Friday 22 May 2015

ஆரஞ்சு மிட்டாயும் ... ரிசல்ட்டும்

பிளஸ் 2 ரிசல்ட், எஸ்எஸ்எல்சி ரிசல்ட், காலேஜ் அட்மிஷன், பள்ளிக் கூட அட்மிஷன். இப்படியாக ஆரவாரம் தொடங்கியாச்சு. கடந்த வாரத்துல ஒருநாள் பிளஸ் 2 ரிசல்ட் வந்த அன்னிக்கு காலையிலேயே அடுத்த தெருவுல இருக்குற ஒரு பொண்ணு எங்க வீட்டுக்கு வந்திருந்தாள்.

‘அங்கிள், ஆண்ட்டி, நான் பிளஸ் 2 பாஸாயிட்டேன். 1162 மார்க். கட் ஆப் 186 வருது’ இப்படி உற்சாகமாக சொல்லிக்கிட்டே பெரிய சாக்லெட் ஒண்ணு கொடுத்தாள்.

அவளை வாழ்த்தி அனுப்பிவிட்டு சாக்லெட்டை பிய்த்து வாயில் போட்டதும், அது கரையத் தொடங்கியது. அப்போ, அந்த பொண்ணு சொல்லிட்டு போன வார்த்தைகளோட 25 ஆண்டுக்கு முன்னால நான், என்னோட பத்தாங் கிளாஸ் பரீட்சை ரிசல்ட்ட பார்க்க அலைஞ்சு திரிஞ்ச நெனப்பு மெதுவா எட்டிப்பார்த்துச்சு.

அப்போல்லாம், விஞ்ஞானம் இந்த அளவுக்கு வளரலை. பரீட்ச நம்பரை தட்டுனதும் இண்டெர் நெட்டில், மொபைல் போனில மார்க்க முழுசா பாக்குற வசதில்லாம் கிடையாது. ஏன்னா, இண்டெர் நெட், மொபைல் எல்லாம் அப்போ ஏது?

காலையில் அரசாங்கம் வெளியிடுற ரிசல்ட்ட பிரிண்ட் பண்ணி சாயந்தரம் வரும் மாலைமுரசு பேப்பருக்காக எல்லாரும் காத்து கிடப்போம். அதுவும், திருநெல்வேலில பிரிண்டாகுற அந்த பேப்பர், அங்கேயே பெரும்பாலும் வித்து தீர்ந்துடும்.

அங்கிருந்து தென்காசிய பாக்க ஒரு சில பேப்பர் தப்பி வருவது உண்டு. அதை ஆலங்குளத்துல வழியிலேயே சிலர் மடக்கிப் பிடிப்பாங்க. அதுக்காக, ஆலங்குளத்த சுற்றி இருக்கும் பல கிராமங்கள்ல இருந்து கொரங்கு பெடல் போட்டு ஆலங்குளத்துக்கு பையங்க எல்லாம் வந்து நிப்பாங்க. என்னோட, பத்தாவது பரிட்ச ரிசல்ட்ட பாக்குறதுக்கும் அப்படித்தான் போய் நின்னேன்.

அன்னிக்கு திருநெல்வேலில இருந்து தப்பிப் பிழைத்து ஆலங்குளத்துக்கு மாலைமுரசு பேப்பர் வந்த நேரம் என்ன தெரியுமா? நைட் 7 மணி. அதுல ஒரு பேப்பர அப்படியே அமுக்கிக்கிட்டு போய் சேக்காளிங்களோட (நண்பர்கள்) சேர்ந்து கிட்டு ஊருக்குள்ள ஒரு டீக்கடைக்கு போய் அந்த பேப்பர விரிச்சு பார்த்தோம்.

ஒவ்வொரு நம்பராக தேடித் தேடி பார்த்து யாருல்லாம் பாஸ், யாருல்லாம் பெயில் அப்படின்னு பார்க்கிறதோட எங்க கூட வராத சேக்காளிங்க வீட்டுக்கு நேரா போயி பரிட்ச ரிசல்ட்ட சொல்லுவது உண்டு. அதுவும், ஒண்ணா படிக்கிற பொம்பள புள்ளைங்க வீட்டுக்கு போய் ரிசல்ட்ட சொல்லுறதுக்கு சேக்காளிங்களுக்குள்ள பெரிய அடிதடியே நடக்கும்.

அப்போல்லாம், பேப்பருல ரிசல்ட்ட பாக்கிறதே தனி கலை. ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியா ரிசல்ட்ட பிரிண்ட் பண்ணி இருப்பாங்க. பேப்பருல ஒரு பக்கத்தில ஆரம்பத்துல மட்டும் முழுசா நம்பர் இருக்கும். அதுக்குப் பிறகு, கடைசி 3 நம்பர மட்டும் வரிசையா பிரிண்ட் பண்ணி இருப்பாங்க. அதனால், நம்மோட பரீட்ச நம்பரோட முதல் பகுதி முழுசா எந்த பக்கத்துல இருக்குன்னு முதல்ல கண்டு புடிக்கணும். அப்புறமா, அதுல இருந்து நூல் பிடிச்சு போயி நம்ம நம்பர் எங்க இருக்குன்னு பார்க்கணும்.

நம்மோட கடைசி மூன்று லக்க நம்பர் இருந்தா பாஸ். இல்லாட்டா.... அவ்ளோதான். இப்பிடி பரிட்ச எழுதுன நம்பர மட்டும் பேப்பருல பாக்குறதுக்குள்ள அன்னைக்கு முழுசும் மனசுக்குள்ள ஓடுற பதற்றம், பயம் இதெல்லாம் இருக்கே... அப்பப்பா.... அத விவரிக்கவே முடியாது.

கொஞ்சம் அரகொற மாணவனா இருந்தா அவ்ளோதான். அவன அன்னிக்கு யார் பார்த்தாலும் அவன இளக்காரமா பாக்குறது மாதிரியே அவனுக்கு தெரியும். இதனாலேயே, ஒரு சில அரகொறைங்க ரிசல்ட்ட பாக்காமலேயே தற்கொலைக்கு போயிருவாங்க. அதுல சிலர், வாழ்க்கைல தோத்த பிறகு, பேப்பர் ரிசல்ட்டுல பாஸாகி இருப்பாங்க.

இவ்ளோ கலாட்டாவுக்கு நடுவுல ரிசல்ட்ட பார்த்து முடிக்கும்போது அன்னிக்கு நைட்டாயிரும். மறுநாள் தான் பாஸான விஷயத்தை அக்கம்பக்கம், சொந்தக்காரங்க அப்படின்னு ஒவ்வொருத்தர் கிட்டயும் சொல்ல முடியும். அதனால, மறுநாள் காலங்காத்தால எழுந்திருச்சி அண்ணாச்சி கடை எப்போ திறக்குமுன்னு பார்த்து 5 பைசா ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட் வாங்கி ஒவ்வொருத்தருக்கா கொடுப்போம்.

இந்த கூத்துங்க எல்லாம் முடியறதுக்கு முழுசா ரெண்டு நாளாயிரும். அதுக்கு பிறகு, எந்தெந்த பாடத்துல எத்தன மார்க்குன்னு பாக்கணுமே? அதுக்கு மூணு, நாலு நாளாகும். பள்ளிக்கூடத்துக்கே நேரடியா மார்க் லிஸ்ட்ட அனுப்பி வச்சிருவாங்க. அங்க போயிதான் மார்க்க பாக்க முடியும்.

பள்ளிக் கூடத்துல அரகொறைக்கு என்ன மதிப்பு இருக்கும்? அங்க நல்லா படிக்கிற டாப் டென் பையங்க மார்க்க மட்டுந்தான் மொதல்ல காட்டுவாங்க.  அப்புறம் பொறுமையா இருந்து என்ன மாதிரி கொஞ்சம் சுமார், சுமார், பேக் பெஞ்சு மாணவங்க ரிசல்ட்ட எல்லாம் பாக்குறதுக்கு ஒரு வாரம் வரை ஆயிடும்.

இப்படித்தான், 25 ஆண்டுக்கு முன்னால என்னோட பள்ளிக்கூட ரிசல்ட்ட திருவிழா மாதிரி ஒரு வாரம் கொண்டாடுன நெனப்பு முழுசும் என்னோட அடி நாக்குல இப்பவும் இனிச்சு கெடக்கு, அப்போ நான் ஒவ்வொருத்தருக்கும் கொடுத்த ஆரஞ்சு மிட்டாய் மாதிரியே.

ஆனா, இன்னிக்கு.....? அந்தப் பொண்ணு குடுத்த சாக்லேட் மாதிரியே ரிசல்ட்டு கொண்டாட்டமும் அரை நாளுக்குள்ள கரைஞ்சு போயிருது.

= வை.ரவீந்திரன் 


No comments: