அடக்கமாகவே முரளி பேசினான். இதுவும் வழக்கமாக நடைபெறுவது தான். வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் முரளிக்கு ரவியை விட்டால் ஆளில்லை.

ஒரு வழியாக மைத்துனனை ரவி சமாளித்து விட்டான். தன்னுடனேயே முரளியை அழைத்து வந்தான். ரவியுடன் வீட்டுக்குள் நுழைந்த முரளியை பார்த்ததும் அனுசுயா முகத்தை திருப்பிக் கொண்டாள். தற்போது, இரண்டாவது சமாதானப்படலம் ஆரம்பித்தது.

ஒரு வழியாக அனைத்தும் சுமூகமாக முடிந்து தங்கையையும், மைத்துனரையும் வழி அனுப்பி வைப்பதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு பஸ் நிலையத்துக்கு ரவி வந்தான். மூவரிடையே நிலவும் ஒரு விதமான இறுக்கத்தை பிரதிபலிப்பதை போலவே, வானமும் இறுக்கமாக மூடிக் கொண்டு இருந்தது.

இறுக்கத்தை சிறிது தளர்த்துவது போல, ‘மாப்ளே! தங்கச்சி சின்ன பொண்ணு. அவள நீங்க கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க. ஆத்திரப்படும்படி நடந்தா கூட கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க. உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன்’’ என ரவி பேசினான்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் சண்டையின்போது, தன்னை கன்னத்தில் அறைந்ததோடு இடுப்பிலும் எட்டி மிதித்ததாக அனுசுயா கூறியது ரவி மனதில் நிழலாடியது.

அப்படியே, அனுசுயா பக்கம் திரும்பி, ‘‘மாப்பிள்ளையின் மனம் கோணாமல் நடந்து கொள்ளம்மா, மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்களையும் அனுசரித்துச் செல். எதிர் வாதம் பேசாமல் கொஞ்சம் அமைதியாகவே இரும்மா’’ என அறிவுரை கூறினான்.

ஆனால், மைத்துனன் முகத்தில் வீறாப்பும், மிடுக்கும் நிரவி இருந்தது. பேசிக் கொண்டே, மைத்துனனிடம் சில ரூபாய் நோட்டுகளை ரவி நீட்டியபடி, ‘மாப்ளே, பஸ் செலவுக்கு வச்சுக்கோங்க’ என்றான்.

’வேண்டாம், மச்சான்’ என வாய் கூறிய அதே நேரத்திலும் மிடுக்கு குறையவில்லை. எனினும், சட்டைப் பையில் ரூபாய் நோட்டுகளை ரவி திணித்தான். அந்த சமயத்தில் பஸ் வந்தது.

அனுசுயாவும், மைத்துனரும் ஏறியதும் பஸ் புறப்பட்டது. பஸ் பின்னாலேயே சிறிது தொலைவு ஓடிய ரவி, ’மாப்ளே, தங்கச்சிய பத்திரமா பாத்துக்குங்க, எதாவது பேசினா அவள மன்னிச்சிடுங்க’ ‘தங்கச்சி. பாத்து நடத்துக்கம்மா’

இப்படி கூறியபடியே சென்ற ரவியின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு இருந்தது. எந்த கணத்திலும் கன்னத்தில் கோடு போட தயாரானது. அப்போது, இறுகிக் கிடந்த வானத்தின் எங்கோ ஒரு மூலையில் பலத்த சப்தத்துடன் இடி இடித்தது. கூடவே, வானில் இருந்து மழைச் சாரல்கள் சீறி வந்தன.

ரவியின் கன்னத்தில் வடியத் தொடங்கிய கண்ணிர், மழை நீரில் கரைந்து போனது. அண்ணன்களின் துயரத்தில் வானமும் பங்கு கொள்கிறதோ?

No comments: