Tuesday 26 May 2015

குறள் கூறும் துறவறம்




உலகம் உருண்டு கொண்டிருப்பது, ஆசை என்ற இரண்டு எழுத்தில் தான். நடந்து செல்வோருக்கு சைக்கிள் வாங்க ஆசை. சைக்கிளில் செல்வோருக்கு பைக் வாங்க ஆசை. பைக் வைத்திருப்பவருக்கு கார் வாங்க ஆசை. சாலையிலேயே எத்தனை நாள் பயணிப்பது?. விமானம் ஏறி வானில் பறக்க வேண்டும் என்பதும் உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் ஆசைகளுள் ஒன்று. இது தவிர பணம், பதவி, பொன், பொருள் என ஆசையின் பட்டியல் நூறு வகைகளை தாண்டும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஆசைக்கு கடிவாளமிடுவது கடினம்.

ஆனால், ஆசை என்பது அதிகமாகி பேராசை என்னும் சேற்றுக்குள் சிக்கும் போது தான் புதைகுழி நோக்கி வாழ்க்கை செல்ல துவங்கும். இதைத்தான், ஆசையே அனைத்து துன்பத்துக்கும் காரணம் என புத்தர் கூறினார். அவர், சுக போகங்களில் திளைக்கும் அரச வாழ்வை துறந்து துறவறம் மேற்கொண்டு இந்த பேருண்மையை கண்டுபிடித்த அனுபவசாலி. அவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆசையை விட்டொழிக்க வலியுறுத்திய சமூக விஞ்ஞானி, திருவள்ளுவர்.

உலகில் இன்பம், துன்பம் இரண்டும் கலந்து இருக்கிறது. எந்த ஒரு பொருளை வேண்டாம் என நாம் ஒதுக்குகிறோமா, அந்த பொருளால் வரும் துன்பம் குறைகிறது. இதையே, துறவு என்ற அதிகாரத்தில்

 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்  = என திருவள்ளுவர் கூறி வைத்துள்ளார்.

எதுவுமே சாப்பிட கிடைக்காத போது சாப்பிடாமல் இருப்பது விரதம் அல்ல. அதற்கு பெயர் பட்டினி. அனைத்துமே இருந்து மனதையும் நாவையும் அடக்குவதே சிறப்பு. துறவறத்துக்கும்
இது பொருந்தும் என்பதை, வேண்டின் உண்டாக துறக்க.... என்ற குறளில் வலியுறுத்துகிறார்.

துன்பத்துக்கு காரணமாக அமையும் ஆசையூட்டும் பொருட்களை துறப்பது என ஒருவர் முடிவு செய்து விட்டார் என வைத்துக் கொள்வோம். அதன் பிறகு, தன் பொருள் மற்றும் பிறர் பொருள் என பாகுபாடு பார்க்க கூடாது. மற்றவர் பொருளை தனதாக்கி உரிமை கொண்டாடுவதும் கூடாது. அப்படி கொண்டாடாமல் இருந்தால் அவர்களின் சிறப்பானது, வானில் உள்ள தேவதைகளுக்கும் மேலாக இருக்கும் என்பதை,

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்  =  என கூறியுள்ளார், தெய்வப் புலவர்.

சரி. எல்லோரும் துறவியாகி விட முடியுமா? முடியாது. எப்படி இருந்தால் துறவியாகலாம்? இந்த உலகில் துறவறம் பூணுவதற்கு எதை கைவிட வேண்டும்? இந்த கேள்விகளுக்கும் தன்னுடைய குறளிலேயே விடையளிக்கிறார். அதாவது, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் அடக்கி ஆள தெரிய வேண்டும், என கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

திருவள்ளுவர் கூறிய துறவற நெறியில் தான் புத்தர், பட்டினத்தார், மாணிக்க வாசகர், அப்பர் போன்ற மகான்கள் வாழ்ந்தனர். இந்த உடல் கூட எனக்கு சொந்தமானது அல்ல. நான் என்று கூறுகிறோமே, அந்தநான்என்பது யார்? என கேள்வி கேட்டு முற்றும் துறந்த மோன நிலையை அடைந்தவர், ரமண மகரிஷி. இப்படி ஏராளமான துறவிகளுடைய வாழ்க்கை முழுவதும் வள்ளுவர் காட்டிய துறவற நெறியே மேலோங்கி நிற்கிறது.

இறைமகன் இயேசுபிரான், தனது சீடர்களை பார்த்து, ‘அனைத்தையும் விட்டு பின்னே வாருங்கள். ஆடை, உணவு கவலை கூட உங்களுக்கு வேண்டாம். குருவிக்கு ஊட்டி, அல்லிக்கு ஆடை அணிவித்து காப்பாற்றுபவன், உங்களையும் கூட காப்பாற்றுவான்என கூறுகிறார். இயேசு கூறிய இந்த கருத்தை,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு = என அறநெறியாக அய்யன் வள்ளுவர் அறிவிக்கிறார்.

அது சரி. துறவறம் என்றாலே உலக வாழ்வியல் இன்பங்களை துறப்பது மட்டும் தானா. இறைவனை அடைய துறவிகளாகவே சென்று விட வேண்டுமா? இல்லை. இல்லற வாழ்விலும் கூட ஆசை, கோபம், பொறாமை போன்றவற்றை துறந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்கும். அதுவும் ஒருவகையான துறவற வாழ்வு தான். மிகச் சிறந்த தவ வாழ்வு தான்.

அய்ந்தறிவு படைத்த பயிர் வாடினால் கூட வாட்டம் கண்ட வள்ளலார் அவதரித்த மண் இது. எனவே, துறவறம் என்பதை முற்றும் துறந்த ஞானி என்றோ பட்டினத்தார் போன்று உலகை மறந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றோ கருதுவது கூடாது. அப்படி ஒரு எண்ணம் தோன்றி விடக் கூடாது என்பதாலேயே துறவறம் கூறிய வள்ளுவ பெருந்தகை, இல்லற வாழ்வை கூட நல்லற வாழ்க்கையாகவும் துறவறத்துக்கு நிகரான வாழ்க்கையாகவும் மாற்றிக் காட்டி இனிமையாக வாழ முடியும் என்கிறார்.

வள்ளுவர் காட்டிய வழி நடப்போம். வாழ்வை இனிமையாக்குவோம்.

= வை.ரவீந்திரன் 

No comments: